Tuesday, December 16, 2008

எதிரில் ...

நனவாவதை பற்றி
என் கனவுகள் யோசித்ததே இல்லை
நம்பிக்கையை மட்டும்
கை விட்டதேயில்லை
எல்லா கோயில்களிலும்
எந்த கடவுளை தொழும் போதும்
என் மனதின் வேண்டுதல் ஒன்றே
வாழ்நாள் முழுக்க
என் எதிரே நீயிருக்க வேண்டும்
எதிரியாகவே ஆனாலும்.... எதிரில் நீயிருக்க வேண்டும்

நீ

நீ அழுதால்
என் சோகம் கூட
பெரிதாக தெரிகிறது
நீ சிரித்தால் தான்
என் சந்தோசம் கூட நிலைக்கிறது
நீ தட்டி கொடுத்து
பெருமிதப்படும் போதுதான்
என் வெற்றிகள் கூட புரிகிறது ...
அதில் எப்போதும்
நீயும் ஒன்றென.................

Friday, December 12, 2008

தேசபக்தி

என்னால் தேச பக்தி என்ற ஒரு தனிப்பட்ட கருத்தோடு எப்போதும் ஒத்து போக முடிவதில்லை. அது மனித நேயம் என்கிற மாபெரும் லட்சியத்தை காயப்படுத்துகிற கருவி. ஒரு தேசத்துக்கான பக்தி ஏன் மற்றொரு உயிருக்கு ,சக மனிதனுக்கு மதிப்பு கொடுக்கிற மனிதநேயமாய் மாற இந்த கல்வி துணை நிற்கவில்லை?. மெத்தபடித்தவர்கள் நிறைந்த நம் சுற்றம் ஏன் எல்லைகள் தேவையில்லை என்று மக்களிடையே விழிப்புணர்வு வளர்க்கவில்லை ? எல்லாவற்றையும் கடை தெருவுக்கு கொணர்ந்து காசாக்கி பார்த்த வியாபார வர்க்கம் தேச பக்தியையும் விலை பேசி கொண்டிருக்கிறது. காசில்லாதவன் கூட கோயிலுக்கு என்று நன்கொடை கேட்கையில் சட்டை பையை துழாவி காசு போடுகிற அடித்தட்டு வர்க்க மக்கள் அதிகம் நிறைந்த சமூகம் நம்முடையது . உணர்ச்சிகளோடு விளையாடுவதன் மூலம் ...எல்லா தரப்பு மக்களிடமும் காசு பார்க்க நினைக்கிற உத்தி இது . பதவி ,புகழ் என பெரிய ஆதாயங்கள் வேண்டி ,உலகம் தன்னை கொண்டாட வேண்டி புத்திசாலிகள் தொடர்கிற விளையாட்டு .தனக்கு சிறிதளவும் சம்பந்தமில்லாத தேசபக்தியை மறுப்பதன் மூலம் இத்தனையும் இழக்க வேண்டி வருமே . அதே சமயம் தேசபக்திக்கும் , தீவிரவாதத்துக்கும் எந்த உறவையும் ஏற்படுத்த நான் விரும்பவில்லை .சக மனிதனை ,ரத்தமும் சதையும் கலந்த ஒரு உயிரை மதங்களின் பெயரால் ,கொள்கைகளின் பெயரால் கொல்ல ,துன்புறுத்த விரும்பும் யாரையும் தண்டிக்கலாம்.அதற்கு தேசபக்தி ஒரு துணை காரணம் அல்ல - பூந்தென்றல்

Wednesday, December 3, 2008

அய்யாவு என்கிற நம்பிக்கையின் நல் மொழிகள்

ஒவ்வொரு முறையும் வேலைக்கான தேர்வுகளுக்கு சென்று திரும்பி வருகையில் "ஏன்டா வருத்தப்படறே ,நீ படிச்சியே அந்த ஸ்கூல்-ஐ சுத்தி வரட்டி வித்தவன் நானு. நானே நினைக்கலே உங்களை(அவர் பிள்ளைகள்) எல்லாம் அங்கே படிக்க வைப்பேன்னு ..உங்களுக்கு எல்லாம் என்னடா கொறைச்சல் ?படிச்சிருக்கீங்க , நல்ல அறிவு இருக்கு இன்னிக்கி எங்கே வேலைக்கு போனாலும் மாசம் 3 ஆயிரத்துக்கு கொறவு இல்லாமே சம்பளம் வாங்கலாம்... நீ ஏன்டா மனசை தளர விடறே..3 ஆயிரம் போதும்டா காலுக்கு போயி தலைக்கு வருமடா
அன்னிக்கெல்லாம் ஒரு படிப்பும் இல்லாமே, காசு பணம் இல்லாமே ,2.50 கூலிக்கு போனப்ப கூட நம்பிக்கை ஒன்னு மட்டும் தான்டா வச்சு பாடுபட்டோம் .தைரியமா இரு "

Tuesday, November 25, 2008

நம்பிக்கை

உலகின் மிக பெரிய விஷயங்கள் எல்லாம்
சின்ன சின்ன நம்பிக்கைகளில் தான்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது -அடுத்த நிமிடம்
உயிர் வாழ்வது முதல் - ஆயுள் முழுவதும்
உன்னோடு வாழ போவது வரை
ஆழம் புரியாத கிணற்றுக்குள்
அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கிற
ஒரு நூலை பிடித்து கொண்டு
நான் சிரிப்பதை போல

Thursday, October 9, 2008

மனம்

மனம் பழக்கங்களின் அடிமை ... !!!!!!!!!!!!
இதோ ..
பள்ளி காலத்தில் இருந்து
கவனித்து பாருங்கள் புரியும்
இரண்டு மாத விடுமுறை முடிந்து ...
பள்ளிக்கு போவதற்கு சிணுங்கும் ..

படித்த பள்ளியை ,கல்லூரியை
பழகிய மனிதர்களை ..என
ஒவ்வொரு பிரிவிலும் ,
ஒவ்வொருவரை பிரிகையிலும்
கண்ணீர் வடிக்கும் ...

இது ....வெகு நாட்களாய் பழகிவிட்ட பின் ...
புதியதை சந்தித்து
ஒரு புதிய ஆரம்பத்தை தொடங்குவதற்கு
தயங்கி நிற்கும் ......
பழக்கத்தில் சுகம் கண்ட சோம்பேறி ..மனம் ...

மரணத்தையும், காலத்தையும் தவிர
பெரியதொரு மாற்றங்களை .............
முயற்சியுள்ள மனதுக்கு
எவரும் ,எப்பொழுதும்
கொடுத்து விட முடியாது என்ற
உண்மை தெரிந்தாலும்...
காரணங்களை பிடித்து கொண்டே
கவலைகளில் மூழ்கி திளைக்கும்

வயது ஏற ஏற
கடந்த காலத்தை ....வசந்த நினைவுகளை
திரும்ப திரும்ப பேசி.......
நிகழும் காலத்தில் நடப்பவைக்கெல்லாம்
புகார் பட்டியல் வாசித்து நிற்கும்....

எடுத்ததற்கெல்லாம் எதிர்காலத்தை நினைத்து
கலங்கி நிற்கும் ...

வாலிபத்தில் ,குழந்தை பருவத்துக்கும்
வயோதிகத்தில் ,வாலிபத்துக்கும்
ஆசைப்பட்டே அழிந்து போகும்


கடந்த காலத்தின்
தோல்விகளில்... மோதி மோதியே
காயம்பட்டு .........
இம்மியளவும் முயற்சிக்காது
காப்பாற்ற ஆள் தேடி .....
அதிர்ஷ்டத்தை ...அண்ணாந்து பார்த்து கொண்டிருக்கும்

கீரைகாரியிடம் பேரம் பேசும் மனம்
கௌரவத்துக்காய் கணக்கு பார்க்காமல்
Pizza hut-களில் பணம் கட்டி வரும்

யாரில்லாமலும் .............யாரும் வாழத்தான் வேண்டும் என்பதை மறந்து நானில்லாமல் இவர்கள் என்ன செய்வார்கள்
அவர்கள் என்ன செய்வார்கள்??? ... என்ற நினைப்பை எடுத்து
தனது கோழைத்தனம் மறைத்து நிற்கும் ...........

அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைத்து நினைத்தே நேசிப்பவரை நெருக்கடிக்கு உள்ளாக்கும்

ம்ம் என்றால் நம்பிக்கை இழந்து விட்டு
இயலாமையின் தோள்களில் சாய்ந்து கொள்ளும்

இள ரத்தம் ஓடுகையில் ...
முதியோரின் காரணம் கேட்டறியாத
கண்மூடித்தனமான பின்பற்றுதல்களை
கேலி செய்யும்
அதே மனம்...
முதுமையில்...
பகுத்தறிவுக்கு வேலை கொடுக்காது....
பற்றி கொள்ள ஒரு நம்பிக்கை தேடும்...
வீட்டுக்குள் தொலைத்ததை எல்லாம்
வாசலில் தேட .......

புகழ்ச்சிக்கு ,மரியாதைக்கும் மயங்கி ....
எட்டியே நில் என்று எவரையும் சொல்லாது
எல்லார்க்கும் இடம் கொடுத்து விட்டு
நெருக்கடியில் மாட்டிக்கொண்ட பின்
நினைத்தவரை எல்லாம் குற்றம் சாட்டி
நீதிமானாய் காட்டி கொள்ளும்

பெரிய அளவில்
புத்திசாலிதனமாய் ஏமாற்றுபவர் கண்டால்
ஏமாந்ததை கூட
யாருமறியாமல் மறைத்து கொள்ளும் . .
சிறிய அளவில் செய்து
அகப்பட்டவனையோ .....அடித்தே கொள்ளும்

அடுத்தவருக்கென்று அறிவுரைகள் வகுத்தாலும்
தனக்கென்று வருகையில்
தடுப்புகளை கூட உடைத்தெறிந்து
ஓட தயாராகும்

எல்லாரிடத்தும் முக்கியத்துவம் தேடும்
ஏகபோக அரசியல்வாதி

வேலை இருக்கும் போதெல்லாம்
ஒய்வு தேவை என்று
ஓயாது புலம்பும்
சும்மா இருக்கும் போதோ.
ஓய்வை யோசிக்காது ..

ஒவ்வொரு
திங்கள்கிழமை காலையும்
அலுவலகம் போகையில்
ஞாயிற்றுகிழமை வீணாய் போனதாய்
விளம்பரப்படுத்தி கொண்டிருக்கும்

ஊரெல்லாம் ஓடி
உலக அறிவெல்லாம் கற்று
உள்ளுக்குள் கவனியாது .. வாயாடி கொண்டிருக்கும்

செத்த பின்னால் என்னாவோம் என்ற பயத்தோடு
கடவுள் வந்து கண்ணை குத்துவதாய்.....
காவி கட்டியவனிடமெல்லாம்
தேடி தேடி ..கதை கேட்கும்
சொன்னவரை எல்லாம் தெய்வம் என்று மதிக்கும்
உயிரோடு இருக்கும் போது
உருப்படியாய் வாழ நினைக்காது.. !!!!!!!!!!!


-பூந்தென்றல்

Wednesday, August 20, 2008

உனக்கு தெரியுமா ..

எந்த ஒரு இடத்திலும்
எத்தனை
பிரியமான ஒருவருடைய இழப்பை ,பிரிவை
எதிர்கொள்ளும் போதும் ..
கட்டுபாடின்றி ஓரிரு நிமிடங்கள்
நீ அழுது விட்ட போதும் ...
எப்போதும் பேசும்
உன் வார்த்தைகள் மட்டும் நினைவுக்கு வருகிறது ..

எவரை பிரிந்தாலும்
எந்த ஒரு மரணத்தை
கண் எதிரே சந்திக்கும் போதும் ..
யாரேனும் கதறி கொண்டிருக்கும் போதும்
சர்வசாதாரணமாய்
அனுபவசாலிகள் தோற்க
அழகாய் நிதர்சனம் பேசுவாய் ...
"கொஞ்ச நாளைக்கு அப்படி தான் இருக்கும் ..
அப்புறம் போக போக சரி ஆகிவிடும்
மனதுக்கு மறந்து... மரத்தும் விடும் ..........."
உனக்கு தெரியுமா .. ???
அப்போதெல்லாம் நான் வியந்திருக்கிறேன் ....
நீ பெற்ற அனுபவம் எப்படி பட்டதென்றும் ...

உன் காயங்கள்
எத்தனை கொடிதென்றும்

ஆனால் .. எல்லாம் சொன்னாயே ..
முக்கியமானதொரு உண்மை புரிய மறந்தாயோ

உன்னை போல்
அனுபவங்கள்-அறிவு கொண்டிருக்கவில்லை ..
நீ தான் என் அனுபவமே .....

உன்னாலே கிடைத்த கிரீடங்கள்
எத்தனை புதிதோ !!!!!
அதே அளவு
எனக்கு ....என் அழுகையே புதிது ....

நானும் சொல்கிறேன் .. கேள் ..
நீ அருகில் இல்லாதது ..
இந்த பிரிவுகள் ....
பெரிய இழப்பாய் இல்லை ..தான்

தானே செத்த பின்
தனக்காய் அழ முடியாது என்பதால் ...
ஒவ்வொரு உயிரின் மரணத்திலும்
உரிமை தனிமை,
ரத்தபாசம் ,நேசம் நெருக்கம் என
கணக்கில்லாத காரணங்களால்
கண்ணீர் விட்டாலும்
மனிதன்
தன் மரணத்தை நினைத்து
தனக்காகவும் ....ஓரிரு நிமிடங்கள் அழுவதை போன்றது
என் உண்மை

நீ என்னையோ .. அல்லது
நான் உன்னையோ ..
மறந்து விட போவதற்காக அழவில்லை...

மரங்கள் அடர்ந்த சாலையில்
எதிரெதிரே சந்தித்து கொண்ட போதும்
மறந்ததாய் நடித்து ..கண்டுகொள்ளாமல்
அவசரமாய் கடந்து போக வேண்டி இருக்குமே என்றுதான்
இந்த அழுகை ...
சற்று முன்னதாகவே ...

அப்போது கண்ணீர் விட
சில கட்டாயங்கள் இருக்குமென்றாலும் ...........

அது போக

பிரிந்து போன இடத்திலா .. சந்திக்க போகிறோம் ...
இல்லை ..பல்லாயிரம் மைல்கள் கடந்து ...
உருவங்கள் , ரசனைகள் ... மாறி ...
புதிய உறவுகளோடு ....
ஒருவரை ஒருவர் அடையாளம் கண்ட பின்னும்
தேடிக்கொண்டே இருப்போம் ...

எழுதுவதில்லை

நீ
என் அருகில் இருக்கும் போது மட்டும்
நான் எழுதுவதில்லை
ஏன் எனில்
படிக்கும்பொழுது எழுத
நான் பழகவில்லை
உன்னை போன்ற கவிதையை !!!!!!

உனக்கு முன்

நான் ரசித்து ஆசைப்பட்டு
வாங்கும் பொருட்கள் எல்லாம்
உனக்கே பரிசளிக்கிறேன்
உன்னை ரசிப்பதும், நேசிப்பதுமான
தவங்கள் முன்னால்
அவைகள் சாதாரணம் என்பதை
எவைகளுக்கும் சொல்ல !!!!!!!!!!!!!!!!!!!!

உன் கண்ணீர்

கண்ணீர் கனமானது தான்
உன் கண்ணில் இருந்து வந்ததால் அல்ல
என்ன செய்தும் ..................
என்னால் அதை துடைக்க முடியாததால் !!!!!!

Tuesday, May 20, 2008

நான் உன்னிடம் பேசாமல் இருக்க முடிவெடுத்தால் ....

பல நாளாய்
பழகி கிடந்த தோழர்களிடையே
இடைவெளி வந்ததற்கு ....
கண்டு காணாதது போல் கடப்பதற்கு
காரணம் கேட்டால் ...

எத்தனையோ காரணங்கள் சொல்லுவார்கள் ...
நேரம்... தூரம் ... .. பணம் ...
ஏன் அவன் என் தொலைபேசிக்கு அழைப்பதில்லை ?
அவன் என் பிறந்த நாளாய் மறந்து போனான் .....
குடும்பம் வந்த பிறகு மாறி போனாள் என்று ....
நிஜம் என்பது
இந்த எதிலும் இல்லை..
என நினைக்கிறேன் நான் ..

பொறுப்புகள் , கடமைகள் வந்து சேர்ந்ததை போலவே...
நான் என்கிற எண்ணத்துக்கு நீருற்றி ....
வளர்ந்து விட்டதற்கான தண்டனையாய் -மனம்
வளராமல் போவதற்கான நிந்தனையாய்
அடுத்த மனிதனிடமிருந்து அந்நியப்படுத்த
காலம் கட்டுகிற
கனமான தடுப்பு சுவர்கள்

என்னிடம் எந்த காரணமும் இல்லை ..

உன்னை நினைவுபடுத்துவதற்கு...
ஒரு நாளின் எத்தனையோ நிகழ்வுகள் காத்திருக்கின்றன

உன்னிடம் பேச பணம் செலவழிகிறதென்றால் ...
என் சம்பாத்தியத்திற்கு
நானே ஒரு சுமை

நேரம் செலவழிகிறதென்றால்
என் ஆயுள் குறைகிறதென்று அர்த்தம்

நேரம் இல்லை என்றால்
நான் வாழவே இல்லை

மூச்சு விட நேரம் இருக்கிற வரை
நான் உன்னை தொடர்பு கொள்ள ..
எத்தனையோ சாதனங்கள்
விஞ்ஞனத்திற்கு நன்றி

மரணம் என்பதை தவிர
மிக பெரிய தூரத்தை
நானும் உணர்வதில்லை ...
வருகிற மெயில் -களில் எல்லாம்
உன் பெயரை தேடி அலுத்து விட்டேன் ...
புகார் சொல்ல மனம் வரவில்லை ..
ஏன் எனில்
எனக்கு உன்னை பற்றி தெரியும்
75 சதவிகிதம் வேலை ..
10 சதவிகிதம் சோம்பேறித்தனமும்
5 சதவிகிதம் அலட்சியமும்

என்னை பற்றி உனக்கும் ...
60 சதவிகிதம் யதார்த்தம் ,
30 சதவிகிதம் ஏக்கம்
10 சதவிகிதம் சுயகௌரவம்

இங்கே கடமைகள் .. இருக்கின்றன ..
உறவுகள் ,சுற்றம் என்று
சமுதாயத்தில் ஓட ஆரம்பித்து விட்டோம் ...

நான் தோற்று விட்டேன் ..
கடைசி வரை உனக்காக நானும் என்று
சில வாக்குறுதிகளையும் , வார்த்தைகளையும் ..
அதன் கனம் தெரியாமல் ..
கொடுத்து விட்டு
வாழ்ந்து பார்க்கையில்
தான் வலிக்கிறது ... மனதுக்கு
எத்தனையோ நிகழ்வுகளுக்கிடையே
என் சந்தோசத்திற்காக
எதையோ காப்பாற்ற பாடுபடும்
உன்னை குற்றம் சாட்ட
காரணங்கள் எப்படி தோன்றும் ?

திரும்பவும் சொல்கிறேன்
எட்டி இருப்பதற்கான
காரணங்கள் ,கோபங்கள்
எதுவும் இல்லை என்னிடம்

உயிர் இல்லாத ஒன்றை பத்திரப்படுத்தி வைப்பது,
பெயரளவிலாவது பகிர்வது
போன்ற செயல்களில்
விருப்பம் இல்லை எனக்கு ...

சாலையோர விபத்துகளில்
செத்து போகிற
ஒரு முகம் தெரியாத மனிதனுக்கான அஞ்சலியாய்
மாறி போகிறது
நட்பு சில நேரங்களில்

அப்போதெல்லாம்
என்னிடம்
திருவிழாவில் நடந்த கலவரத்துக்கு
திருக்கோயிலை பூட்டுகிற
வழி தான் இருக்கிறது.

மாறி போனதை
மறந்து போனதாய் சொல்லி சோகப்படாதே ..
பத்திரமாக தான் இருக்கிறாய்
எனக்குள் எப்போதும் ........

Monday, May 12, 2008

முரண்பாடுகள் கொண்ட என் மனம்

நீ என் பக்கத்திலே இல்லாத போது ...
என் அழுகைக்கு , சோகத்துக்கு ..
எதையும்
நான் யார்கிட்டயும் பகிர்ந்துக்காமே
உனக்காகவே காத்து நிக்கற முட்டாள்தனத்துக்கு ...
ஏன்?
என்னோட எல்லா கஷ்டங்களுக்கும் ...
நீ தான் காரணமின்னு...
சதா உன்னையே குற்றஞ் சாட்டி ........
உன் மேல அன்பு வச்சதே தப்புன்னும் .....
என்னை திட்டி
அறிக்கைகள் கொடுத்துகிட்டிருக்கிற மனசு...

என்னை அலட்சியப்படுத்துகிற உன்னை ...
இனி மறக்க போறதாகவும் ...
உன்னை ,உன் நினைவுகளை விட்டு
எங்கியாவது கண் காணாத தேசத்துக்கு
ஓடி போயிரலாம்னு அறிவுரை பண்ணி பொலம்பற அதே மனசு...

ரொம்ப நாள் கழிச்சு ..
உன்னை பார்த்துட்டா ...
எல்லாத்தையும் மறந்துரும்
உன் சிரிப்பு ...கொஞ்சல் ... கெஞ்சல் ....
காரணங்களே .. கேக்க தோணாமே போயிடும் ...
அதுவும் ...
நீ ஆதரவா தலை கோதி ..
உன் மடியில் சாய்த்து கதை பேச தொடங்கும் போது
இதற்காகவே .. உன் பிரிவை தாங்கி கொள்ளலாமின்னு ..
எத்தனை வருத்தத்துக்கு நடுவேயும் வாழ்ந்திரலாமின்னும்
சொல்லி சொல்லி சந்தோசப்படும்..

நீ வந்தவுடனே ஓடி ஒழிஞ்சுகிட்ட
ஒன்னு ரெண்டு சோகம்
எல்லாம் நியாபகத்துக்கு வந்து
என்னை கேலி பண்ணி
கேவலமா பாத்து சிரிச்சா
உடனே
கொஞ்சம் ரோஷம் வந்த மாதிரி நடிச்சு..
அப்போ ஏன் அப்படி பண்ணினே..
அந்த வார்த்தையை ஏன் சொன்னே..
இதை ஏன் செய்யலேனு
அதே மனசு
உனக்கான விசாரணையை ஆரம்பிக்கும் ..
நீ காரணங்களை அடுக்கும் போது ..
தப்பு பண்ணியே இருந்தாலும்....
ஏதோ கேள்வி கேட்டதே
பெரிய வேலை அப்படிங்கற மாதிரியும்
இதனாலே நேரம் வீணா போனது மாதிரியும்...
தன்னையே நொந்துக்கும்..

உன் சோம்பேறித்தனம் ,பொறுப்புகள் எல்லாம்
தெரிஞ்சது தானேன்னு தொடங்கி
கடைசியா..
மகளாக இருந்த போது புரிஞ்சுக்காததை எல்லாம் இனி அம்மாவாக ஆனபின்
கட்டாயம் புரிஞ்சுக்குவான்னு
கடமைக்கு ...ஒரு தீர்ப்பை சொல்லிட்டு
விழுந்து விழுந்து உனக்கு சேவகம் பாக்க போயிரும்

பிரிஞ்சு போகிற நிமிஷங்களிலே
என் கையை இறுக்கமா பிடிச்சுகிட்டு ....
போய்ட்டு வரேன்னு
நீ சொல்லும் போது ...
என்னையும் உன்னோட கூட்டிகிட்டு போயிடுன்னு
கேக்கவும் தோணாமே
இல்லாட்டி உன்னை விட மாட்டேனும் சொல்ல முடியாம
அடுத்து எப்போ பாக்கலாம் அப்படினு பேச்சை முடிச்சுக்கும் !!!!

ரயில் கெளம்பி...
தூரமா போனவுடனே...
சுற்றிலும் பாத்துட்டு..
பக்கத்திலே யாரும் இல்லேன்னு தெரிஞ்ச பின்னாடி..
காதுக்கு கூட கேக்காத அளவுக்கு
கண்ணீர் விட்டு அழ ஆரம்பிக்கும்.... !!!!!!!!!!!

Friday, April 25, 2008

எதுனாலும் .......

NIIT சார்பாக நான் பாடம் நடத்தி கொண்டிருந்த கல்லூரியில் ஒரு H.O.D இருந்தார்.புதிதாய் அந்த பதவிக்கு வந்திருப்பார் போலும்
எப்படி வளைத்து வளைத்து கேள்வி கேட்டாலும் ஒரு பதிலை (மனப்பாடமாய்) தயாராகவே வைத்திருப்பார்.

இப்படி தான் ஒரு நாள் அவரிடம் போய் " சார் கிளாஸ் நடத்த LCD Projector வேணும் " என்று ஆரம்பித்தேன்
உடனே "எதுனாலும் பிரின்சிபலை கேட்டுகோங்க அவரு தான் பொறுப்பு " என்றவாறே பேச்சை முடித்துவிட்டு எழுந்து போய் விட்டார்.
மற்றொரு நாள்
"சார் இந்த சனிக்கிழமை கிளாஸ் வைக்கலாம்னு இருக்கோம் ....
நான் முடிக்கவே இல்லை.. "
அதற்குள் அவர் "எதுனாலும் பிரின்சிபலை---" என்று தொடங்கி ஒப்பிக்க ஆரம்பித்திருந்தார்...

ஒரு நாள் போன் செய்து நான் வர லேட் ஆகும் என்று சொன்னால் அதற்கும் இந்த மனிதர் "எதுனாலும் பிரின்சிபலை---".
"சோ முடியலே கண்ணை கட்டுது "என்று போனை வைக்க வேண்டியதாயிற்று

ஒவ்வொரு முறையும் சின்ன சின்ன விஷயங்களுக்கும் பிரின்சிபலை பார்க்க நடந்து நடந்து நான் வெறுத்தே போனேன்.ஒரு மதிய உணவு வேளை அலுவலகத்தில் எல்லாரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தோம்.

"சே ! வர வர இந்த காலேஜ் கிளாஸ் எடுக்க போகவே பிடிக்கலை !"
"ஏன் என்ன ஆச்சு ? எப்போ எதை கேட்டாலும் அந்த ஆள் ஒரு பதிலையே சொல்றான்யா "
"சரி ! இந்த தடவை நீதான் வித்தியாசமா முயற்சி பண்ணி பாரேன் ..."
"என்ன" என்பது போல் பார்த்தேன்
"சார் உங்க பொண்டாட்டி எப்படி இருக்காங்க ?"
"எதுனாலும் பிரின்சிபலை---"
(ஆஹா இதுக்குன்னே கெளம்பி வருவாயங்க போலே )
என சிரிக்க ஆரம்பித்து விட்டோம்...

மறுநாள்
நான் கிளாஸ் எடுத்து முடித்து விட்டு வந்தபோது
நம்ம H.O.D எதிர்பட்டார்
" சார் ஸுடுடண்ட்ஸ் எல்லாருக்கும் புக்ஸ்(courseware) குடுக்கணும்"
என்று பவ்யமாய் என் வாய் அனுமதி கேட்டு கொண்டிருக்க...
மனமோ... அவரிடம் சத்தமில்லாமல்
இதோ இந்த கேள்வியை கேட்க ஆரம்பித்திருந்தது
" சார் உங்க பொண்டாட்டி எப்படி இருக்காங்க ?"
அதற்குள் நம் தலைவர் பதில் சொல்ல ஆரம்பித்திருந்தார்
"எதுனாலும் பிரின்சிபால்-ஐ கேட்டுகோங்க அவரு தான் இதற்கெல்லாம் பொறுப்பு "
நானோ என்னை மறந்து அந்த பதிலுக்கு இப்போது சிரிக்க ஆரம்பித்திருந்தேன்
ஹாஹா ஹாஹா ஹாஹா ஹாஹா ஹாஹா

Thursday, February 28, 2008

என் தனிமை

தனிமை கொடுமையென்று
நான் சொல்லி வருவதை கண்டு
இத்தனை பேர் உன்னோடு இருக்கையில்
தனிமை எங்கிருந்து வந்ததென்றும் ...
இது போன்ற பிரிவுகள்
வாழ்வில் சகஜம் ..
இதற்காக எதற்கு வருத்தப்படுகிறாய்? -என்றும்
எல்லாரும் கேட்கிறார்கள் ..

தனிமை என்பது தனித்து இருப்பதல்ல ..
நீயின்றி இருப்பது ..
நீ தந்த நினைவுகளில்
என் நிகழ்வுகள் கனப்பது ....

உன்னை போல ஒருத்தி ...
வந்து போன பின்
வாழ்வின் மிச்சங்களை
மீண்டும் தொடர்ந்து கொண்டிருப்பது ..

தேடி கிடைத்த அன்பை
கடமை , காலம் என
நீளும் பட்டியல் நடுவே
தொலை தூரத்து சொந்தமென்று ..
பார்த்து கொண்டிருப்பது .....

Thursday, February 14, 2008

ஒன்றுமில்லை ,சரி , அப்புறம் ...!!!

ஒன்றுமில்லை ,சரி , அப்புறம் ...
இப்படி ஒற்றை வார்த்தைகளில்
எத்தனையோ காரணங்கள் .. கொண்டு ...
நான் ஆரம்பிக்கும் ...
ஒரு நீளமான உரையாடலையே
எப்படி உன்னால் மட்டும் முடித்து வைக்க முடிகிறது? ...

ஒன்றுமில்லை என்று சொல்லுவது சுலபம் தான் ..
ஆனால் அந்த ஒன்றுமில்லை-க்கு பின்னால்
எத்தனை ஒளித்து வைக்க வேண்டி இருக்கிறது ...
தெரியுமா உனக்கு ?
என் ஏக்கங்கள்,
சின்னச்சின்னதாய் சில எதிர்பார்ப்புகள் ...
உன் அருகாமை வேண்டி...
தவிக்கும் குழந்தைத்தனம் ....எல்லாமே .............

அப்புறம் என்று
அடுத்த வார்த்தைக்கு அடியெடுத்து ....வைத்து ...
எத்தனை விஷயங்கள் மென்று முழுங்க
வேண்டி இருக்கிறது தெரியுமா?
நாம் பிரிந்தது முதல் ......
இன்று நடந்தவை வரை ....
ஆனாலும் எதுவுமே சொல்லாமலும் .. சொல்ல முடியாமலும் ... போனதற்கு ..தண்டனையாய் ..
சரி என்று ... சொல்லி
தொலைபேசியின் தொடர்பை .. துண்டிக்கிறேன்

நீளமா-வட்டமா ...

காதல் நீளமா .... வட்டமா
கருத்து சொல் !!!!! ...
உன்னை நேசிக்க ஆரம்பித்த பின் .
நீ நேசிப்பவர்கள்..
உன்னை நேசிப்பவர்கள் ... என்று
உனக்காக எல்லாரையும் ...
நேசிக்க தொடங்கி . ...
கடைசியில் என்னில் தான்
வந்து ... முடிந்திருக்கிறேன் ...
அப்படியானால் காதல் ???????????



(வாழ்க்கை ஒரு வட்டம்..உலகம் ஒரு வட்டம் ..இந்த மாதிரி இதுவும் ஒரு discussion தான்)

காதலர் தின சிறப்பு மலர்

மலர்கள் ,மரங்கள் ... மலைகள் ...
காடுகள் .. கடல்கள் ..
மழை , அருவி ....
இவை மாத்திரமே ..
இயற்கை என்று ...
தேவதை நீங்கலாய்
யாரோ வகுத்து விட்டார்கள் ..

கவிதைகள் ... கதைகள் ..நாடகம் ..
இவையே ..இலக்கியம் என்று
யாரோ வகை பிரித்து ...
போய்விட்டார்கள் ..

அந்த யாரோவுக்கு தெரியவில்லை ..
நீ பிறக்க போகிறாய் என்று ...

அந்த யாரோவுக்கும்
அந்த யாரோ சொல்லி போனதை
பின்பற்றும் எல்லாருக்கும் தான்
உன் இருத்தலை
இப்படி ...எடுத்து சொல்லி கொண்டிருக்கிறது ..
என் காதல் !..

Wednesday, February 13, 2008

என் பெற்றோர்

பெண்ணே ,
நாம் சந்தித்து பிரிவோம் என்று யாருக்கோ தெரிந்திருக்கிறது ..
அதனால் தான்
வழி தொலைந்த பிள்ளையை போல்
அழுது கொண்டிருக்கும் எனக்கு ..
உன்னை மறக்க வைக்கும் மருந்தை ...
நான் பிறக்கும் முன்னமே ...
கண்டுபிடித்து ... வைத்திருக்கிறார்கள் ...

என் அழுகை அர்த்தமற்றது என்றாலும்
இரவும் பகலும் போல்
உறவும் ,பிரிவும் என்று
என்னை உணரச்சொல்லி
ஆறுதல்படுத்தும் மருந்தாய்
-என் பெற்றோர் ....!!!!!!!!!!!!