Thursday, October 8, 2009

அம்மாவின் இ(வ)சைமொழிகள்

தெரியாத ஊருக்கு வழியனுப்புகையிலும் , தோல்வி கண்டு கலங்கி நிற்கையிலும் சொல்கிற வார்தைகள்
அம்மா:திக்கத்தவனுக்கு தெய்வமே துணை
துணிஞ்சவனுக்கு துக்கமே இல்லை

என் கூட படிக்கிற நான்சி வீட்டுல இந்த வருசம் முழு பரீட்சை லீவுக்கு மெட்ராஸ் சுத்தி பார்க்க போறாங்களாம்.நாம எப்பம்மா அங்க எல்லாம் போவோம்..
அம்மா: ஊரை சுற்றி ரக்கிரி (கீரை) பொரிச்சு(பறித்து) உப்பில்லாமே வேகுதாம்.அங்கொரு மூளி கொப்பில்லேன்னு(காதுக்கு தோடு) அழுகறாளாம்

என் கூட தாயம் விளையாட வாம்மா.எப்போ பார்த்தாலும் வேலை தானே செஞ்சுகிட்டு இருக்கே....
அம்மா: கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் ,கிழவியை எடுத்து மனையில் வை என்றானாம்

கதை புத்தகம் படிக்க வேண்டாமென்று சொல்லியும் நான் பாட புத்தகத்துள் ஒளித்துவைத்து படித்து கொண்டிருந்தேன்.என்னை கண்டுபிடித்த பின் உதிர்த்தபொன்மொழிகள்
அம்மா:மூக்கிலயே புழுத்தவனுக்கு நாத்தமென்ன

அம்மா ..இங்கே பாரும்மா ,எங்கப்பா உங்கூட பேச கூடாதுன்னு சொல்லிட்டாரு.அதனால உங்கிட்ட இனிமே பேச மாட்டேன்னு இவன் சொல்றான் பாரும்மா....
அம்மா: தாவி தாவி வளர்த்தாலும் தங்கச்சி புள்ளை தான்,மோதி மோதி வளர்த்தாலும் மூத்தவடி புள்ளை தான்

நான் எதிர்த்து பேசினால் ,கோபமாய் கத்தினாலோ,
அம்மா:வீட்டுக்கு அடங்காதது எல்லாம் ஊருக்குள்ளே போய் செருப்படி தின்னா தான் அடங்கும்

பாத்திரம், மற்றும் கை கழுவுகையில் அதிகமாய் தண்ணீர் செலவு செய்தால்..
அம்மா:உப்புலே ஊதாரிய பார்க்கலாம் ,தண்ணியிலே தத்தாரிய பார்க்கலாம்

பரீட்சையில் மார்க் குறைந்து போனதாய் வருத்தபட்டால்
அம்மா:பொழுது கெளம்புகையில் புத்தி வந்தா புள்ளை பொழைக்கும் ,பொழுது சாய்கையில் புத்தி வந்து என்ன லாபம்

வண்டியில் சாவியே போடாமல் ஸ்டார்ட் செய்து கொண்டிருந்தால்..
அம்மா:எழுபது குசவனுக சேர்ந்து அறுபது தேங்காயை சுமந்தானுங்களாம்

ஒவராய் ஸீன் போட்டு கொண்டிருந்தால்
அம்மா:பிச்சைகாரனுக்கு ஒரு எருமையாம் ,அதை பிடிச்சு கட்ட ஏழு ஆளாம்

அதிகமாய் ஐஸ் வைத்தாலோ ,அதிகமாய் கொஞ்சினாலோ....
அம்மா: சோழியன் குடுமி சும்மா ஆடுமா
அம்மா: பிரியம் பொறுக்க முடியாமே புருஷனை அண்ணான்னு கூப்பிட்டாளாம்

கரண்ட் போன பின்னால் மெழுகுவர்த்தியை பத்த வைத்து விட்டு அருகிலே உட்கார்ந்து உருகி வழியும் மெழுகை தீக்குச்சியில் தோய்த்து நெருப்பில் காட்டி விளையாடியதை பார்த்து சொன்னது
அம்மா:பொழப்பத்த நாவிதன் பொண்டாட்டி தலையை சிரைத்தானாம்

புது பேனா வாங்கி வந்த அன்று மட்டும் வெகு நேரம் எழுதுவேன்.
அம்மா:புது வட்டலை(Plate) கண்டவன் எட்டு வட்ட தண்ணி குடிச்சானாம்

அலமாரியில் அம்மா வைத்து விட்டு போன 10 ரூபாயை காணவில்லை. வந்து பார்த்தவுடன் தேட முயற்சி செய்யாமல்...என்னை பார்த்து சொன்ன வார்த்தை
அம்மா:உள் ஆளில்லாமல் ஊர் அழியாது
எப்படி கண்டுபிடிச்சே என்று கேட்டதற்கு
அம்மா: முசல்(முயல்) புடிக்கிற நாயை மூஞ்சியை பாத்தா தெரியாதா

அம்மா நான் உனக்கு பாயாசம் பண்ணி தரேம்மா இன்னிக்கி
அம்மா:பொன்னி பொங்க வைப்பான்னு புள்ளையாரு உட்காந்திருக்கிராராம்

 எங்களுக்கு ஒரு அண்ணன் இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்
அம்மா: இல்லாதவனுக்கு ஒரே கவலை.இருக்கிறவனுக்கு ஆயிரம் கவலை 

மழை பெய்ஞ்சு ஆத்து நிறைய தண்ணி போகுதாம் ..கண்டிப்பா இன்னிக்கி பைப்புல தண்ணி நல்லா வருமக்கா. ஆனால் அன்று மட்டும் பைப்பில் தண்ணி கம்மியாய் வரும்
அம்மா:ஆத்து நிறைய தண்ணி போனாலும் நாய்க்கு சளப்ப தண்ணி தான் 

நான் வாய் ஒயாமல் நான் தொடர்ச்சியாய் பேசி கொண்டிருந்தால்
அம்மா:தோல் வாயாய் இருக்கிறதால தான் தொடுத்துக்கிட்டு இருக்கு,மண்ணு வாயாய் இருந்திருந்தா புட்டுகிட்டு போயிருக்கும்

வாங்கிய ஒரே மாதத்தில் செருப்பை பிய்த்து விட்டேன்...அதற்காக உதிர்த்த முத்துகள் இவை
அம்மா:இரும்பும் துரும்பாகும் ,இட்டேரியும் பாழாகும் 

கைக்கு எட்டுகிற தூரத்தில் ஒரு பொருளை வைத்து கொண்டு  எடுத்து தாங்க என்று எல்லாரையும் கெஞ்சி கொண்டிருந்தால்... அதற்கே இந்த பழமொழி...

அம்மா:நடக்க மாட்டாதவன் சித்தப்பன் வீட்டுல பொண்ணு கட்டினானாம்

விடுமுறைக்கு ஊருக்கு போகையில் எல்லாம் ... நான் இளைத்து விட்டதாய் சொல்லி அரை மணிக்கு ஒரு தரம் அப்பா ஏதேனும் சாப்பிட கொடுத்து அன்பு தொல்லை செய்து கொண்டிருப்பார்..அப்போது வருகிற பொன்மொழிகள்

அம்மா:கொள்ளாதவன் வாயில் கொழுக்கட்டையை திணிக்கிற மாதிரி 


நானும் நவீனும் சண்டை போட்டு கொண்டிருந்தால் அம்மா சொல்கிற வார்த்தை... சண்டை போடுகிற வீடு நிம்மதியை இழக்கும் என்பதற்காகவே    
அம்மா: ஓரியாடிய வீடு தூரியாடி போகும் 

4 comments:

Anonymous said...

Hi,

My first visit to your blog and got impressed. Because the same words I use to hear from my amma too....

Selvi....

Poonthendral said...

Thanks Selvi

Anonymous said...

Own experience with good creativity. Purusoth kannula thanniye vandhuruchu de... ammavukkum thaan..
we love this pazhamozhigalk...

Regards
Prema

SanSiv said...

ரொம்ப ரசிச்சு சிரிச்சேன் சுபத்ரா. ஏற்கனவே மெயில்ல படிச்சதுதான்.. இருந்தாலும் படிக்க படிக்க திகட்டலை இந்த பழமொழிகள்.. :-)