Wednesday, September 2, 2009

நீ நான் நம்

நான் நேசித்த எல்லாவற்றோடும்
இடைவெளி கொள்ள செய்து
உன்னுடன் என்னை சேர்த்திருக்கிறது
காலச் சக்கரம்

எத்தனை நாட்கள் ஆகும்
நீ என்னை ஏற்று கொள்ள
என்று உன்னை கேட்கும் முன்

எத்தனை தூரம் இந்த பயணம்
என்று
ஒரு அயர்ச்சி
யோசிக்க வைக்கிறது


பேசி தீராததென்று எதுவுமில்லை
பேசி பேசி ஆவி தீர்ந்தது மிச்சம்
விவாதம் ,வீண் பிடிவாதம்
எதிலும் உனை ஜெயிக்க
நான் விரும்பவில்லை

கண்ணுக்கு தெரியாத பிரச்சனையை காட்டிலும்
காத்திருக்க சொல்லும் காரணங்களே
ஏற்று கொள்ள சரியாயில்லை

நியாயத்தை கருத்தில் கொண்டாயா
உன் கருத்தை நியாயப்படுத்துகிறாயா
தெரியாத பொழுதுகளில்
என்னை விட்டு விடு
என் வழியே -அல்லேல்
கொலை வாள் எடுத்து
கொன்றாவது விடு
கெஞ்ச தோன்றுகிறது

வழக்கமான நாடகங்கள் இல்லை
தேன் தடவிய பேச்சுகள் இல்லை
நீ உன்னை வேறுபடுத்தி காட்ட
செய்யும் முயற்சிகள்
எனக்கு பிடித்தம்தான்

கோடிட்ட இடங்களை போல்
உன் பகிர்தல்களில்
மெல்லியதொரு இடைவெளி...
என் கேள்விகள்
புரிந்த உன் மௌனம்...
இனம் புரியாத விலகல் ...
புரிதம் இல்லை சிறிதும்

ஒவ்வொரு நாளும்
நடப்பவை எல்லாம் விவரித்த போதும்
மிச்சமிருக்கின்றன
அத்தியாவசியமான உண்மைகள் சில

எல்லா கடமைகளையும்
சரி வர நிறைவேற்றுவதாய்
கணக்கெழுதிய போதும்
கவலை வருகிறது...
அரசியல் எல்லாம்
அன்பின் மீதா

நாம் சந்தித்த நாள் முதல்
என்னை அழவே தான் வைத்து கொண்டிருக்கிறாய்
எப்படி எல்லாமோ
திட்டி இருக்கிறேன்
திட்டி கொண்டும் இருக்கிறேன்
மறுப்பதற்கில்லை
ஆனால் அதை விட அதிகமாய்
ஸ்னேகித்து கொண்டும் இருக்கிறேன்

தெரியாதவை என்று
எவர்க்கும் நிறைய உண்டு தான்
புரியாதவை என்று எதுவுமில்லையே

நம்பிக்கைக்கு நல்லவன் கெட்டவன் தெரியாது
நாலும் அறிந்தாலும்
நம்பி கெடுவதை தவிர்க்க இயலாது

பல பொழுதுகள்
அடுத்த கேள்விக்கு வழியே இல்லாது செய்கிற
உன் பதில்களின் சாமர்த்தியமும்
தப்பித்தல்களும்
உள்ளதை
உள்ளங்கை அளவேனும்
எனக்கு உளவறிந்து
சொல்லி விடும்

ஒரு நூறு உண்மைகள் நடுவே
தேர்ந்த கைவண்ணத்தில்
கோர்க்க படும்
பல பல பொய்களை ...
சில இடங்களில்
என் கண்டுபிடிப்பை
காட்டி கொள்ள விரும்புவதில்லை
நாகரீகம் கருதி

இது ஒரு மூடு பனி காலம்
நீ சரியா ,நான் சரியா
என்பது வழக்கில்லை

எல்லாம் அறிந்தும்
உன்னை
மன்னிக்க சொல்லித்தான்
எனக்கு தீர்ப்பாயிருக்கிறது

1 comment:

பூங்குன்றன்.வே said...

//கோடிட்ட இடங்களை போல்
உன் பகிர்தல்களில்
மெல்லியதொரு இடைவெளி...
என் கேள்விகள்
புரிந்த உன் மௌனம்...
இனம் புரியாத விலகல் ...
புரிதம் இல்லை சிறிதும்//

இந்த கவிதையின் மொத்த சாராம்சத்தையும் இந்த வரிகள் சொல்லிவிடுகின்றன.மிக அழகிய கற்பனை.வாழ்த்துக்கள்.
poongundran2008.blogspot.com