Thursday, September 9, 2010

தகுதி (கேட்டதில் பிடித்தது)

தகுதி இருக்கா ?

த - தன்னம்பிக்கை 
கு - குறிக்கோள் 
தி -திறமை 


 

Tuesday, August 31, 2010

படித்ததில் பிடித்தது -சோளம் கலந்த நம் உணவுகள்

"பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை" என்ற பழமொழி கேள்விப்பட்டு இருக்கிறோம். "Corn இல்லாமல் எந்த உணவுமே இல்லை" என்று புதிதாக ஒரு மொழி வரும் போல இருக்கிறது. ஆச்சரியமாக இருக்கிறதா? எப்படி என்று அறிய கீழே உள்ள கேள்விகளில் எத்தனை கேள்விகளுக்கு நீங்கள் 'ஆம்' என்று பதில் சொல்லுகிறீர்கள் பார்ப்போம்.

  • நீங்கள் காலையில் எழுந்தவுடன் breakfast-க்கு corn-flakes அல்லது Grits என்பதை போன்று உண்பவரா?
  • உங்களுக்கு கோக் அல்லது பெப்சி இல்லாமல் வாழவே முடியாதா?
  • ஐஸ்கிரீம் சாப்பிடுபவரா?
  • உணவகங்களில் டோமோடோ சூப் அல்லது ஏதேனும் ஒரு சூப் குடிப்பவரா?
  • எந்த உணவுக்கும் ketchup தொட்டு கொள்பவரா?
  • சாக்லேட், பிஸ்கட், Candy சாப்பிடுபவரா?
  • பீர் குடிப்பவரா?
  • விக்ஸ், இருமல் டானிக் எடுத்து கொள்பவரா?
  • சாலட் சாப்பிடும் போது சாலட் டிரெஸ்ஸிங் போட்டுகொள்பவரா?
  • Pizza சாப்பிடுபவரா?
  • பிரட் சாப்பிடுபவரா?

மேலே கேட்கப்பட்ட கேள்விகளில் ஏதேனும் ஒன்றுக்கு நீங்கள் 'ஆம்' என்று பதில் அளித்திருந்தால் நீங்கள் சோளத்திலிருந்து எடுக்கப்படும் சோள சர்க்கரை - High Fructose Corn Syrup (HFCS) என்ற சுவையூட்டியை தினமும் உண்கிறீர்கள் என்று அர்த்தம்.
இந்த சர்க்கரை அதிக ஆபத்தானது. தற்போதைய இளைஞர்கள் மேற்கத்திய கலாச்சாரத்தால் இந்த சர்க்கரை கலந்த உணவுகளை அதிகம் உண்கிறார்கள். இதுகுறித்து இளைம் தலைமுறையினருக்கு பெற்றோருக்கும் விழிப்பு உணர்வு இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.
சோளத்தில் உள்ள கார்போஹைடேரேட் பல வேதியியல் மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு fructose எனப்படும் சர்க்கரையாக மாற்றபடுகிறது. இந்த fructose, corn syrup (100% glucose) உடன் மேலும் சுவையூட்ட சேர்க்கபடுகிறது.
சோளத்தின் விலை கரும்பின் விலையை விட மலிவாதலால் இந்த HFCS மேற்குறிப்பட்ட எல்லா உணவு பொருள்களிலும் சர்க்கரைக்கு பதில் அமெரிக்காவில் முதலில் சேர்க்கபட்டது. தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் உணவுகளிலும் அதிக அளவு இது சேர்க்கப்பட்டு வருகிறது.
சரி, இது நல்ல விஷயம் தானே என்று நினைத்தால், இல்லை!
கரும்பு சர்க்கரையில் இருக்கும் கார்போஹைடேரேட் அளவை விட இந்த சோள சர்க்கரையில் இருக்கும் கார்போஹைடேரேட் அளவு அதிகம் என்பதால், அதில் தயாரித்த உணவை செரிக்க நம்முடைய உடல் அதிக அளவில் இன்சுலின் தயாரிக்க வேண்டி வரும். முடிவு சர்க்கரை வியாதி.
இந்தியாவில் தற்போது இருக்கும் மக்கள் தொகையில் மூன்றில் ஒருவருக்கு சர்க்கரை வியாதி இருப்பதாக புள்ளியியல் தெரிவிக்கிறது. இதிலும் மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கமான இந்த சோள சர்க்கரை உணவுகள் கொண்ட பொருள்களை உண்ண ஆரம்பித்தால் இந்தியாவில் அனைவரும் வெகு விரைவில் சர்க்கரை வியாதிக்காரர்கள் ஆகி விடுவோம்.
இதனை தவிர்க்க என்ன செய்யலாம்?

  •  முடிந்த அளவு HFCS உள்ள பொருள்களை உண்ணாமல் தவிர்க்கலாம்.
  •  கடைகளில் பொருள்களை வாங்கும் போது லேபிள்களை படித்து, அதில் HFCS என்ற பொருள் இருக்கிறதா? என்று பரிசோதித்த பின் வாங்கலாம்.
  •  தவிர்க்க முடியாத காரணத்தால் உண்ண நேர்ந்தால் அளவாக உண்ணலாம்.
  •  தவறாமல் உடற்பயிற்சி செய்யலாம்.

நமது பாரம்பரிய உணவு முறையில் அதிகம் உபயோகபடுத்தபடும் கரும்பு சர்க்கரை, வெல்லம் மற்றும் பனை வெல்லம் போன்றவை இயற்கையானவை. எந்த வேதியியல் மாற்றத்துக்கும் உட்படுத்தபடாதவை ஆகையால் முடிந்த அளவு இயற்கையான இனிப்பை குறித்த அளவு உண்ணுவோம் உடல் நலம்
காப்போம்

                                                                                                                  உபயம் -விகடன் 

Thursday, July 29, 2010

காதலிக்க எங்கே கற்கிறோம் ?

காதலிக்க எங்கே கற்கிறோம் ?

இன்றைக்கு காதலிக்கிறவங்க, காதலை பாடறவங்க , தேடறவங்,க காதல் பின்னாடி ஓடறவங்க எல்லாம் எங்கே ஆரம்பிச்சிருப்பாங்கன்னு பின்னோக்கி பாக்க வேண்டிய சூழலிலே நாம இருக்கோம் .அதை பார்த்து என்ன ஆகா போவதுன்னு நினைக்கறிங்களா ? நெறைய ஆக போகுதுங்க.
படம் பாத்து,புஸ்தகம் படிச்சு ,நண்பர்களை கலந்தாலோசித்து ...இப்படி எல்லாம் சொல்லுவிங்க கண்டிப்பா இல்லைங்க .

"நாம யாரை பார்த்து காதலிக்க கத்துகிறோமின்னு தெரியுமா ? "
"நாம பார்த்த முதல் காதல் ஜோடி யார் தெரியுமா ...? "
நம்ம அம்மா ,அப்பா தாங்க .

இன்னைக்கு நாம் காதலிக்கும் போது வெளிபடுத்துகிற பண்புகளில் பாதி நம்முடைய பால்யத்திலேயே விதைக்கப்பட்டவை.மற்றவை எல்லாம் நீங்க கண்டு ,கேட்டு படித்து பழகியவை மட்டுமே .
காதல் என்றால் நான் ஷாஜஹான் மாதிரி, லைலா-மஜ்னு மாதிரின்னு எல்லாம் உதாரணம் சொல்ல வரலைங்க ...தினமும் பூ கொடுக்கணும் ,போன் பேசணும் ,செலவு செய்யணும் என்பதெல்லாம் கணக்குலே வராதுங்க.துணையை சக உயிராய் மதிப்பது . அட இவளுக்கும் களைப்பு இருக்கும் .சரி வா இந்த வேலையை நாம ரெண்டு பேரும் சேர்ந்து செய்யலாம் என்று வேலையை பகிர்ந்து கொள்வது. நம்மை போலவே இவளுக்கும் பெற்றவர்கள் மேல் பாசம் ,ஏக்கம் எல்லாம் இருக்கும் என்று நினைப்பது .பொண்டாட்டியும் புருஷன் நமக்கு தான் சொந்தமின்னு இல்லாமே , அவரையும் உரிமை கொண்டாடுகிற உடன் பிறப்புகள் இருப்பாங்கனு விட்டு கொடுக்கிறது..... எப்பவும் நான் ஆம்பிள்ளை அப்படின்னு கவுரவம் பாக்காமே, வேற்றுமை பாராட்டமே இருக்கிறது ரொம்ப நல்லதுங்க .(ஆதிகாலத்துலே ஆம்பிளை, பொம்பிளைன்னு ரெண்டு விதமான ஜாதியே கெடையாதாம் ... ஆராய்ச்சி சொல்லுது). குறிப்பா ஊக்குவிப்பது , உழைப்பை பாராட்டுவது இதெல்லாம் ரொம்ப முக்கியமுங்க இந்த வயசுக்கு மேல் இதை இவள் கற்று கொள்கிறாள்.இவளை ஊக்குவிக்க வேண்டுமென்ற எண்ணம் ...நல்ல உள்ளத்தை குறிக்கும்.

இதெல்லாம் நாம எங்கிருந்து கத்துகிட்டோமின்னு யோசிச்சு பாருங்க . நம்ம
அம்மா-அப்பா கிட்டே இருந்து தான் .
.
 ஒரு சில கணவன்மார்கள் மனைவிக்கு என்ன பிடிக்குமின்னு தெரியாமையே அவங்க கூட பல வருஷம் வாழ்ந்து , செத்தும் போயிறாங்க.பொண்டாட்டி ஒரு சின்ன விசயம் பண்ணினா கூட .. தூ இதென்ன பெரிய அதிசயமின்னு பாராட்டாமே இறுமாப்போடு வாழ்ந்து செத்தவனும் இருக்காங்க.அந்த மாதிரி வாழ்க்கையா நாமும் வாழறோமின்னு உங்களை நீங்களே கேட்டு பார்த்துகோங்க.

வாழ்க்கை துணை கூட சண்டை போடாமே இருக்கணும், அவங்க தப்பை தட்டி கேக்காமே ஆதரிக்கணுமின்னுசத்தியமா நான் சொல்ல வரலை. நம்மளோட வாழ்க்கை துணையை சொல்லாலே, செயலாலே முடிஞ்சா வரை அவமதிக்க வேண்டாமின்னு சொல்றேன். இதை ஏன் நான் வாழ்க்கை துணையை மையப்படுத்தி சொல்றேன்னு யோசிக்கறிங்களா ? 
நம்ம ரோட்டுலே போறவனை ,அக்கம்பக்கத்துலே இருக்கிறவனை, அலுவலகத்துலே இருக்கிறவனை, கூட படிக்கிற நண்பர்களை ஓரளவுக்கு நல்லபடியா நடத்த பழகிட்டோம் .காலம் முழுக்க நம்ம கூட வாழ வந்தவர்களை நல்லபடியா நடத்த வேண்டிய அவசியம் நெறைய இருந்தாலும் ,அதுலே முக்கியமான அவசியம் என்னனு சொல்ல வந்திருக்கேன் இங்கே.

இப்போ நம்மாலே நம்ம குழந்தைகளுக்கு நல்ல கல்வி , விளையாட்டு பொருட்கள் ,வசதியான வாழ்க்கை எல்லாமே கொடுக்க முடியும் . ஆனா அதெல்லாம் அவங்க உயிருக்கு சோறு போடாது . காதல் வேற்று பாலினத்தை நேசிப்பது மட்டும் அல்ல , எல்லா உயிர்களுக்கும் முடிந்த வரை துன்பம் இழைக்காமே இருப்பது தான் .அதை அவங்களுக்கு கத்து கொடுக்க வேண்டியது நம்ம கடமை.
இதை ஏன் சொல்றேன்னா.....நம்மளை பார்த்து காதலிக்க கத்துக்க போறது ..நம்ம குழந்தைகள் தாங்க ... அவங்க வாழ்க்கையிலே விளையாடலாமா ...?

உலகம் முழுக்க என்ன நடக்குதுங்கிறதை நாம பேப்பர் ,டி.வி ,இன்டர்நெட் எல்லாத்தையும் கவனிச்சு தெரிஞ்சுக்கிறோம் . ஆனா என்ன பண்றது ? கூட இருக்கிறவங்க மனசை கவனிக்க நமக்கு பொறுமையோ ,நேரமோ இல்லைங்க . அப்படி உக்காந்து கவனிக்கலேனா யாரு பாதிக்கபடுவாங்கன்னு தெரிஞ்சுக்கங்க.

(Opening எல்லாம் நல்லா தான் இருக்கு .. ஆனா finishing சரி இல்லையேப்பா .
நான் எழுதினதை நானே விமர்சனம் பண்ணினா இப்படி தான் இருக்கும்)

Wednesday, July 28, 2010

அம்மா சொன்னது !

1

நான் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் காலங்களில் வயிற்று வலியால் துடித்து கொண்டிருப்பேன் ...
அப்பா இப்படி பரபரப்பார் .. "வாடா ஆஸ்பத்திரிக்கு போகலாம் ... இப்படி கஷ்டப்படறியே "
அம்மாவின் ஒரே வார்த்தை ...எல்லாவற்றையும் தடுத்து விடும் ...
"இதுக்கெல்லாம் இப்போ இருந்தே டாக்டர்கிட்டே போனா அப்புறம் எத்தனைக்கு போறது . இதெல்லாம் இந்த வயசுலே சகஜம் .மாத்திரை சாப்பிட்டு எல்லாம் பழக்க வேண்டாம் ..இந்த வலியெல்லாம் தாங்கி தான் ஆகணும் ... நல்ல சாப்பிட்டா எல்லாம் சரியாய் போகும் ..."


2
பெங்களூரில் ஹாஸ்டலில் தங்கி இருந்த போது நெறைய பிரச்சனைகள் .
வீட்டுக்கு வந்த போது இப்படி சொன்னேன்

"சாப்பாடு சரி இல்லே .. யாரும் தமிழ் பிள்ளைகள் இல்லே ..
மத்த பிள்ளைகள் எல்லாம் கிண்டல்,வம்பு பண்றாங்க ...தனிய இருக்க ரொம்ப மனசு வருத்தமா இருக்குமா ..பேசாமே வீடு எடுத்துரட்டுமா ..?

அப்பா உடனே திட்டமிட துவங்கி விட்டார் ..
நான் வீடு வாடகைக்கு எடுத்தால் ,இங்கிருந்து யார் வந்து என்னோடு தங்குவது என்றெல்லாம் ...

அம்மாவின் பதில் இதுதான் ..
"அதெல்லாம் ஒன்னும் கஷ்டமில்லே ...உன்னாலே உன் ரூம் மேட்டுகளையே அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியலேனா ..நாளைக்கு கல்யாணம் பண்ணி நீ மாமியார் வீட்டுக்கு போனா அங்கே கிண்டல் கேலி , சண்டைன்னு ஆயிரத்தெட்டு வார்த்தை கேக்க வேண்டி இருக்கும் அப்போ என்ன பண்ணுவே ?.அங்கே இருந்து இதே மாதிரி ஓடியாந்திருவியா ...இல்லே தனி குடித்தனம் போலாமின்னு உன் புருஷனை கூப்பிடுவியா ?
உன் புருஷன் நாலஞ்சு பேரோட பொறந்திருந்தா ...அப்போ உன்னை கூட்டிக்கிட்டு தனியா வர முடியுமா ..சூழ்நிலையை யோசிச்சு பாருடா..."

(இப்போ நான் என்ன கேட்டன்... ஒரு வீடு பார்க்கிரன்னு தானே ..
ஏன் இந்த கொலை வெறி ?  இப்படி தான் நினைக்க தோன்றும் ஆரம்பத்தில் )

"நீ நெனச்சா இந்த பிள்ளைகளோட பேசாமே இருந்துக்கலாம் ...பிடிக்கலேன்னா விலகி நின்னுக்கலாம் .. ஆனா கல்யாண வாழ்க்கைலே அப்படி எல்லாம் சாத்தியம் கெடையாதுடா ... முடிஞ்ச வரை 
முடிஞ்ச வரை இந்த ரூமுலயே அட்ஜஸ்ட் பண்ணி இருக்க  பாரு ..
இப்பவே சகிப்புதன்மை வரலேனா பின்னாடி உனக்கு தான் கஷ்டமடா ..."

சத்தியமான வார்த்தைகள்... நான் அனுபவத்தால் ஒத்து கொண்ட உண்மை இ
து. 

அதிரடி வார்த்தைகள் -அப்பா

எல்லாம் தயாரான நிலையில் புறப்படுகிற நாளன்று என் பின்லாந்த் பயணம் , ஒரு மாதம் தள்ளி போயிற்று . ஒரு மாதம் தான் என்றாலும் நான் கல்யாணத்துக்கு 4 நாட்களுக்கு முன்னால் வருகிற மாதிரி சூழ்நிலை அமைந்து விட்டது .கல்யாணம் ஜூன் 3 என்பது 6 மாதங்களுக்கு முன்னரே முடிவு செய்யப்பட்டிருந்தது .
நான் என்ன தான் செய்வது ...?
Recession வந்து ஊரெல்லாம் ... வேலையில்லா திண்டாட்டம் தலை விரித்தாடி கொண்டிருந்த நேரம் ..
வேலையை விட்டுவிட்டு என்ன செய்வது ... ?
விசா தயாரான பின்னால் ,பின்லாந்த் போக முடியாதென்று கடைசியில் மறுப்பது தர்மமும் ஆகாது ..இப்படி எல்லாம் நடக்குமென்று யாரு தான் கனவு கண்டார்கள் ..?
கவலையோடு வீட்டில் உட்காந்திருந்தேன் . அப்பா வந்தார் ...
"ஏன்டா இப்படி கன்னத்துலே கை வச்சு உட்காந்திருக்கே ?" ..
"பின்லாந்த் போனா நான் கல்யாணத்துக்கு நாலு நாள் முன்னாடி தான் வர வேண்டி இருக்கும் .. அதை நெனச்ச தான் பயமா இருக்கு "
"நாலு நாள் முன்னாடி வந்துருவில்லே .. அப்றோம் என்ன ...ஒரு மாசம் முன்னாடியே வந்து ,நீ ஒருத்தன் தூக்கி நிறுத்தற மாதிரி ஒரு வேலை கூட இல்லியே"டா என்று சிரித்தார்
"சிரிக்காதிங்க !அப்படினா கூட பரவாயில்லையே ..ஏதாவது நடந்து சரியான நேரத்துக்கு வர முடியலினா என்ன பண்றது ..."?
"இதுக்கு முன்னாடி போயிருந்தா கூட என்னென்ன பிரச்சனை வரும் ஒரு அறிவு தெளிவு இருக்குமில்லே ?இப்போ நான் என்ன பண்ணுவேன் ?எல்லாம் ஒரே நேரத்துலே நடக்குது" என்று புலம்பி கொண்டிருந்தேன்
"இங்க பாருடா ...இதுக்கெல்லாம் போயி கவலைப்படாதே ..மூணாம் தேதி காலையிலே வரைக்கும் வர முயற்சி பண்ணு ..இல்லாட்டி பாத்துக்கலாம் " என்று முடித்தார் ..
"இல்லாட்டி ..."( எதையும் எடக்கா தானே கேப்போம் )
 "இல்லாட்டி என்ன ? கல்யாணத்தை நிறுத்தி விடுகிறேன் .இதுக்கு போயி கவலைப்பட்டுகிட்டு ?'
நான் ஆச்சரியப்பட்டு தான் போனேன் ... எந்த தகப்பனும் சொல்லிவிட முடியாத வார்த்தை ..
என் வாழ்நாள் சேமிப்பை செலவு செய்து கல்யாணம் செய்கிறேன் ,இன்னும் ஒரு மாசத்தில் கல்யாணத்தை வச்சுக்கிட்டு இப்போ என்ன வெளிநாடு சவாரி .. என்று தடுக்கிற அப்பாக்களை தான் நான் பார்த்திருக்கிறேன் ..

என் கல்யாண நிச்சயதார்த்தத்துக்கும் நான் இருக்க முடியாது என்பது அவருக்கு தெரியும். சம்பந்தி வீட்டுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும் என்பதை பற்றி சிறிதும் கவலைப்படாது ..என் ஆசைக்கு மதிப்பு கொடுத்தவர் ...
"கல்யாணத்துக்கு அப்புறம் போக சந்தர்ப்பம் கெடைக்குமான்னு தெரியலே ... பரவாயில்லே போய்ட்டு போறா ... அதெல்லாம் தைரியமா போய்ட்டு நல்லபடியா வந்துருவா "..என்று ஒரே வாக்கியத்தால் யாரும் பேசமுடியாதபடி செய்துவிட்டார் ..

அப்பா தந்த தைரியம்

ஆபீஸ் விஷயமாக உடனடியாக நான் ஒரு மாதம் பின்லாந்த் போக வேண்டி இருந்தது.நான் மட்டும் தனியாக செல்ல வேண்டி இருந்தது . இது என்னுடைய முதல் வெளிநாட்டு பயணம் .எங்கள் ப்ராஜெக்ட் மக்கள்(office colleagues) யாருமே அங்கே இல்லாதது வேறு, எனக்கு சிறு பயத்தை உண்டாக்கி இருந்தது ..
ஒரு புது இடத்துக்கு பஸ்ஸில் ,ரயிலில் போவது என்றால் , அந்த இடத்தை பற்றி எல்லாரிடமும் ஆலோசனை கேட்டு ,பயணிக்கிற தூரத்தை எல்லாம் கணக்கு போட்டு ஏதாவது செய்யலாம்.
தெரிஞ்சவங்க யாருமே இல்லாத ஊருலே இங்கிலிஷை மட்டும் வச்சு எப்படி தான்டா பொழப்பு நடத்தறதுனு யோசனையா இருந்துச்சு.
பயண தேதி ,விசா எல்லாம் வந்த பின்னால் ,ஊருக்கு போயிருந்த போது அப்பாவிடம் இதை பற்றி சொன்னேன் ..
"கொஞ்சம் பயமா இருக்குங்க" ..
"என்னடா பயம் எல்லா ஊருலயும் மனுஷங்க தான்டா இருக்காங்க ..அப்புறம் என்ன உனக்கு வாய் இருக்குல்லே ,ஏதாவது உதவின்னா பார்க்கிறவர்களை கேளு ".. பேசியவாறே கொஞ்சம் யோசனையாய் கேட்டார் 
"ஏன்? ..அங்கே வேற ஏதாவது மொழி பேசறாங்களா "..
"இல்லே ,இங்கிலிஷும் பேசுவாங்க ..." இதற்கு மேல் இவரிடம் நான் எதை பேச முடியும் ... 
"போடா தைரியமா போய்ட்டு வா ...ஒன்னும் பிரச்சனை இல்லே "
நிதர்சனமான வார்த்தைகள் ...
அப்பா படிக்கவில்லை ...அதற்காக எனக்கு நெருக்கடி வருகிற நேரங்களில் எல்லாம் சரியான ஆறுதலை சொல்லாமல் இருந்ததில்லை ..

Friday, July 23, 2010

நானா கத்துக்கிட்ட பாடம் -1

நான் M.Sc (2002 )படித்து கொண்டிருந்த போது கொடைக்கானல் சுற்றுலா போயிருந்தேன் .நீங்க நெனைக்கற மாதிரி இது ஊரை சுத்தி பார்க்கிற சுற்றுலா இல்ல.நெறைய ஸ்கூல் பசங்களை கூப்பிட்டு வச்சு அடர்ந்த காட்டை கொஞ்சம் சுற்றி காட்டி ,இயற்கையை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை பற்றி ஒரு விழிப்புணர்வு கொடுப்பாரு நம்ம பேராசிரியர் கந்தசாமி அவர்கள்.

எப்பவுமே அவரு ஏரிகரையோரமா தான் டென்ட் போடுவாரு. இந்த பய புள்ளைக எல்லாம் என்ன பண்றாங்க ? ஒழுங்கா வரிசைலே போறாங்களானு  பாக்கவும் ,அவங்க சத்தம் போடாமே இருக்கவும் பேராசியருக்கு உதவியா போறது தான் எங்க வேலை. மொத்தம் நாலு நாள் கேம்ப் அது .

 ஒரு நாள் அதிகாலையிலே எழுந்து ஏரி கரையோரமா நின்னு புகைப்படம் எடுத்துகிட்டு இருந்தேன் . கேம்ப்புக்கு வந்த ஸ்கூல் பசங்களோட வாத்தியாருங்க( டீச்சரம்மாக்கள் 2 பேரு+  வாத்தியாருங்க 2 பேரு ) நாலு பேரும் பேசிக்கிட்டே நடந்து வந்தாங்க. நான் நின்னுகிட்டிருந்த எடத்துலே இருந்து ஒரு ரெண்டடி தள்ளி ஒரு படகு இருந்துச்சு.அதை பார்த்தவுடனே நாலு பேருல ஒரு வாத்தியாரு படகை எடுத்துகிட்டு அப்படியே ஆற்றுலே கொஞ்ச தூரம் உலா போய்ட்டு வரலாமின்னு யோசனை சொன்னாரு .

நான் ஏற்கனவே அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் அப்டிங்கற மாதிரி யாராவது படகுலே கூட்டிட்டு போக மாட்டங்களானு காத்துகிட்டு இருந்தேன். உடனே நான் ஓடி போயி பேராசிரியருக்கிட்டே அனுமதி கேட்டுட்டு வந்து அவங்க ஜோதி-ல ஐக்கியமாயிட்டேன்.ரெண்டு வாத்தியாருங்க துடுப்பு போட்டாங்க. மத்த ரெண்டு டீச்சர்களும் நானும் பேசிக்கிட்டே போனோம். போகும் போது காத்து சரியா அடிச்சதாலே சுலபமா துடுப்பு போட்டாங்க. 

கொஞ்ச நேரம் கழிச்சு பாத்தா ரொம்ப தூரம் வந்துட்டது தெரிஞ்சது. சரி திரும்பி போகலாமின்னு துடுப்பு போடா ஆரம்பிச்சா.. படகு நகர்ந்தா தானே.காத்து எங்களை ஒரு திசையில் தள்ளிகிட்டே இருந்துச்சு. துடுப்பு போட்டுக்கிட்டு இருந்த ஒருத்தர் கையை விரிச்சுட்டாரு ..நம்மளாலே இனிமே போடமுடியாதுன்னு ..உதவிக்கு யாரையாவது கூப்பிடலாமின்னு பாத்தா கரையை விட்டு ரொம்ப தூரம் இருந்தோம் .இப்போ மாதிரி அப்போ ரூவாய்க்கு ரெண்டு செல்போன் எல்லாம் கெடையாது. அப்படியே இருந்தாலும் அங்கே டவர் கெடச்சிருக்காது. மாத்தி மாத்தி எல்லாரும் ஆளாளுக்கு புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க.

அதுலே ஒருத்தர் இப்படி பொலம்பினாரு ."ஒரு கல்யாணம் கூட ஆகாமே இப்படி சாக போறோமேன்னு",.(அப்போ அவருக்கு கல்யாணம் எவ்வளவு கஷ்டமின்னு தெரியலே போல.. கல்யாணம் பண்ணினதுக்கு அப்புறம் இப்படி எல்லாம் கவலை பட தேவை இருக்காது . யோசிக்காமே குதிச்சிருப்பாரு !!ஹைய்யோ ,ஹைய்யோ )..
"அட பாவிகளா நீங்களாவது வேலைல சேர்ந்து நாலு காசு சம்பாரிக்கறிங்க... நான் இன்னும் படிப்பையே முடிக்கலியேடா.உலா போக ஆசைப்பட்டு இப்படி உயிர் போக போகுதே " , இப்படி உள்ளுக்குளே பொலம்பிகிட்டு இருந்தேன். 

அந்த ஏரி ஒரு பதினைந்து அடி ஆழம் இருக்கும். கொடைக்கானல் குளிருக்கு தண்ணில விழுந்தவுடனே ஜல சமாதி தான். நீச்சல் தெரிஞ்சவங்களுக்கே இந்த நெலமை தான்னா .. எனக்கெல்லாம் யாராவது பேப்பர்ல நீச்சலுனு எழுதினாதான் தெரியும் ...இதுல நான் எங்க போயி பிழைக்கறது?
என்னை பத்தி நானே பெருமையா சொல்லிக்க கூடாது தான்.. என்னங்க பண்றது?. நாங்க எல்லாம் கால் நனைக்கற அளவு இருந்த தண்ணிலயே மூழ்கினவங்க. 

ஆனா இவ்வளவு சலசலப்புக்கும் , அந்த படகு கொஞ்சம் கூட அசரலியே..
துடுப்பு போடலேன்னா படகு நகராதே ஒழிய கவிழாது அப்படிங்கறதே எங்க யாருக்கும் அந்த பதட்டத்துலே ஞாபகம் வரலே. கொஞ்ச நேரத்துலே காத்தடிக்கிறது கொறஞ்சது .. அப்படியே ஐலசா எல்லாம் போட்டு,எப்படியோ போராடி ...படகை கரைக்கு கொண்டு வந்து சேத்துட்டோம்.என்ன? ஆசையா போன படகு சவாரி ...ஒன்றரை மணி நேரம் கழிச்சு வர வேண்டியதா போச்சு.

நேரா பேராசிரியர்க்கிட்டே போயி ..சூழ்நிலையை சொன்னேன்..
அவரு உடனே "நானும் பாத்துகிட்டு தான் இருந்தேன்" அப்படினாரு.எனக்கு வந்ததே கோபம். 

"இந்நேரம் அந்த படகு கவிழ்ந்திருந்தா" ...?

"கஷ்டம் தான். யாரையும் காப்பாத்தி இருக்க முடியாது ..காப்பாத்த ஆளுங்க வரதுக்குள்ளே எல்லாமே முடிஞ்சுருக்கும்.ஆனா ...." (என்ன வில்லத்தனம் பாருங்க? )

"அப்போ ஏன் நாங்க கெளம்பும் போதே நீங்க தடுக்கலே" ..

"பொறு .. நான் இன்னும் முடிக்கலே.. ஆனா அந்த படகை பத்தி எனக்கு தெரியும் அது அவ்வளவு சீக்கிரம் கவிழாது .ரெண்டு நாளானாலும் அது மிதந்திட்டு தான் இருக்கும்".
ஹேய் ! என்ன சின்னபுள்ளைத்தனமா .. போ போ போயி பொழப்பை பாரு அப்படிங்கற மாதிரி அவரு எந்திரிச்சு போயிட்டாரு.

இங்கதான் நான் ஒரு விசயத்தை புரிஞ்சுக்கிட்டேன். ஒரு சில விசயங்களை பாத்து தேவை இல்லாமே பயப்படுறதை விட்டேன் . என்னதான் ஏரி ஆழமாகவும் ஆபத்தாகவும் இருந்தாலும் படகை அவர் புரிஞ்சுகிட்ட மாதிரி நாமளும் ஓரளவுக்கு சூழ்நிலையை புரிஞ்சு, நம்ம சக்திக்கு உட்பட்ட அளவு ரிஸ்க் எடுக்கலாமின்னு தெரிஞ்சது.

பெங்களூர்-ல இருந்து ஒவ்வொரு வெள்ளிகிழமையும் தனியா அரசாங்க பஸ்சுலே அதுவும் நைட்டுலே வர்றவங்க போறது ரிஸ்க் தான் .வெள்ளிகிழமை எப்பவும் கூட்டமா இருக்கும் . அதுலயும் நம்மளை மாதிரி வர்றவங்க நெறைய பேரு . காலையிலே இருந்து ஆணி புடுங்கின களைப்புலே தூங்கறவங்க ஜாஸ்தி .யாரும் அந்த இரவு பயணத்தை ஆபத்தாக்க மாட்டாங்க. ஆனா எப்பவும் எந்த பஸ் ஸ்டாண்டுலேயும் எறங்கி தனியா தான் நிக்க கூடாதுங்கிறதை புரிஞ்சுகிட்டேன் ... பஸ்சுக்குள்ளே இருக்கிறது தான் கொஞ்சமாவது பாதுகாப்பு .

எதுக்கு இப்படி தேவை இல்லாத ரிஸ்க் எடுத்துக்கிட்டு? பஸ்சுலே எப்போவும் முன்பதிவு பண்ணி தான் போவேன்னு சொல்றவங்களுக்கு நான் சொல்ல வந்த கருத்தை இப்படி பின் வருமாறு சொல்றேன் கேட்டுக்கோங்க .

For Example- கம்ப்யூட்டர் படிப்பு படிச்சதாலே நெறைய பேருக்கு பங்கு சந்தையை பத்தி நல்ல விதமா தெரியாது . அதுலே ஈடுபடவும் தயக்கம் .ஏன்னா அதுக்கு முன்னாடி அதுலே பணத்தை விட்டவங்க சொல்ற கருத்து தான். ஆனா பங்கு சந்தையை பத்தி அடிப்படை விஷயங்கள் தெரிஞ்சுகிட்டு ,நீண்ட கால முதலீடு பண்ணும் போது பங்கு சந்தையும் ஒரு ஆரோக்கியமான விஷயம் தான் . கண்டிப்பா ஆபத்தான விசயம் கெடையாது.

மக்களே, இதுனாலே நான் சொல்ற கருத்து என்னன்னா ..

"தேவை இல்லாத பயத்தை ஓரம் கட்டி வையுங்க. எந்த ஒரு ஆபத்தான விசயத்திலயும் measurable risk எடுக்கலாம்"