சமூகத்தின் எந்த நிலையில், எந்தப் பருவத்தில் இருந்தாலும் நித்தம் நாம் எதிர்கொள்ள வேண்டிய மைக்ரோ யுத்தம்... பொய்!
'நேத்து வீட்ல பவர் கட். அதான் அசைன்மென்ட் முடிக்கலை', 'ரெண்டு நாளா எனக்கு உடம்பு சரியில்லை. அதான் அந்த க்ளையன்ட்டைப் போய்ப் பார்க்க முடியலை', 'ஆபீஸ்ல ஆடிட்டிங். அதான், சாயங்காலம் சீக்கிரம் வர முடியலை!', 'நம்பும்மா, திடீர்னு அந்த சிடுசிடு புரொஃபசர் வந்து ஸ்பெஷல் கிளாஸ்னு சொல்லிட்டார். அதான் லேட்!', 'ஸாரி சார்... பேட்டரி டவுன். அதான் மொபைல் ஸ்விட்ச் ஆஃப் ஆயிடுச்சு!' ஒருநாளில் எத்தனை எத்தனை பொய்கள். ரகரகமாக, விதவிதமாக, வகை வகையாக, அழகழகாக... இந்தப் பொய்களைச் சமாளிப்பது எப்படி, அவை பொய்கள் என்று கண்டுபிடிப்பது எப்படி?
'இது என்ன கேள்வி. பொய் பேசும்போதே கண்டுபிடிக்க வேண்டியதுதானே!' என்கிறார் டேவிட்.ஜே.லீபர் மேன். இவர் எழுதிய Never be lied to again என்ற புத்தகம் ஐந்தே நிமிடங்களுக்குள் ஓர் உரையாடலின் உண்மைத்தன்மையைக் கண்டுபிடிப்பது எப்படி என்று எளிமையாகக் கற்றுக்கொடுக்கிறது. (கொஞ்சம் மாத்தி யோசித்தால், பொய் சொல்லும்போது நாம் எவ்வளவு உஷாராக இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ளலாம்!)
உடல் மொழி பொய் சொல்லாது!
ஒருவரது வார்த்தைகள்தான் பொய் சுமந்து வருமே தவிர, அவரது விரல்கள், தோள்பட்டை, கால்கள், கண்கள்போன்ற உறுப்புகள் எப்போதும் பொய் சொல்லாது. தங்களது உடல் மொழிக்குப் பொய் சொல்லத் தெரியாது என்பது, பாவம் பொய் சொல்பவர்கள் பலருக்குத் தெரியாது. எதிராளியின் உடல் மொழியைக் கணிக்கத் தெரிந்தால், அவரது வார்த்தைகளின் உள்ளார்ந்த அர்த்தத்தை உணர்ந்துகொள்ளலாம்!எக்ஸ்பிரஸ் எதிர்மறைப் பதிலா... உஷார்!
ஒரு கேள்விக்குப் பதிலாக வந்து விழும் வார்த்தைகளில் இருந்தே, அது உண்மையா, பொய்யா என்று கண்டுபிடித்துவிடலாம். 'ஆனந்த், நீ என்னை ஏமாற்றுகிறாயா?' என்று காதலி கேட்டதும், 'ச்சேச்சே, உன்னை நான் எப்போதும் ஏமாற்ற மாட்டேன்!' என்று அவசர அவசரமாக சொன்னால், உள்ளே ஏதோ உள்குத்து என்று அர்த்தம். ஒருவரை சந்தேகித்து நாம் ஏதேனும் கேள்வி கேட்கும்போது, நமது கேள்வியில் இருக்கும் வார்த்தைகளைக்கொண்டே உடனடியாகப் பதில் வந்தால், அதன் நம்பகத்தன்மை கேள்விக்குரியது. கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்... எந்தக் கேள்விக்கும் உடனடியாகப் பதில் அளிக்காவிட்டால், நமது நேர்மை சந்தேகத்துக்கு உள்ளாகும் என்பது நம் அனைவரின் மனதிலும் பதிந்து இருக்கும் பிம்பம். அதனால், நமது நேர்மை சோதிக்கப்படும்போது எல்லாம் உடனடியாகப் பதில் சொல்லத்தான் நாம் விரும்புவோம். அந்த சமயம் உண்மையை மறைக்க விரும்பினால், வேறு வார்த்தைகள் மனதில் தோன்றாமல், கேள்வியில் இருக்கும் வார்த்தைகளுக்கு முன்னரே 'இல்லை', 'அப்படியெல்லாம் கிடையாது' என்று எதிர்மறை அர்த்தத்தில் சொல்வோம். அந்த நெருக்கடித் தருணத்தில் பொருத்தமான பதில் சிக்காததால், உடனடிப் பதிலுக்குத் திண்டாடி கேள்வியையே எதிர்மறையாக மாற்றி சமாளிப்போம். எனவே, இனி உங்கள் கேள்விகளுக்கு எதிர்மறை எக்ஸ்பிரஸ் பதில்கள் வந்துவிழும்போது... அலர்ட்!பதில் இல்லா பதில்!
விமல் முன்பின் பார்த்திராத ஒரு பெண்ணுடன் போனில் கடலை போட்டுக்கொண்டு இருக்கிறான். 'அப்புறம் செல்லம் நீ அழகியா... பேரழகியா?' என்று கேட்கிறான். அதற்கு அந்தப் பெண், 'நான் தினமும் ஜிம்முக்குச் செல்வேன். எனக்கு ஏரோபிக்ஸ் தெரியும். பல ஆண் மாடல்கள் என்னை டேட்டிங் குக்குக் கூப்பிடுவார்கள்!' என்று அடுக்குகிறாள். ஊன்றிக் கவனி யுங்கள்.. 'நீ அழகியா?' என்ற கேள்விக்கு, 'ஆம்', 'இல்லை' என்று எந்த நேரிடை பதிலும் சொல்லாமல், 'அழகியாகத்தான் இருப்பாள்' என்று விமலை நம்பச் செய்யும் செய்திகளாக அடுக்குகிறாள். இதுதான் பதில் இல்லா பதில். இன்னோர் உதாரணம் பார்ப்போம்...வாட்டர்கேட் ஊழல் முதல்முறையாகக் கசிந்தபோது, ஹெலன் தாமஸ் என்ற நிருபருக்கும் அமெரிக்க அதிபர் நிக்ஸனின் செய்தித் தொடர்பாளரான ரொனால்டுக்கும் நிகழ்ந்த உரையாடல் இது...
தாமஸ்: "அதிபர் யாரையேனும் பதவி விலகச் சொல்லி, அதற்கு யாரேனும் தங்கள் ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்திருக்கிறார்களா?"
ரொனால்ட்: "நான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் திரு தாமஸ், வெள்ளை மாளிகையின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை!"
தாமஸ்: "ஆனால், என் கேள்வி அதுவல்ல. அதிபர் யாரையேனும் பதவி விலகச் சொல்லி இருக்கிறாரா?"
ரொனால்ட்: "கேள்வி எனக்குப் புரிகிறது. என்னை அதற்குப் பதில் சொல்ல அனுமதியுங்கள். நான் முன்னரே கூறியதுபோலத்தான் வெள்ளை மாளிகையின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இதுவரை எந்த ராஜினாமாக்களும் சமர்ப்பிக்கப்படவில்லை!"
'அதிபர் யாரையேனும் பதவி விலகச் சொல்லியிருக்கிறாரா?' என்ற கேள்விக்கு இறுதி வரை நேரிடையாகவோ, மறைமுகமாகவோ பதில் கிடைக்கவில்லை. ஆனால், பின்னர் வாட்டர்கேட் விவகாரத்தில் என்ன தில்லுமுல்லு நடந்தது என்பது உலகமே அறியும்.
அந்தப் பதிலில்லா பதில்களின் பின்னணி உணருங்கள்!
துணுக்கு :
சாம் போனில் அழைத்த போது நான் இந்த புத்தகத்தை படித்து கொண்டிருந்தேன் .
"என்னம்மா செய்யறே "?
"அடுத்தவங்க சொல்ற பொய்யை எப்படி கண்டுபிடிக்கிறதுன்னு படிச்சிட்டு இருக்கேன் சாம் "
"அது சரி ... செகண்ட் ஸ்டெப்-எ..."
"என்னடா சொல்றே அப்போ முதல் ஸ்டெப் என்ன?"
"நல்ல பொய் பேசி பழகிட்டே. இப்போ அடுத்தவங்க நம்மகிட்டே பொய் பேசறங்களான்னு கண்டுபிடிக்க தானே படிக்கறே "!!!!!!
ஆஹா கெளம்பிட்டாங்கய்யா கெளம்பிட்டாங்க
No comments:
Post a Comment