Sunday, March 11, 2012

ஈமு கோழி- Pasumai Vikatan


தயவு காட்டுங்க அய்யனாரய்யா!

சில வருஷத்துக்கு முன்ன இப்படித்தான் 'தேக்கு மரம் வளர்த்தா கோடீஸ்வரனாகலாம்’னு சொல்லி எங்காளுககிட்ட பணத்தை சுருட்டிட்டு போனாங்க. பிறகு, 'முயல் வளர்த்தா முதலாளியாகலாம்'னு ஒரு குரூப் சுத்தி, சுத்தி வந்து சம்சாரிகளை சாகடிச்சுச்சு. இப்ப கொஞ்சநாளா ஈமு கோழி வளர்க்க சொல்லி பாடாப் படுத்துறாய்ங்க.
தங்கம், வைரம் விக்கிற வியாபாரிககூட, ஈமு கோழி விக்கிறவங்ககிட்ட போட்டி போட முடியல. டி.வி., பேப்பர்னு விளம்பரத்தை வாரி இறைக்கறாங்க. ஒரு கம்பெனி... 'ஒரு லட்ச ரூபாய்க்கு கோழி வாங்குனா, மாசம் 6 ஆயிரம் தர்றோம்'னு சொல்லுது. இன்னொரு கம்பெனி... 'நீங்க கோழியை வாங்கிட்டுப் போயி வளர்க்க வேணாம். கோழிக்கான பணத்தை மட்டும் எங்ககிட்ட கொடுத்துட்டு போங்க. உங்களுக்கு பதிலா நாங்களே வளர்த்து வருமானத்தை மட்டும் மாசம், மாசம் அனுப்பி வெச்சுடறோம்’னு வலைவீசுது.
உற்பத்தியாகுற ஒரு பொருள், அழிஞ்சாத்தான அதன் தேவை இருக்கும். ஆனா, இந்த ஈமுக்கோழியை, எதுக்காக பயன்படுத்தப் போறாங்கனே தெரியல. ஈமு கோழிக்கான விற்பனை வாய்ப்பு எப்படி இருக்குதுனே தெரியல. ஆனாலும், குஞ்சுகளை விற்பனை பண்ணிக்கிட்டே இருக்காங்க. இப்படி வாங்கி வளர்க்க ஆரம்பிச்ச பலரும், ஒரு கட்டத்துக்கு மேல அதை வெச்சுக்கிட்டு என்ன செய்றதுனு தெரியாம, இன்னொரு ஆள்கிட்ட தள்ளிவிடறதுதான் பெரும்பாலும் நடக்குது.
கால்நடைப் பல்கலைக்கழகத்துல கேட்டா... 'இப்போதைக்கு இதைப் பத்தி எதுவும் சொல்ல முடியாது'னு கை விரிக்கறாங்க. ஆனா, 'ஈமு கோழியோட நகம், நரம்பு, நாக்கு, கால், தோல், கறி, முட்டை, குஞ்சு எல்லாமே லாபகரமான விலையில வித்துக்கிட்டிருக்கு'னு கதை கதையா அளக்கறாங்க ஈமு கம்பெனி வெச்சுருக்கவங்க.
கறியாவது ருசியா இருக்குதானு பார்த்தா... அதுவும் இல்லை. ரப்பர் உருண்டைய மெல்லுற மாதிரி வாயில சவுக்கு சவுக்குனு துள்ளுதுங்க அந்த கறி. மனுஷ பல்லு பத்தாது... இயந்திர பல்லு இருந்தாதான் வேலைக்கு ஆகும். உண்மையிலேயே, இந்த கம்பெனிக புளுகித் தள்ளுற மாதிரி, ருசி, மருத்துவ குணம் இருந்தா... பிராய்லர் கோழிகளைவிட பிரமாதமா எல்லா கடையிலயும்ல இந்த ஈமு கறி வியாபாரம் ஆகணும். அப்படி எதுவுமே இல்லை!
அத்தி பூத்த மாதிரி அவுக மட்டுமே அங்கொண்ணும், இங்கொண்ணுமா விளம்பரத்துக்காக, கல்லா கட்டுறதுக்காக கடையைத் தொறந்து வெச்சுருக்காங்க. மொத்தத்துல 'வொய் திஸ் கொலவெறி, கொலவெறி...' மாதிரி, 'வொய் திஸ் பணவெறி பணவெறி'னுதான் பாடத்தோணுது.
இப்படித்தான் ஊரு காசை வசூல் பண்ணி... தேக்கு மரம், பாக்கும் மரம்னு நட்டவன் எல்லாம், கடைசியில கோடி கோடியா சுருட்டிக்கிட்டு ஓடினானுங்க. வெறுமனே கேஸை மட்டும் போட்டுட்டு, அதிகாரிங்க... அரசியல்வாதிங்க எல்லாம் கமிஷன வாங்கி பாக்கெட்டுல போட்டுக்கிட்டு, அவனுங்கள வெளியில விட்டுட்டாங்க. எங்க ஆளுங்க காசுல சந்தோஷத்தை அனுபவிச்சுக்கிட்டு இருக்கானுங்க அந்த கேடிங்க. எங்க ஆளுகளோ இன்னிவரைக்கும் கண்ணை கசக்கிக்கிட்டு நிக்கறாங்க. அதே கதைதான் ஈமு கம்பெனிக்காரங்க ஓடின பிறகும் நடக்கும்கறதுல சந்தேகமே இல்ல!
'ஏமாத்துக்காரங்க சுத்துறாங்கப்பா... ஏமாந்துடாதீங்க’னு கரடியா கத்தினாலும்... வருமானத்துக்கு ஆசைப்படுற எங்காளுக கேக்குறதாயில்ல அரசாங்கத்துகிட்டேயும் சொல்லியாச்சு. அது கிணத்துல போட்ட கல்லாவே இருக்கு. அதனாலதான், எப்படியாவது இந்தப் பகல் கொள்ளைய நீங்க தடுத்து நிறுத்தணும்னு உங்க கால்ல விழறேன்!
இந்த அழிவிலிருந்து எங்க ஆளுங்கள காப்பாத்த உங்களால மட்டும்தான் முடியும்ங்கறதுல சந்தேகமே இல்லை. ஒண்ணு வேல் கம்பைக் கையில தூக்கிக்கிட்டு, அநியாயக்காரங்கள அடக்கி ஒடுக்குங்க. அது, உங்களாலயும் முடியாதுனா... 'இனிமே எனக்கு ஆடு, மாடு, கோழிகளை பலியிடாதீங்க. அது எனக்கு ஆகாது. இன்னியிலிருந்து ஈமு கோழியைத்தான் பலி கொடுக்கணும்'னு ஒரு போடு போடுங்க. சரசரனு ஈமு கோழி வியாபாரம் பிய்ச்சுக்கும். நாங்க ஏமாறாம பொழைச்சுக்குவோம்!

No comments: