Friday, October 30, 2009

கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் கொங்கு அழிந்தால் எங்கும் அழியும்

"கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்
கொங்கு அழிந்தால் எங்கும் அழியும்"
இப்படி தாங்க நானும் இந்த பழமொழியை பெருமையா சொல்லிட்டு திரிஞ்சேன்
பின்ன  நாம தான் ஈரோட்டு சிங்கமுல்ல.. கொங்கு தமிழில் பேசி கர்நாடகாவை  கலக்கறமுல்ல...
இந்த சிங்கம் அசிங்கமானது ஒரு ஜேடர்பாளையத்து தங்கத்துனால தாங்க....
(முன்குறிப்பு) :  இதெல்லாம் எங்க ஊட்டுக்காரர் சொன்னதுங்கோ........
இங்கே கொங்கு என்பது தேனை குறிக்கிறது. தேன் செழிக்க தேனீக்களுக்கு என்ன வேண்டும்? மலர்கள் ,சோலைகள் . சோலைகள் ,காடுகள் செழித்தால் மழை ,மற்றும் நீருக்கு குறைவிருக்காது .இவை எல்லாம் இருந்தால் விவசாயம் செழிக்கும் . விவசாயம் செழித்தால் மற்ற தொழில்கள் செழிக்கும். மக்கள் வாழ்க்கை செழிக்கும்
 அவரு ஒரு கதை கூட சொன்னாருங்கோ...
அவ்வையார் ஒரு மன்னனை வாழ்த்த விழையும் போது.இப்படி சொன்னாராம்
"வரப்பு உயரும் .."

கேட்டவங்க எல்லார்க்கும் ஒரே சந்தேகம் ...என்னடா இது வாழ்த்த சொன்னா..நல்லா இருப்பே ... இல்லே நாசமா போயிருவேனு வாழ்த்தாம ...இப்படி வரப்பு உயரும் .. வாய்க்கால் உயரும்ன்னு இந்த அம்மா  சம்பந்தமே இல்லாம சொல்றாங்களேன்னு......
வரப்பு உயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும் நெல் உயர குடி உயரும் குடி உயர கோன் உயர்வான்
மழை பெய்ஞ்சு தண்ணீர் போனா வயல்ல நிறைய பாயட்டும்ன்னு வரப்பை உயர்த்தி கட்டுவாங்க..நீர் நிறைய கிடைக்க பெற்றால் பயிர்கள் செழிக்கும்..விவசாயம் செழித்தால் மக்கள் செழிப்பர்..மக்கள் செழிக்க மன்னன் செழிப்பான்.

Thursday, October 22, 2009

விட்டு கொடுத்து....

வாழவும் முடியாது ,சாகவும் முடியாத
தினமும் ஒரு போராட்டம்...எனக்குள்
ஒவ்வொரு நொடியும் தற்கொலைக்காக
ஓராயிரம் வழிகள் யோசித்து
உதவாத காரணங்களுக்காய்
உதறி நிற்கும் இயலாமை...
என்ன செய்கிறேன் என்ற நினைப்புமின்றி
எதிர்கால சிந்தனையுமின்றி
நகருமிந்த கொடுமை?

கத்தியின்றி ,கலகமின்றி
எத்தனை வேதனை ?
வார்த்தையுமின்றி சில வலிகள் மிச்சம்

என்ன செய்ய வேண்டும்?
நான் உனக்கு....

கண்ட கனவுகள்
உன் மீது கொண்ட அன்பு
எல்லாவற்றுக்கும் அன்னியமானேன்
என்னையாவது திருப்பி தந்து விடு எனக்கு

உணவு செல்லவில்லை..
உடலை வருத்துகிற தண்டனை
கண்களில் கதறும் கண்ணீர் சாட்சி

என்ன செய்ய வேண்டும்?
நான் உனக்கு
என்பது வரையிலாவது பேசு
எதுவும் கட்டாயமில்லை இங்கே

பொருந்தாத காதல்
வீணான கேள்விகள்
வெளியில் தெரியா காயங்கள்
வாழ்வதற்கான நம்பிக்கை கூட மிச்சமில்லை என்னிடம்

உனக்கு என்ன வேண்டும்
உண்மையாய் கேட்டு விடு
நீ விரும்பியது
எதையாவது கடைசியாய் கொடுத்து விட
ஆசை இருக்கிறது இன்னும்..
வெற்றியுமில்லை ,தோல்வியுமில்லை
உன் வழியில் நீ போக
விட்டு கொடுத்து, கெட்டதாய் இருக்கட்டும்
என் பிரியம்

Thursday, October 8, 2009

க.சுதா

நாங்கள் இருவரும் கல்லூரியில் கடைசி வருட தேர்வுக்கு படித்து கொண்டிருந்த போது தான் சுதாவின் அறிமுகம் நிகழ்ந்தது.

கலகலவென்று பேசுவாள்.அவளுக்கு ஒரு ஒன்பது வயது இருக்கலாம். அவளை பற்றிய ஆதியும் அந்தமும் எதுவும் எங்களுக்கு தெரிந்திருக்கவில்லை.பொழுது போகாத நாட்களில் நாங்கள் இருவரும் அவளை சீண்டி கொண்டிருப்போம். வயதுக்கு மீறிய அவளின் பதில்கள் எங்களை அதிர வைக்கும்.சில சமயம் ஒரு அடிப்படை நிதர்சனத்தை கொண்டிருக்கும்..

"சுதா ! இன்னும் 5 வருஷம் கழிச்சு என்ன நடக்கும்? "

"என்ன! உங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆகி இருக்கும் ,நான் வயசுக்கு வந்திருப்பேன் "

ஒரு நாள் ,நாங்கள் இருவரும் எங்கள் நோட்டு புத்தகங்களை எடுத்து புரட்டியவாறே எந்த வகுப்பில் யார் தூங்கி கொண்டே நோட்ஸ் எடுத்தோம் என்று கேலி செய்து சிரித்து கொண்டிருந்தோம்.அப்போதுதான் சுதா உள்ளே வந்தாள். எதுவும் புரியவில்லை என்றாலும் அவளும் சேர்ந்து புன்னகைத்து கொண்டிருந்தாள்.

நான் நோட்டின் கடைசி பக்கத்தில் என் பெயரை வரைந்து இருந்ததை பார்த்து விட்டு

"அக்கா! இதென்ன ,இப்படி எழுதி இருக்கீங்க.."

"முடிஞ்சா நீ இதே மாதிரி உன் பெயரை எழுதி காட்டு .."

ஓரமாய் உட்கார்ந்து தமிழில் அவள் பெயரை எழுதி முடித்த பின் என்னிடம் வந்து இனீஷியலை காட்டி திரும்பவும் கேட்டாள் .

"இதென்ன .. ?"

"ஓ ! இதுவா எங்க அப்பாவோட பேருல வர முதல் எழுத்து...."

 "நீ எழுதலியா..சரி உங்க அப்பா பேரு சொல்லு ,நானே எழுதுறேன்."

 அவள் சிறிதே யோசித்தாள்...

 "கஸ்தூரி "

 "சுதா ! நான் அப்பா பேரு கேட்டேன்.."

 "எங்க அப்பா தான் நான் சின்ன குழந்தையா இருந்தப்பவே எங்களை எல்லாம் விட்டுட்டு  போயிட்டாராம்..அப்புறம் அவரு பேரை நான் ஏன் போடனும் .எங்க அம்மா தானே எங்களை எல்லாம் கஷ்டப்பட்டு வளர்க்குது அதான் எங்க அம்மா பேரை சொல்றேன்" . ஒரு மெல்லிய கோபத்தோடு சொல்லியவாறே அந்த காகிதத்தை எடுத்து கொண்டு வெளியேறினாள்

இனீஷியல் என்றால் என்னவென்று தெரியாதவள் தான் ஆனால் எதை போட வேண்டுமென்று தெளிவாயிருந்த க.சுதா தன் பெயரை எடுத்து கொண்டு போய் எல்லாரிடமும் காட்டி கொண்டிருந்தாள்

அம்மாவின் இ(வ)சைமொழிகள்

தெரியாத ஊருக்கு வழியனுப்புகையிலும் , தோல்வி கண்டு கலங்கி நிற்கையிலும் சொல்கிற வார்தைகள்
அம்மா:திக்கத்தவனுக்கு தெய்வமே துணை
துணிஞ்சவனுக்கு துக்கமே இல்லை

என் கூட படிக்கிற நான்சி வீட்டுல இந்த வருசம் முழு பரீட்சை லீவுக்கு மெட்ராஸ் சுத்தி பார்க்க போறாங்களாம்.நாம எப்பம்மா அங்க எல்லாம் போவோம்..
அம்மா: ஊரை சுற்றி ரக்கிரி (கீரை) பொரிச்சு(பறித்து) உப்பில்லாமே வேகுதாம்.அங்கொரு மூளி கொப்பில்லேன்னு(காதுக்கு தோடு) அழுகறாளாம்

என் கூட தாயம் விளையாட வாம்மா.எப்போ பார்த்தாலும் வேலை தானே செஞ்சுகிட்டு இருக்கே....
அம்மா: கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் ,கிழவியை எடுத்து மனையில் வை என்றானாம்

கதை புத்தகம் படிக்க வேண்டாமென்று சொல்லியும் நான் பாட புத்தகத்துள் ஒளித்துவைத்து படித்து கொண்டிருந்தேன்.என்னை கண்டுபிடித்த பின் உதிர்த்தபொன்மொழிகள்
அம்மா:மூக்கிலயே புழுத்தவனுக்கு நாத்தமென்ன

அம்மா ..இங்கே பாரும்மா ,எங்கப்பா உங்கூட பேச கூடாதுன்னு சொல்லிட்டாரு.அதனால உங்கிட்ட இனிமே பேச மாட்டேன்னு இவன் சொல்றான் பாரும்மா....
அம்மா: தாவி தாவி வளர்த்தாலும் தங்கச்சி புள்ளை தான்,மோதி மோதி வளர்த்தாலும் மூத்தவடி புள்ளை தான்

நான் எதிர்த்து பேசினால் ,கோபமாய் கத்தினாலோ,
அம்மா:வீட்டுக்கு அடங்காதது எல்லாம் ஊருக்குள்ளே போய் செருப்படி தின்னா தான் அடங்கும்

பாத்திரம், மற்றும் கை கழுவுகையில் அதிகமாய் தண்ணீர் செலவு செய்தால்..
அம்மா:உப்புலே ஊதாரிய பார்க்கலாம் ,தண்ணியிலே தத்தாரிய பார்க்கலாம்

பரீட்சையில் மார்க் குறைந்து போனதாய் வருத்தபட்டால்
அம்மா:பொழுது கெளம்புகையில் புத்தி வந்தா புள்ளை பொழைக்கும் ,பொழுது சாய்கையில் புத்தி வந்து என்ன லாபம்

வண்டியில் சாவியே போடாமல் ஸ்டார்ட் செய்து கொண்டிருந்தால்..
அம்மா:எழுபது குசவனுக சேர்ந்து அறுபது தேங்காயை சுமந்தானுங்களாம்

ஒவராய் ஸீன் போட்டு கொண்டிருந்தால்
அம்மா:பிச்சைகாரனுக்கு ஒரு எருமையாம் ,அதை பிடிச்சு கட்ட ஏழு ஆளாம்

அதிகமாய் ஐஸ் வைத்தாலோ ,அதிகமாய் கொஞ்சினாலோ....
அம்மா: சோழியன் குடுமி சும்மா ஆடுமா
அம்மா: பிரியம் பொறுக்க முடியாமே புருஷனை அண்ணான்னு கூப்பிட்டாளாம்

கரண்ட் போன பின்னால் மெழுகுவர்த்தியை பத்த வைத்து விட்டு அருகிலே உட்கார்ந்து உருகி வழியும் மெழுகை தீக்குச்சியில் தோய்த்து நெருப்பில் காட்டி விளையாடியதை பார்த்து சொன்னது
அம்மா:பொழப்பத்த நாவிதன் பொண்டாட்டி தலையை சிரைத்தானாம்

புது பேனா வாங்கி வந்த அன்று மட்டும் வெகு நேரம் எழுதுவேன்.
அம்மா:புது வட்டலை(Plate) கண்டவன் எட்டு வட்ட தண்ணி குடிச்சானாம்

அலமாரியில் அம்மா வைத்து விட்டு போன 10 ரூபாயை காணவில்லை. வந்து பார்த்தவுடன் தேட முயற்சி செய்யாமல்...என்னை பார்த்து சொன்ன வார்த்தை
அம்மா:உள் ஆளில்லாமல் ஊர் அழியாது
எப்படி கண்டுபிடிச்சே என்று கேட்டதற்கு
அம்மா: முசல்(முயல்) புடிக்கிற நாயை மூஞ்சியை பாத்தா தெரியாதா

அம்மா நான் உனக்கு பாயாசம் பண்ணி தரேம்மா இன்னிக்கி
அம்மா:பொன்னி பொங்க வைப்பான்னு புள்ளையாரு உட்காந்திருக்கிராராம்

 எங்களுக்கு ஒரு அண்ணன் இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்
அம்மா: இல்லாதவனுக்கு ஒரே கவலை.இருக்கிறவனுக்கு ஆயிரம் கவலை 

மழை பெய்ஞ்சு ஆத்து நிறைய தண்ணி போகுதாம் ..கண்டிப்பா இன்னிக்கி பைப்புல தண்ணி நல்லா வருமக்கா. ஆனால் அன்று மட்டும் பைப்பில் தண்ணி கம்மியாய் வரும்
அம்மா:ஆத்து நிறைய தண்ணி போனாலும் நாய்க்கு சளப்ப தண்ணி தான் 

நான் வாய் ஒயாமல் நான் தொடர்ச்சியாய் பேசி கொண்டிருந்தால்
அம்மா:தோல் வாயாய் இருக்கிறதால தான் தொடுத்துக்கிட்டு இருக்கு,மண்ணு வாயாய் இருந்திருந்தா புட்டுகிட்டு போயிருக்கும்

வாங்கிய ஒரே மாதத்தில் செருப்பை பிய்த்து விட்டேன்...அதற்காக உதிர்த்த முத்துகள் இவை
அம்மா:இரும்பும் துரும்பாகும் ,இட்டேரியும் பாழாகும் 

கைக்கு எட்டுகிற தூரத்தில் ஒரு பொருளை வைத்து கொண்டு  எடுத்து தாங்க என்று எல்லாரையும் கெஞ்சி கொண்டிருந்தால்... அதற்கே இந்த பழமொழி...

அம்மா:நடக்க மாட்டாதவன் சித்தப்பன் வீட்டுல பொண்ணு கட்டினானாம்

விடுமுறைக்கு ஊருக்கு போகையில் எல்லாம் ... நான் இளைத்து விட்டதாய் சொல்லி அரை மணிக்கு ஒரு தரம் அப்பா ஏதேனும் சாப்பிட கொடுத்து அன்பு தொல்லை செய்து கொண்டிருப்பார்..அப்போது வருகிற பொன்மொழிகள்

அம்மா:கொள்ளாதவன் வாயில் கொழுக்கட்டையை திணிக்கிற மாதிரி 


நானும் நவீனும் சண்டை போட்டு கொண்டிருந்தால் அம்மா சொல்கிற வார்த்தை... சண்டை போடுகிற வீடு நிம்மதியை இழக்கும் என்பதற்காகவே    
அம்மா: ஓரியாடிய வீடு தூரியாடி போகும்