Saturday, May 23, 2009

ரூம் போட்டு யோசிச்சு ..கல்யாண ஸ்பெஷல் கிறுக்கல்கள்

கல்யாணம் என்பது குதிரை பந்தயம் மாதிரி
வாழ்கையை பணயம் வைத்து
இருவர் இணைந்து
தத்தம் கனவுகளை
துரத்தி கொண்டு ஓடும் ஓட்டம்


நீண்ட பயணம் ...
இலக்கு எதுவென்றும்
எதுவரை என்பதும்
ஓடுபவருக்கும் ,ஒட்டுபவருக்கும் தெரியாத புதிர்

ஒன்றாய் ஓடுவது மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது...
நீங்கள் யாரோடு ஓடினாலும்
கணக்கில் வைத்து கொள்ளவேண்டியது
காதலும், நம்பிக்கையும் தான்--அடுத்தவரின்
கடந்த காலம் அல்ல


வெற்றி , தோல்வி எல்லாம்
வேகமாய் முந்தி கொண்டு செல்பவர்க்கு அல்ல
வேதனையோ ,சாதனையோ
மாறாத அன்பும் - அதை மறக்காது சொல்லவும்
மற்றவரிடம் செலுத்தவும் செய்கிற அதிர்ஷ்டசாலிகளுக்கே

நொண்டி குதிரையோ
சண்டி குதிரையோ
சிலருக்கு எதுவாயினும் ஓட்ட தெரியும்
தார் சாலையோ ,மண் தரையோ
சிலருக்கு எங்கேயும் ஓட தெரியும் ..

எதுவுமே தெரியாமல் ஓடி ஜெயித்தவர்களும் உண்டு
எல்லாம் தெரிந்தும் கோட்டை விட்டவர்களும் உண்டு

கூரையை பிய்த்து கொண்டு கொட்டுகிற
குருட்டு தசை தேவையில்லை தான்...
சகலமும் இருந்த போதும்
சிலருக்கு மட்டும்
சரியான வகையில் நியாயமே கிடைப்பதில்லை


முரண்பாடுகள் எங்கேயும் உண்டு தான்
நேற்று நினைத்த எண்ணத்துக்கும்
இன்றைய நம் எண்ணத்துக்குமே வேறுபாடுகள் உண்டு..
எங்கோ பிறந்து ... எங்கோ வளர்ந்து
நம்மோடு வாழ வருகிறவர்கள் மட்டும் என்ன விதிவிலக்கா ??

காலம் தான்
இருவருக்குள்ளும் இணக்கத்தை ஏற்படுத்தும்
ஒரு இனிய சாட்டை



ஒத்து வரவில்லை என்றால்
ஒதுங்கி கொள்ளலாம் என்று
உலகம் முழுக்க ...விதவிதமாய் சட்டங்கள் உண்டு
ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து மட்டுமல்ல
விடாது கொடுத்தும் வாழலாம் என்பதை
ஏட்டு புத்தகங்கள் சொல்வதில்லை என்றும்


போட்டியோ பந்தயமோ என்று தந்திரத்தை கொண்டு
வெகு நாட்கள் தேரிழுக்க முடியாது ..
உண்மையாய் உள்ளத்தை பகிர வேண்டிய
கட்டாயமே களத்தில் உண்டு

முற்றும் துறந்த முனியாவதை விட
எல்லாவற்றிலும் சிக்குண்டு
வாழ்வை செலுத்துவதே
இதன் அறம்...

என்ன நடந்த போதும்
குதிரையும் ,ஓட்டுபவர்களும் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று
வெற்றி தோல்வி எல்லாம் வேடிக்கை பார்க்க வந்தோர்க்கு இல்லை
அடித்து கொண்டாலும் ,
அழுது
, பின் அலுத்து கொண்டாலும்
பாதிப்பு என்னவோ பங்கெடுத்து கொண்டோர்க்கு தான்

அடிப்படையில் ஆதாரத்துக்கு
பெரும்
சேதாரம் இல்லையென்றாலும் ,
வளர்ப்பின் கோளாறாய்
அது பெற்றெடுத்த பிள்ளைகள் வாழ்வில் பிரதிபலிக்கும்

சின்ன சண்டைகள் ,பெரிதாய் கோபங்கள்
ஈட்டி முளைத்த வார்த்தை பரிமாற்றங்கள் ..
சில காயங்கள் ..மௌனங்கள்
தவறில்லை தான்
கெஞ்சலும், கொஞ்சலும் வந்தால்
சமாதானத்தில் மனம் நிறைந்து போகும் ஒரு நாள் ...

நினைத்ததை வெளிபடுத்தாமல் ,
சகித்து கொண்டு பொய்யாய் தான்
வாழ்தல் கூடாது ...
சுயத்தை இழந்த பின் சுதந்திரம் எப்படி வரும் ?
உருவத்தை எரித்தபின் உயிரை எவ்விடம் தேட?


யார் மேலே ,யார் கீழே என்பதுவும்
அடக்குமுறைகளும் , எதிர்ப்பு போராட்டங்களும்
தீர்ப்புக்கு வராது கடைசியில்
ஆண் பெண் என்ற பேதம் அற்று
காதலாகி , கலந்துருகி நிற்பது !!!


(ஒரு ப்ரமச்சர்யா இதை எழுதியாச்சு ..... நம்பிக்கையோடு எதிர்கொள்கிறேன் வரும்காலத்தை )


Tuesday, May 19, 2009

என் முதல் நட்பு ..

நான் பள்ளியில் படிக்கும் காலத்தில்.... மாலை வேளைகளில் வீட்டில் இருந்த எருமை மாடுகள் இரண்டையும் பக்கத்தில் இருந்த ரயில்வே யார்டுக்கு ... மேய்த்து கொண்டு வர ,அம்மா ஓட்டி போயி விடுவார்கள் ...நடுவில் வீட்டு வேலை செய்ய வர வேண்டுமெனில் என்னை தான் அழைத்து , கொஞ்ச நேரம் எருமைகளை பார்த்து கொள்ள சொல்வார்கள் ..

கூட்ஸ் ரயில்கள் மட்டுமே செல்லும் பாதை....ஆதலால்
கூட படிப்பவர்கள் யாருக்கும் தெரியாமல் மிகுந்த ரகசியமாய்
கொஞ்ச காலம் அந்த வேலையை செய்து கொண்டிருந்தேன் ....

படிக்கிற பிள்ளை என்று... அம்மா புஸ்தகத்தை எடுத்து கொண்டே போக சொல்லி விடுவார்....நாம பரிட்சைக்குன்னு உட்கார்ந்தாலே படிக்க மாட்டோம் ......

அப்படி தான் அன்றும் போனேன் .....
எருமை அதன் பாட்டுக்கு மேய்ந்து கொண்டிருந்தது ... எனக்கு புத்தகத்தை திறந்து படிக்க விருப்பமில்லை... சும்மா வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன்
அப்பாவோ மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தார் .....அங்கே ..
நகர்ந்து கொண்டிருந்த ஒரு இன்ஜினில் ஏறி சிக்னல் கொடுத்து கொண்டிருந்தார் ...எனக்கோ ஆர்வம் அதிகமாகி ...அவரை போலவே தாவி மெதுவாய் நகர்ந்து கொண்டிருந்த அந்த ரயில் இன்ஜினின் ஒரு கூட்ஸ் பெட்டியில் ஏற முயற்சி செய்தேன்..கொஞ்சம் தடுமாறி விட்டாலும் அப்படியே சமாளித்து ஏறி விட்டேன் ...யாரும் பார்க்கவில்லை என்று நான் நினைத்து கொண்டதன் விளைவு ... சடாரென எல்லாமே நின்றது ...யாரோ அப்பாவின் பெயரை சொல்லி சத்தமாக கூப்பிட்டார்கள் ..
நான் ஏறிய இடத்துக்கு வெகு அருகில் அப்பாவின் மேலதிகாரி நின்று கொண்டிருந்திருப்பார் போலே... அவர் நான் ஏறியதை கண்டு பயந்து
விட்டார் ... சத்தம் போட்டு அப்பாவை அழைத்து புகார் கொடுக்க ஆரம்பித்து விட்டார்...
"என் மகன் கூட இவ்வளவு குறும்புத்தனம் பண்றது இல்லே .. உங்க பொண்ணு என்ன பண்றா பாருங்க ?... சரி இங்க எதுக்கு அவ வந்தா ?......
அப்பாவோ... "இல்லே சார் .. எருமை மேயுது ... அப்படியே பார்த்துக்க சொல்லி நான் தான் சொன்னேன் ."... என்று விளக்கி கொண்டிருந்தார்...
அவ்வளவு தான் .. அதுவரை திட்டி கொண்டிருந்தவர்... என்னை புகழ ஆரம்பித்து விட்டார்...
"பரவாயில்லையே.......இந்த சின்ன வயசில் ".... என்று.....ஏதேதோ ..சொல்லி பாராட்டி கொண்டிருந்தார் ....
"இல்லே சார் ! வீட்டுலே இருந்தா... படிக்கணுமே .... இப்படி வந்து கொஞ்ச நேரம் எருமையை பார்த்துகிட்டா .... இதே இன்ஜினில் ரெண்டு ரவுண்டு அப்பா கூட்டி போவார்....." என .. அவரிடம் சொல்ல தான் முடியுமா ...
அந்த மனுஷன் அதோடு நிறுத்தி இருந்தால் பரவாயில்லை ....வீட்டில் ..வீதியில் என ஒரு கொள்கையோடு ,என் புகழை பரப்பவும் ஆரம்பித்து விட்டார்..

அடுத்த நாள் ஸ்கூலுக்கு போனால் ... கிளாஸ்க்குள் நுழைந்தவுடன் நம்ம புகழ் தான் ... மானாவாரியாய் ஓட்ட ஆரம்பித்திருந்தனர் .......
"எல்லாரும் ஆபிசர் மக்கள் ......ஏழுமணிக்கு எழுந்திருப்பவர்கள் ... என் வீட்டு வேலை... நான் பகிர்ந்து செய்கிறேன்" என்று சொன்னால் புரியவா போகிறது ....
இந்த கேலி தொடர ஆரம்பித்து விட்டது ....நாட்கள் செல்ல செல்ல அதிகமாகி விட்டது ....

ஒரு நாள் விளையாட்டு நேரத்தில், கேலிகள் பொறுக்க முடியாமல் கோபித்து கொண்டு அருகே இருந்த மரத்தடியில் உட்கார வந்தேன் ......
அப்போது தான் நான் அவளை பார்த்தேன் ....கணக்கு பாடம் எழுதி கொண்டிருந்தாள்

வெளியில் நடந்தவற்றை பார்த்து கொண்டிருந்தாள் போலும்
"என்ன விளையாட போகலியா "....என்றவாறே சிரித்தாள் ..
"என்ன கேலி செய்யறியா"
"எதுக்கு " என்பது போல் ஒரு நிமிடம் என்னை பார்த்தாள்..
பின் எழுதுவதை தொடர்ந்தாள்
"அதான் எருமை மேய்கிரன்னு எல்லாரும் சிரிக்கிறார்களே" .......என்றேன்

"இதுலே என்ன இருக்கு...?
உங்க வீட்டுலே இருக்கு நீ மேய்க்கிரே
எங்க வீட்டுலே இருந்திருந்தா நானும் அதைத்தானே செய்வேன் ......"
என்றவாறே ... எழுதி கொண்டிருந்தாள்

அவள் தான் ....அவளின் அந்த வார்த்தை தான் ..... நான் அவளை நட்பாய்....ஏற்று கொள்ள செய்தது ...அதுவரை யாரையுமே வா என்று என் வீட்டுக்கு அழைக்காத நான் ...அவளை வாரந்தோறும் வரவேற்க ஆரம்பித்திருந்தேன். ...

வள்ளுவர் கோட்டமும் ....வள்ளியம்மாவின் மகளும் (நான்தான் அது)

ஜனவரி மாதத்தில் ஒரு ஞாயிற்று கிழமை ......
நாங்கள் தங்கியிருந்த ஹாஸ்டலுக்கு வெகு அருகில் தான் வள்ளுவர் கோட்டம் இருந்தது...

எங்களுக்கு பிடித்தமானது பெசன்ட் நகர் பீச் என்றாலும்... எப்போதும் கூட்டமாய் வரும் பஸ்சின் நெரிசலில் மிதிபட்டு...போயி சேர்வதற்குள் போதும் போதும் என்றாகி விடும்
சரி .. பஸ்சுக்கு செலவழிக்காமல் போவது தானே ...என்று கிளம்பி ஆயிற்று ...
டிக்கெட் வாங்கி கொண்டு ,உள்ளே போயி பார்த்தால் வழக்கம் போல் ...நம் மக்கள்(சகாக்கள்) யாரும் வரவில்லை ...
சரி என்று நுழைவாயிலை ஒட்டி இருந்த படிக்கட்டு ஓரம் உட்கார்ந்து ... மற்றவர்களுக்காய் காத்திருக்க ஆரம்பித்தோம் . காத்திருந்த நேரத்தில் தான் அவள் ஆர்வமாய் சொன்னாள்..
"நாம ஏன் இங்கே நிற்கனும்?அப்டியே கொஞ்சம் நடந்திட்டு வரலாமே ... அவங்க எல்லாரும் வந்தவுடனே அப்புறம் பொறுமையா உள்ளே போயி சுத்தி பார்க்கலாம் "
வாகனங்களின் இரைச்சலும் ,ஜன சந்தடியும் நிறைந்த சென்னை போன்ற நகரங்களில் இது போன்று ஒரு இடம் மனதுக்கு மகிழ்ச்சியை அளித்தது ...
யாரும் பார்த்து பார்த்து நட்டு வைக்காமல் ....அழகுப்படுத்தாமல்....சமீபத்தில் பெய்த ஒரு மழையால் ....புற்கள் ஏராளமாய் வளர்ந்து அந்த இடத்துக்கு ஒரு பசுமையை கொடுத்திருந்தது ...

காற்றும் வெளிச்சமும் சரியாய் வராத அறை ஒன்றில் தங்கி இருந்த எங்களுக்கு.....(சத்தியமாய் எனக்கு ஏதும் தோணலை... முன்னாடியே ஒத்துக்கிறேன் )மரங்களும் அந்த செடிகளும் பார்வைக்கு இதமாய் இருந்தன ....
ஏதோ கவிதை எழுதுகிற ...சரி விடுங்க அவ எதுவும் எழுதினதில்லை
தியானத்தில் இருந்து திடீரென கண் விழித்த சாமியார் அவருடைய சீடனை பார்த்து .....கேட்கிற மாதிரி ...ஆர்வமாய் என்னை பார்த்து கேட்டாள் "
"ரொம்ப நல்ல இருக்குல்லே "
இந்த இடத்தை பார்த்தால் உனக்கு என்ன தோனுது?"....


கொஞ்சம் கூட யோசிக்காமல் சொன்னேன்...
" எவ்ளவோ புல்லு ... எங்க வீட்ல இருக்கிற எருமையை கொண்டாந்து விட்டா ... எப்படி மேயும் தெரியுமா ... நம்ம ஊருலே எங்க போயி இப்படி புல்லை பார்க்கிறது ......"!!!!!!!!!!!!!!!!!!!!! என நான் தொடர்ந்து கொண்டிருந்தேன் .....

(இவ்வாறு யதார்த்த சிந்தனையோடு பேசிய நான் பொழுதுபோக்காய் என்ன வேலை செய்து கொண்டிருந்தேன் என்று உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை )

Wednesday, May 6, 2009

சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாய் இருக்க வேண்டும் ..

சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாய் இருக்க வேண்டும் ..
- இது ஜூலியஸ் சீசரின் வார்த்தைகள் தான்
அதே போல் தான் உங்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவளாய் அம்மு இருக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள் . என் எழுத்துக்கள் உங்கள் வாசிப்புகளுக்கும் ,விமர்சனங்களுக்கும் எப்போதும் காத்திருக்கிறது .

ஒரு வெயில் நாளின் இரவாய் ...
மழை நாளின் பகலாய் ....
ரசித்து கொண்டு இருக்கிறேன் அவளை ...............
என் எதிர்காலத்தை அவள் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்
மழையில் நனைய நான் ஆசைப்பட்டால் ...
அவள் அதில் விளையாடி கொண்டிருப்பாள்

அவளை நேசிப்பதால் எழுதுகிறேன் என்பது அல்ல
அவள் என் எதிர்காலத்தை வாழ்ந்து கொண்டிருக்கிறாள் ..
காலம்... அவளை காட்டி தான்
எனக்குள் மாற்றங்களை ஊட்டி கொண்டிருக்கிறது ..

மகளாய் அவளிருந்த பொழுதுகளை விட
ஒரு தாயாய்
மகனுக்கு தவிக்கையில்
கணவனை கவனிக்கையில்
மனதினை ஈர்க்கிறாள்

வருங்காலத்தை நான் ஏற்று கொள்ள
நல்லது ,கெட்டது என நால்வைக்கும்
வாசலில் நின்று
வருகை சொல்லி கொண்டிருக்கிறாள் ...