Wednesday, August 19, 2009

நான் நானாய் ???????

நான் நானாய் இருக்கிறேன்
இது அனைவரையும் ஆச்சிரியப்படுத்துகிறது
இதற்கு நான் என்ன செய்வது ?
என்கிறாய் நீ
உனக்கு தெரியுமா ???
நம் இருவரில்
யாரோ ஒருவர் தான் அப்படி வாழ முடியும்
அதிலும் நீ அதிர்ஷ்டசாலி ..
ஆணாய் பிறந்ததினால் !!!!!!!!!!!!!!
குடும்பத்துக்கான வரைமுறைகள்,நடைமுறைகள்
எதுவும் உன்னை கட்டுப்படுத்தி விட முடியாததாய்
அதையும் விட

நல்லவையோ கெட்டவையோ ....
உன் கருத்துகளுக்கு செவிமடுத்து
பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும்

உன் செயல்கள்
எல்லாவற்றையும் ஏற்று கொண்டு
சகிப்பு தன்மையின் சான்றாய் ......
என் விருப்பு வெறுப்புகள் மறைத்து
உன்
தீர்மானிக்கப்பட்ட முடிவுகளின் பாதையில்
பயணம் செய்ய
நான் என் வாழ்க்கையையே விலையாய் கொடுத்திருகிறேன் !!!!

Tuesday, July 21, 2009

வீடு காலி செய்கையில்

வீடு காலி செய்கையில்
எல்லாவற்றையும்
எடுத்து வந்து விட்டதாய் தான் தோன்றிற்று
அறுந்த செருப்பு முதல்
அழுக்கு துணி போடும் கூடை வரை ......
இடம் பெயர்க்க முடியாத பொருளென்று
எதுவுமில்லை என் அறையில்
கடைசியாய் ..கிளம்பும் போது தான் கவனித்தேன்
நான் எத்தனை முயன்றாலும்
எடுத்து போக முடியாதவை எவை என
நாம் முழுமையாய் வாழ்ந்த நாட்களின் சந்தோஷம்
அடுத்த வீட்டர் கண்டிக்க
கிண்டலும் கேலியுமாய் ஒலிக்கும்
நம் பேச்சு குரல்கள் ...
உட்கார்ந்தது, உறங்கியது
ஓடி பிடித்து விளையாடியது ,சண்டையிட்டது என
சில தடயங்கள்
அழித்து விட முடியாததாய்..
ஆசையோடு அள்ளி எடுக்க முடியாததாய் ...

உனக்காக .....

என்னை
இந்த ஊர் மட்டும் அல்ல
நானே மதிக்கவும்
மரியாதை செய்யவும் கற்று கொண்டது
உன்னை நேசிக்க ஆரம்பித்த பின் தான் ... !!!!!!!!!

என்னை அறிந்த சிலரும்
உன்னை விட
என்னை விட
அதிகமாய் .........
உன் மீதான என் அன்பை அறிவர் !!!!!!!!

எனக்கு நீயும்
உனக்கு நானும்
சொல்லி கொள்ளுகிற உண்மை
எப்பொழுதும் உனக்காக நான் வாழவில்லை
எனக்காக ....
உன்னை நேசித்திருக்கிறேன் !!!!!!!!

சந்தித்த வேளை

உங்களை சந்தித்த நிமிடம்
எனக்கு இன்னும் ஞாபகபடுத்துகிறது
ஒவ்வொரு முறை
புதிதாய் ஒரு
பள்ளியிலோ,கல்லூரியிலோ சேர்ந்த
முதல் நாளை ............

இந்த போன் கால்கள்
அப்புறம் சில மெயில்-கள்
போட்டோ பரிமாற்றங்கள்
சின்ன சின்ன வாக்குவாதங்கள்

வெகு தூரம் போக வேண்டிய பயணத்துக்கு தயாராகும்
விளையாட்டு பிள்ளைகளாய்
அதிகமாய் ஒன்றும் தோன்ற வில்லை.

மெலிதாய் ஒரு சிநேகம்
சொல்ல தெரியாத ஒரு சந்தோஷம்
எந்த நேரத்திலும் காயபடுத்திவிட கூடாதென்ற கவனம்
உண்மைகள் சொல்லவும், ஏற்று கொள்ளவும் ஒரு தைரியம்
இத்தனை வருட சுதந்திரம் மூச்சு திணறுமோ என்கிற பயம்
எதிர்காலத்தை நினைக்கும் போதெல்லாம்
எப்போதுமில்லாத குழப்பங்கள்

Friday, July 17, 2009

வனவாசம்

இருபது,இருபத்தி ஐந்து வருட வாழ்க்கை
இட்டதே கட்டளை.. என
இளவரசியாய் ஆண்டு ....
உண்பதும் , உறங்குவதும்
செல்வாக்காய் செய்து .....
என் மகள் கடலை தாண்டுவாள்
கரையை அளப்பாள் என
ஈன்ற பொழுதுக்கு பெருமை சேர்த்து ....
பார்ப்பவர் பாராட்ட
பட்டங்கள் ,பதவிகள் கொண்டு ...
சிரிப்பு , சிணுங்கல்
என சின்னதொரு அகராதியே
பெற்றோரிடத்து விட்டு வைத்து ...
உற்றாரும் சுற்றமும் வாழ்த்த
ஒரு மகராஜன் கழுத்துக்கு
மாலையாக போகிறோம் - வந்தவள்
வாடினால் என்ன ,வருத்தப்பட்டால் என்ன
எதையும் கண்டுகொள்ளாது ...
சூடி இருப்பதே
கடமையென வாழும் சுந்தர புருஷர்கள்
கண்ணாய் வளர்த்தவர்களை பிரிந்து
கண்ணீர் விடுகையிலும்
வேரோடு பிடுங்கி
நம்மை வேறிடம் நடுகிற பாவனையில் நிற்பதென்ன .....
மனைவியின் கருத்தை கேட்பதே
மரியாதை குறைவாய் நினைத்து
நடக்கும் நாடறிந்த நல்லவர்கள் ......
ஊரில் உள்ளவரிடத்தெல்லாம் ஏமாந்த போதும்
ஒருவன் பெற்ற மகளை
உரிமையோடு ஏமாற்ற பிறந்தவர்கள் ....

உலகமெல்லாம் சுற்றி வந்த போதும்
ஒரு நிமிடம் ஓய்வாய் கண்ணயர ...
ஒய்யாரமாய் குதித்தாட
தத்தம் வீடு போல் உண்டா ....என்று
தத்துவம் பேசினாலும்
மாமியார் வீட்டில்
அரை நொடி தாமதம் என்றாலோ
மனைவியை... வாவென்று.....
வாசலில் நின்று
ஏலம்போடுகிற எஜமானர்கள் .....

கட்டியவள் காயச்சலில் கிடந்தாலும்

களைத்து நடந்தாலும் .....
எப்படி இருக்கிறதென கேட்பதற்கு
நானிருக்கிறேன் என்று
நம்பிக்கை கொடுப்பதற்கு
எது தடுக்கிறதோ தெரியவில்லை ..... இவர்களை !!

ஏன் என்று கேட்டாலோ
எதுவும் எனக்கு தெரியாது
இதெல்லாம் பழக்கமில்லை என
வளர்ந்த சூழ்நிலையும் ,
வருகிற காலத்தையும் காரணம் காட்டி
தப்பித்து கொள்ளும்
இந்த மன்னாதி மன்னர்கள் உடன்
தேசத்தை இழந்து ,
தெருவோடு ...
வனவாசம் வந்தவர்களாய் நாம் !!!!!!

அகதி- ஒரு கருத்து

குடும்ப அட்டையும் ,வாக்காளர் அட்டையும்
இல்லாதிருந்தால்
இந்திய தேசத்தில்
எத்தனையோ பெண்கள்
பிறந்த மண்ணில் அகதிகளாய்
அஹறிணை பொருட்களில்
ஒன்றாய் கலந்திருப்பர்

அரசாங்கத்திற்கு நன்றி !!!

Wednesday, June 17, 2009

பெண் மக்கள்


கழுத்தில் தாலி ஏறியவுடன் பெண் மக்கள் வாழ்க்கை, இன்பமும் துன்பமும் கலந்து இனம் புரியாத பெரும் மாற்றங்களை சந்தித்து விடுகிறது .தத்தம் அனுமதி இல்லாமலே வெவ்வேறு சூழ்நிலைகளுக்கு பொருந்தி போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது . பொறுத்து போ என்கிற அறிவுரை மட்டும் பொழுதுக்கும் செலுத்தப்படுகிறது. ஆண்மக்களுக்கு அத்தகைய பொறுப்பு சிறிதுமில்லை . எப்போதும் போல் அவர்களுக்கு வாழ்க்கை நகர்கிறது .

வேலை தவிர்த்து எதற்காகவேனும் வேற்று இடம் புகுகிற கட்டாயங்களை கணவன்மார்கள் சந்திக்க அவசியமிருப்பதில்லை. இந்த சமூகத்தின் சட்டம் எத்தகைய கொடியது பாருங்கள்.

விடுமுறை நாட்களில் கூட மாமனார் வீட்டு வாசலில் மனைவியை விட்டுவிட்டு ஓடி போகிற சுதந்திரம் அவர்களுக்கு வாய்த்திருக்கிறது .

முறையீடு

அரசன் மகளே ஆனாலும் புருஷன் வீட்டில் பொண்டாட்டி தான் என்பார்கள் .
மனைவியை மகராணியை போல் நடத்த வேண்டாம் ..ஆனால் எத்தனை கணவன்மார்கள் மனைவியின் திறமைகள் அறிந்தவராய் இருக்கின்றனர் ? எத்தனை தூரம் அவளை மதிக்கிற மதி படைத்தவராய் நிற்கின்றனர் ? அவள் கருத்தும் என்னவென்று கேட்கிற செவி கொண்டவர் எத்தனை பேர் ? பெயரளவில் பெருமிதமாய் நடத்தபடுகிற அவலமே அதிகம் !!!!
அடுத்த நிமிடம் என்ன செய்ய போகிறோம் என்பது கூட தெரியாமலே காற்றின் அசைவுக்கு இழுக்கப்படுகிற படகை போல் மனைவிமார் வாழ துவங்கி விடுகின்றனர்.
இங்கே நான் பேசுவது பெண் அடிமைத்தனம் பற்றி அல்ல ...
ரத்தமும் ,சதையும் மட்டுமின்றி உணர்வுகள்,கனவுகள் ,லட்சியங்கள் என ஒரு கலவையில் செதுக்கப்பட்ட மனித உயிர் மனைவியாய் நிற்பது புரிய வேண்டும். ஒருவர் கருத்தை இன்னொருவர் வாழ்கையில் சுயத்தை இழக்க நேரிடும் தான் .சுயத்தை இழப்பது சுகமாயிருக்க வேண்டும் ..வலிக்க கூடாது.