பத்தாம் வகுப்பு படிக்கையிலே -
வசந்த்தின் அப்பா என்னை வழியில் பார்க்கிறார்.என் அப்பாவின் மேலதிகாரி என்கிற நினைப்பை விட அவர் என் உடன் படிக்கும் நண்பனின் அப்பா என்ற மரியாதையில் சைக்கிளை நிறுத்துகிறேன்.
"நல்ல இருக்கியா "
"நல்லா இருக்கேங்க"
"படிப்பு எப்டி போகுது "
"நல்லா போகுதுங்க"
"என்னமோ கேள்வி பட்டேன் ,கடைசி ரேங்க் தான் எடுக்கிறியாமுல்ல..இப்படி
எல்லாம் படிச்சா மேல படிக்கிறது கஷ்டம் "
சடாரென கோபம் வந்துவிட்டது. யார்?? அப்பா சொல்லி இருப்பாரோ.தினமும் காலையில் புலம்புபவர் தானே.இப்படி தான் ஆரம்பிப்பார்.
"பக்கத்துக்கு வீட்லயும் தானே புள்ளைக இருக்கு எல்லாம் 5 மணிக்கு எந்திரிச்சு படிக்குது ..நம்ம வீட்லயும் தான் ஒரு ராய் தாளு இருக்கு .காலையிலே 6 மணிக்கு சட்ட சபைக்கு போற முதல் மந்திரி மாதிரி எந்திரிச்சு டீயை குடிச்சுபுட்டு ,தினத்தந்தியை வரி விடாமே படிச்சிட்டு அப்புறமா போயி சட்டையை தொவச்சு போடுது . 9 மணி பள்ளிகூடத்துக்கு 8.45 மணிக்கு டிபன் பாக்ஸ் எடுத்து கழுவ போகுது . வாரத்துலே ஒரு நாளாவது சீக்கிரமா போகுரானனு பாரு. இதுலே பஞ்சாயத்து தலைவர் ரேஞ்சுக்கு பில்டப் வேற ..எப்போ பாரு இந்த தெருவிலே நாலு பொடுசுகளை கூட்டிட்டு திரியறது..படிக்கிறதை தவிர எல்லாம் பண்றான் பாரு "
இதெல்லாம் நியாபகம் வந்ததால் அமைதியாக வந்து விட்டேன்.வீட்டுக்கு வந்த பின்னால் தானே அவதாரம் எடுக்க முடியும்.
"அப்டி என்ன கொடுமை பண்ணிட்டாங்க உன் புருஷனுக்கு ..(அம்மாவிடம் தானே கத்த முடியும்).இப்படி ஊரெல்லாம் புகார் பண்றாரு. எதுனாலும் என்கிட்டே நேருக்கு நேர் பேச வேண்டியது தானே "
அப்பாவே வந்து விட்டார் வேலை முடிந்து.சைக்கிளை நிறுத்தி கொண்டே பதில் கொடுத்தார் .
"என்னடா அங்கே முழக்கரே"
"நீங்க வசந்தோட அப்பாகிட்டே என்ன சொன்னிங்க .அந்தாளு இன்னிக்கு வழியிலே பாத்து என்னை அவமானபடுத்திட்டாரு "
"ஆமா இவன் அப்படியே பெரிய மனுஷன் மானம் போயிருச்சுன்னு குதிக்கறான் பாரு" என்று என் கோபம் புரியாமல் சிரித்தார்.அவர் எப்பவுமே இப்படி தான்.நான் ஆத்திரப்படுவதை ரசிப்பார்.
"சிரிக்காதீங்க எனக்கு பதில் சொல்லுங்க ...அவரு யாரு என்னை அப்படி கேக்க ..நீங்க சொன்னா நான் கேக்க மாட்டேனா ...நீங்க ஏன் எல்லார்கிட்டயும் சொல்றிங்க நான் படிக்கலைன்னு "
"டேய் கிறுக்குத்தனமா பேசாதே .. அப்படி எல்லாம் போயி நான் யார்கிட்டயும் பொலம்பரதில்லெ.அதுக்கு எனக்கும் நேரமும் இல்லை" எந்திரிச்சு போயி விட்டார்
என்ன செய்யலாம்?வசந்தை நாளைக்கே அடிக்கலாமா.இப்படி தான் யோசித்தேன்.(criminal mind ஆச்சே).
மறுநாள் பள்ளிக்கூடம் போனவுடன் எனக்கு எதிரே வந்த அவனை அடித்து விட்டேன்.அவன் ரொம்ப நல்லவன்.திருப்பி கூட அடிக்கவில்லை.காரணம் வேறு புரியாமல் விழித்தான்.
மனசுக்கு சங்கடமாய் போயி விட்டது ஆனாலும் கோபம் தீரவில்லை.மதியம் சாப்பிட வீட்டுக்கு வந்தபோது அம்மாவிடம் வந்து பொலம்பினேன்.தட்டில் சாப்பாட்டை போட்டு விட்டு அம்மா என் அருகில் வந்து சொன்னார்
"இங்கே பாருடா எப்போவுமே யாரவது நம்மளை அவமானப்படுத்தினா ஆத்திரபடுரதுலே அர்த்தம் இல்லே"
"பேசறதுக்கு நல்லா தான் இருக்கும்" என்று முணுமுணுத்தேன் ..
"உனக்கு தெரியாது, கல்யாணம் முடிஞ்சு நானும் உங்க அப்பாவும்,உங்க பெரியப்பா வீட்டுக்கு பொண்ணு மாபிள்ளை விருந்துக்கு போயிருக்கிறோம் ...ஏதோ வேலையா உங்க அப்பா வெளிய போயிட்டாரு ..உங்க பெரியப்பன் தன் தம்பியை பத்தி இப்படி எளக்காரமா சொல்றாரு எல்லார் முன்னாடியும் "அவனுக்கு என்ன தெரியும் .. ஒரு எடம் வாங்க தெரியுமா ..இல்லே வீடு தான் கட்ட முடியுமா என்ன தெரியும் வாய் பேச மட்டும் தான் தெரியும் ..வெறும் வாயை வச்சுகிட்டு என்ன பண்ண முடியும் ... எனக்கு எப்படி இருந்திருக்கும்னு நீயே நெனச்சு பாரு.ஆத்திரம் அப்படியொரு ஆத்திரம் "...என்று அம்மா சொல்லி கொண்டிருக்கையிலே,எனக்கு என் அவமானம் மறந்து விட்டது.
"நம்ம அப்பாவை பாத்தா அந்த கேள்வி கேட்டாரு " என இன்னொரு முறை ஊர்ஜிதம் வேறு செய்து கொண்டேன்.ஏனெனில் கேட்டவர் என் அப்பாவின் பெரியப்பா மகன்.எனக்கு இப்போதைய சூழ்நிலை தான் தெரியும்.எல்லாரும் அப்பாவை மதிப்பது பார்த்த யோசனையில் கேட்டேன்.
"நம்ம அப்பா எவ்வளவோ வேலை செய்யறாரு...நீ அந்தாளை சும்மாவா விட்டே நாலு கேள்வி நறுக்குனு கேட்டுருக்கலாமே "
(கோபமுன்னு வந்துட்டா கடவுளுக்கே மரியாதையை கெடையாது.அப்பாவோட அண்ணனுக்கா குடுக்க போறேன் )
"கேட்ருக்கலாம் தான் ஆனா அதனாலே இருக்கிற நெஜத்தை மாத்த முடியுமா.இங்கே அப்போவே 7 ஆயிரம் கடன் இருந்துச்சு.வெறும் ஆத்திரம் கோபம் இதெல்லாம் எங்கியும் செல்லாது ."
"ஆனா நான் நிருபிச்சேன் ..இருக்கிற கடனை எல்லாம் அடைச்சு... அரை காசும் ஒரு காசுமா சேர்த்தி ,இருக்கிற நகை எல்லாம் வித்து இதே இடத்தை நாங்க வாங்கி இந்த வீடு வேலையாகிட்டு இருந்தப்போ உங்க பெரியப்பன் வந்து பாத்துட்டு ஒன்னும் பேசாமே போனாரு"
"இதோ இந்த கையும் காலையும் கொண்டு உழைச்சோம்.பத்து மாட்டை வச்சு நானும் .. ரயில் ரோட்டுலே உங்க அப்பாவும் கஷ்டப்பட்டு கொண்டாரலைனா ..என்ன மூலதனம்? "
"நீ அந்த மாதிரி நிருபிச்சு காட்டு ..அப்புறமா ஆத்திரபடு .."
உள்ள நியாயத்தை ஆராயாமல் ஊரை பகைத்து கொள்ள நின்ற அறியாமை புரிந்தது.
அப்றோம் தான் நானும் வீரமெல்லாம் வந்து ஏதோ வசந்தோட அப்பா தான் எனக்கு உலக எதிரி மாதிரி .. படி படின்னு படிச்சேன் ..
10th ரிசல்ட் வந்துச்சு ..நான் வசந்தை விட 7 மார்க் அதிகமா வாங்கி இருந்தேன்.அப்புறமா எனக்கு அந்த அவமானமே மறந்து போச்சு.
இப்போ வரைக்கும் எங்க போனாலும் நியாபகம் வரது இந்த வார்த்தைகள் தான்.
"அவமானம்,விமர்சனம் இதெல்லாம் உண்மைய இருந்தா அதை மாத்த பாடுபடு .. சும்மா ஆத்திரபடாதே "
No comments:
Post a Comment