Monday, October 24, 2011

தீபாவளி எண்ணெய்க் குளியல்(படித்ததில் பிடித்தது)

தீபாவளிக் கொண்டாட்டத்தில் முதல் நிகழ்வு... 'கங்கா ஸ்நானம்’ எனப்படுகிற எண்ணெய்க் குளியல்.திருநாள் அன்று இருள் பிரியாத அதிகாலை, உடம்பு எல்லாம் எண்ணெய் வழிய, சிகைக்காய்த் தூள் வாசத்துடன், வெந்நீர்க் குளியல் போடும் சுகமே சுகம்! இது சம்பிரதாயமாக பின்பற்றப்பட்டு வந்தாலும், இதில் புதைந்திருக்கும் மருத்துவக் காரணங்கள் ஏராளம். அதிகாலை குளியல் என்பது உடம்புக்கு மிகவும் நல்லது. காலை 4 மணிக்கு வெதுவெதுப்பான நீரில் குளிப்பதனால் சளித் தொந்தரவுகளோ, வேறு எந்த பிரச்னைகளோ வராது. அந்த நேரத்தில்தான் சுத்தமான ஆக்ஸிஜன் கிடைக்கும். மூச்சு சம்பந்தமான பிரச்னைகளும் வராமலிருக்கும்.
முதல்நாள் இரவே தண்ணீரில் ஆல், அரசு, அத்தி, மற்றும் மாவிலைகளைப் போட்டு வைத்திருந்து, காலையில் அவற்றை அகற்றிவிட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து, பொறுக்கிற சூட்டில் வெந்நீர் தயாராகும். அதேபோல், தேய்த்துக் கொள்ளும் நல்லெண்ணையைத் தயார் செய்வதிலும் தனிக்கவனம் உண்டு. இஞ்சித் துண்டு, பூண்டுப் பற்கள், மிளகு, விரலிமஞ்சள், சீரகம் சேர்த்து நன்றாகக் காய்ச்சி ஆறியதும், வீட்டின் மூத்தவர்கள் கையால், எல்லார் தலையிலும் சில சொட்டுகள் வைத்துத் தொடங்கிவைக்க, எண்ணெய் குளியல் உற்சவம் இனிதே ஆரம்பிக்கும்!

Wednesday, October 19, 2011

கேட்க நினைத்தவை



1. பிரசவ வலி ஆரம்பித்த நேரம் . காலையில் எழுப்புகிறேன்

    ஏங்க ! எந்திரிங்க , இன்னிக்கு ஆஸ்பத்திரிக்கு போகணும். எனக்கு வலி     ஆரம்பிச்சிருச்சு
மெல்ல எழுந்து உட்கார்ந்து ....."எங்க அப்பாகிட்டே சொன்னியா ..........."
(ஏங்க உங்க அப்பா வந்து பிரசவம் பார்ப்பாரா எனக்கு )- பின்னே பக்கத்துலே இருக்கிற ஆஸ்பத்திரிக்கு போக 50 மைல் தள்ளி இருக்கிற அப்பாவை ஏன் அழைக்க வேண்டும்?

2. பிரசவம் முடிந்து மயக்கம் தெளிகிறேன்
எல்லாரும் என் குழந்தையை பார்த்து ஏதோ சொல்லி கொண்டிருக்கிறார்கள்...
என் மாமியார் தான் "என் (மகள் வயிற்று பெண் )பேத்தியின் நிறம் இவன் வரமாட்டான் போலிருக்கே "
என்னங்கடா உங்க லாஜிக்கு ....அவளுக்கு பிறந்தா அவளை மாதிரி நிறம் இருக்கும்.. இவன் எனக்கு தானே பிறந்திருக்கிறான் ... அப்புறம் எப்படி தான் சிவப்பா பிறப்பான்... அப்படியே இவங்க மகன் சந்தன நிறம் ...இப்போ
பேரனுக்காக வருத்தபடுறாங்க  ...போயி பொழப்ப பாருங்கடா...
ஏன்டா இப்போ பிறந்த பையனை சுத்தி நின்னு ஏதேதோ  பேசி கடுப்பு ஏத்துரிங்க "
3. அடிக்கடி தொட்டிலில் தூங்குகிற குழந்தையை பார்த்து ..
"எப்படி இருந்தாலும் காது நிறம் தான் வருவான் ...
கொஞ்சம் கருப்பாதான்  போயிட்டான்" என்று பெருமூச்சு விடுபவர்களை பார்த்து ..
"கறுப்பா இருந்தா  தப்பில்லைங்க பொறுப்பா இல்லேன்னா தான் தப்பு"

4. "நீங்க ஏதும் உங்க பையனுக்கு வாங்கிட்டு வரலையா"....?
"இப்போ வாங்கி கொடுத்தா அவனுக்கு என்ன தெரிய போகுது ?"
யோவ் உங்க நோக்கம் தான் என்ன ? அவன் வேடிக்கை பார்க்கிற மாதிரி ஒரு விளையாட்டு பொருள் ஏதும் வாங்கி தருவதா ? இல்லே வாங்கி தந்தது என்ன பொருள்னு அவனுக்கு தெரியறதா ?

5."ஏங்க நம்ம பையனை பாருங்க  . அவனை உங்க கையிலே எடுத்துகோங்க ..."
"சாரி , எனக்கு இதுக்கு முன்னாடி பிறந்த குழந்தையை எடுத்து பழக்கம் இல்லே...வேணுமினா ஒரு மூணு மாசம் கழிச்சு தூக்கிக்கிறேன் "

(ஆமா நாங்க எல்லாம் என்ன மாச கணக்கா ட்ரெயினிங் எடுத்துட்டா வந்தோம்
ஆபரேஷன் முடிஞ்சு மயக்கம் தெளிஞ்ச உடனே எடுத்து கையிலே கொடுத்துறாங்க.நாம சொல்ல முடியுமா... சாரி நர்சம்மா எனக்கு தூக்கி பழக்கம் இல்லே கொஞ்ச நாள் போகட்டுமின்னு  )

Wednesday, July 6, 2011

எனக்கொரு சந்தேகம்


என்னருமை மகனே ,
உனக்கு ....
அத்தையை போல நெற்றி
தாத்தாவை போல சிரிப்பு
பாட்டியை போல கண்கள் 
அப்பாவை போல முகம் ,குணம் ,உடலமைப்பு 

இப்படி தான் உன் அப்பா பூரித்து  கொண்டிருக்கிறார் 
எனக்கொரு சந்தேகம் ?
உனக்கு உயிர்,உணவு கொடுத்து 
எத்தனையோ துன்பங்களோடு
ஐயிரண்டு திங்கள் சுமந்து 
உன்னை பெற்றவள் நான் 
என் அங்கலட்சணம் ஒன்று  கூட உனக்கில்லையா ???

Wednesday, December 15, 2010

நான் யாரென்று தெரியாமலே !!

என் சின்ன சின்ன ஆசைகள் என்னவென்று கேள் ?
எப்போதாவது நிறைவேற்று ...!!!!
நான் யாரென்று தெரியாமலே 
என்னோடு வாழ்ந்து மடிந்து விடாதே 

நான் நானாக இருக்கிறேன்
எனக்காய் தோன்றினால் அன்பு செய்வேன் 
அல்லால் அமைதியாய் இருப்பேன் என்கிறாய் 

நானும் நானாக இருந்துவிடட்டுமா 
நீ தாங்குவாயா???


என்னால் முடிகிறதோ ,முடியவில்லையோ 
எனக்காக நீ செய்கிறாயோ ,இல்லையோ  
உனக்கான கடமையை நிறுத்தியதே இல்லை

உனக்கு பிடித்தது போல் செய்கிற சமையல் விட்டு 
எனக்கு பிடித்ததை 
ஒரு முறை கூட நான் சமைத்ததில்லை

நானாக இருப்பது என்னவென்று உனக்கு தெரியுமா?

அவசியம் இல்லாமல்
உன் கட்டளையை ,கருத்தை  நான் மறுத்ததில்லை 
அவசியங்கள் இருந்தும் 
உன்னை கட்டாயப்படுத்தியதில்லை 

உனக்கு முன்னால் 
நான் நானாக இருக்க 
அறிந்தோ அறியாமலோ 
ஒரு நிமிடமும் னுமதிக்க பட்டதே இல்லை  
அதையாவது தெரிந்து கொள் ! !

பொய்களை மன்னித்து கொண்டிருக்கிறேன் 
போலியான சமாதானங்களை ஏற்று கொண்டிருக்கிறேன் 

உன்னால் செய்ய முடிந்தும் 
என் மீது சுமத்தபடுகிற 
உனக்கான பொறுப்புகளை 
எந்த கேள்வியும் இல்லாமல்  ஏற்று கொண்டிருக்கிறேன் 

உன்னை சேர்ந்தவர்களின் வார்த்தைகள் 
உனக்கு கிண்டலாய் ..
எனக்கு மட்டும் வேதனையாய் 
எத்தனை விமர்சனங்கள் ,அவமானங்கள் ?
யாரையும் எதிர்த்து கேள்விகள் கேட்டதில்லை
என் மன போராட்டங்களை மீறி 
உன்னிடமும் புகார்கள் சொன்னதில்லை எப்போதும் 
எனக்காக பரிந்து பேசவும் உன்னை அழைத்ததில்லை 

உன் கண நேர புன்னகைக்காக -காத்திருந்து 
நான் பணிவிடை செய்வது உனக்கு பிடிக்கையில் 
தேர்தல் நேரத்து அரசியல்வாதியாய்-எனக்கு 
தேறுதல் சொல்ல கூட 
உனக்கு நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது 

எனக்கு என்ன வேண்டுமென்று கேட்காத
உன் அலட்சியத்தை
எல்லாவிதத்திலுமாய்  பொறுத்து கொண்டிருக்கிறேன் 

கால் இல்லாத நாற்காலியில் கூட 
ஆளிருக்கிற தெம்பில் ஆடி கொண்டிருக்கிறாய் 
பல நேரங்களில் -உனக்கும் பிறரின் நடிப்பு பிடித்திருக்கிறது
பொய்யான புகழ்ச்சி ரசிக்கிறாய் 
நாயகனாய் நீ கொண்டாடப்படும் நாடகங்கள் பிடித்திருக்கிறது
உண்மை மட்டுமே முகம் சுளிக்க வைக்கிறது 

பசிக்கும் ,ருசிக்கும் ,பணிவிடைக்கும் 
மனைவியை அழைத்த மகோன்னதம் போதும் 
முகத்தை பார்க்காமலே கூடி 
குழந்தையும் பெற்று ,
தலைமுறை வளர்த்த தனிபெருமை போதும் 

காதலையும் ஒரு கடமையென செய்ய
போதிக்க வேண்டி இருக்கிறது 

மாற்றத்தை வேண்டி எழுதவில்லை நான் 
எந்த துன்பமும் எளிதில் பழகி விடுகிறது எனக்கு 
வருடங்கள் கழிந்தும் 
உன் வாழ்வில் பாதி நானென்பதை தெரியாமலே 
என்னோடு இருந்து ...மடிந்து விடாதே !!

Thursday, December 9, 2010

பொறுப்பு




இப்போதெல்லாம் வேலைக்கு போயி சம்பாரிக்கிற படித்த அறிவாளிகள் சிலர் பெருமையாக சொல்லி கொள்கிற வார்த்தை .." எனக்கு எதுவும் தெரியாது . என் செலவுக்கான பணத்தை எடுத்து கொண்டு ,மீதி சம்பளத்தை என் அப்பாவிடம் ,அல்லது என் கணவரிடம் கொடுத்து விடுவேன் . எங்கே முதலீடு செய்ய வேண்டுமோ அவர்கள் பார்த்து கொள்வார்கள் . நம் நல்லது தானே அவர்களுக்கு முக்கியம் ,அதனால் அவர்கள் இஷ்டத்துக்கு விட்டுவிட்டேன்" .
ரொம்ப சரி ,நம் நல்லதை தான் எல்லாரும் விரும்புகிறார்கள் .ஆனால் இதன் மூலம் நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து கொள்ளலாம் 
 இவர்களுக்கு இருப்பது பொறுப்பை தட்டி கழித்தல் மற்றும் தப்பிக்கும் மனப்பான்மை .

எங்கே எப்படி முதலீடு செய்வதென்று தெரியவில்லையா .சரி தேடி ,படித்து கற்று கொள்ளுங்கள் என்றால் ,எனக்கு நேரமே இல்லை ... இது அடுத்த புகார் .
நாம் சம்பாதிக்கும் பணத்தை யாரிடமும் கொடுக்க வேண்டாம் என்று இந்த பதிவில் நான் சொல்ல வில்லை. ஆனால் உங்கள் பணத்தின் சிறு பகுதியை ,உங்கள் முயற்சியை கொண்டு நல்ல வழியில் முதலீடு செய்ய நீங்கள் துணிய வேண்டும். 

Thursday, December 2, 2010

கோபம் ( கண்ணதாசன் வரிகள்-அர்த்தமுள்ள இந்து மதம்)

கோபம் 

சினம் என்பது சேர்ந்தாரையே கொல்லும் என்றார் வள்ளுவர் 

இராமாயணத்தில் முக்கியமான கட்டம் எங்கிருந்து தொடங்குகிறது ?
முதலில் சூர்பனகை மீது இலக்குவன் கொண்ட கோபம்.. அதனால் மூக்கிழந்த நின்ற தங்கையை பார்த்து இராவணன் கொண்ட கோபம் ...   

நம் கோபம் எதிராளியை மாற்றாது .அவனுக்கு நம்மிடத்தில் கோபத்தை உண்டாக்குவது தான் அதன் பலன்.
பெரும்பாலும் நம் கோபத்தை எதிராளி பொருட்படுத்துவதே கிடையாது . நாமே நம் மனசு,சரீரம் இரண்டின் நலத்தையும் கெடுத்து கொள்கிறோம் . 

எது நடக்க கூடாது என்பதற்காக நீ கோபப்படுகிறாயோ, நீ கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்திற்காக , அது நடந்தே விடுகிறது .. கோபம் முதற்கட்டத்தில் வென்றது போல தெரிந்தால் , நிரந்தரமாக தோல்வியடைய போகிறது என்று பொருள் .

எதையும் சாதிக்க விரும்பும் மனிதனுக்கு நிதானம் தான் அற்புதமான ஆயுதமே தவிர கோபம் அல்ல ..

Monday, October 18, 2010

அம்மாவின் அருமை

இந்தியா உலக மக்கள் தொகையில் இரண்டாவது நாடு . பிள்ளை பெறுவது ஒரு அன்றாட நிகழ்வு .
இங்கே மணமான தம்பதியர் எதிர் கொள்ளும் கேள்வி ? குழந்தை எப்போ ?
இதே கேள்விகளை நானும் மற்றவரிடம் கேட்டும் இருக்கிறேன். இந்த கேள்விக்கு நடுவே சிக்கியும் தவித்து இருக்கிறேன் .

சின்ன வயதில் நான் குறும்புகள் செய்து அம்மாவிடம் மாட்டும் போது அதிகபடியான ஆத்திரத்தில் அம்மா திட்டும் போது, இப்படி திட்டுவாள் "எங்கிருந்து தான் எனக்குனு நீ வந்து பிறந்தியோ ?"
"அட பாவி ரெண்டு பிள்ளை பெத்தியே.. அந்த ஆஸ்பதிரியிலவாது கேட்டு தெரிந்திருக்க கூடாது .. சரி சரி கவலை படாதே . எங்கிருந்து பிறந்ததுன்னு நான் பிள்ளை பெறும் போது தெரிந்து உனக்கு சொல்றேன்."...எளிதாய் வாயடைத்து விடுவேன் .

ஆனால் நிலைமை இப்போது மாறுகிறது ..தனியே ஒரு நாட்டுக்கு பயணிக்கும் போது இல்லாத பயம் , நள்ளிரவில் தனியாய் நடந்து போகையில் வராத  பயம் ...............
சமையலறை வாசனை காரணமாக எனக்கான உணவை சமைக்க முடியாமல் பசியில் தண்ணீரை குடிக்கும் போதெல்லாம்... தாய்மையின் ஆரம்ப கால அறிகுறிகள் கலங்கடிகின்றன. 

கோயில் இல்லாத ஊரில் மட்டுமல்ல , பெற்றவள் நமது அருகே இல்லாத ஊரிலும் பெண்களே நீங்கள்  குடியிருக்க வேண்டாம் ...என்று சொல்ல தோன்றுகிறது.

முதன்முதலாய் பள்ளிகூடத்தில் சேரும் போதும் நான் பெற்றவளை பிரிந்ததற்காய்  அழுததில்லை . படித்து முடித்து வேலைக்காக பெற்றவளை பிரிந்து  வேறு ஒரு ஊரில் வசிக்க நேர்ந்த  போதும் அதிகம்  அழுததில்லை  . என் திருமண நாள் அன்று என் பெற்றோரை பிரிந்ததற்காய் நான் அழுததை விட இதோ என் வயிற்றில் சின்னதாய் ஒரு உயிர் முளை விட்டதற்கான அடையாளத்தை மருத்துவர் வாழ்த்துகளோடு  சொல்லும் போது 
பெரிதாய் அழுகிறேன் " என்னால் முடியவில்லை ,என் பிள்ளைக்காகவாவது  என்னை என்  அம்மாவிடம் சேர்ப்பித்து விடுங்கள்".

ஆனால் ஒவ்வொரு பிரிவிலும் அம்மா அழுததுண்டு.அம்மாவை புரிந்து கொள்ளாத விளையாட்டு பிள்ளையாய் இருந்தேனோ என்று தோன்றுகிறது.

ஆண்பிள்ளைகள் தங்கள் வாழ்நாளில் அம்மாவை புரிந்து கொள்ள முடியாமல் கூட போகலாம் .ஆனால் பெண்பிள்ளைகள் அம்மாவை உடலியல் பூர்வமாய் ,உணர்வுபூர்வமாய்  புரிந்து கொள்ள பிள்ளை பெறுவதை போல ஒரு நல்ல சந்தர்ப்பம் இல்லை.