Wednesday, July 28, 2010

அம்மா சொன்னது !

1

நான் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் காலங்களில் வயிற்று வலியால் துடித்து கொண்டிருப்பேன் ...
அப்பா இப்படி பரபரப்பார் .. "வாடா ஆஸ்பத்திரிக்கு போகலாம் ... இப்படி கஷ்டப்படறியே "
அம்மாவின் ஒரே வார்த்தை ...எல்லாவற்றையும் தடுத்து விடும் ...
"இதுக்கெல்லாம் இப்போ இருந்தே டாக்டர்கிட்டே போனா அப்புறம் எத்தனைக்கு போறது . இதெல்லாம் இந்த வயசுலே சகஜம் .மாத்திரை சாப்பிட்டு எல்லாம் பழக்க வேண்டாம் ..இந்த வலியெல்லாம் தாங்கி தான் ஆகணும் ... நல்ல சாப்பிட்டா எல்லாம் சரியாய் போகும் ..."


2
பெங்களூரில் ஹாஸ்டலில் தங்கி இருந்த போது நெறைய பிரச்சனைகள் .
வீட்டுக்கு வந்த போது இப்படி சொன்னேன்

"சாப்பாடு சரி இல்லே .. யாரும் தமிழ் பிள்ளைகள் இல்லே ..
மத்த பிள்ளைகள் எல்லாம் கிண்டல்,வம்பு பண்றாங்க ...தனிய இருக்க ரொம்ப மனசு வருத்தமா இருக்குமா ..பேசாமே வீடு எடுத்துரட்டுமா ..?

அப்பா உடனே திட்டமிட துவங்கி விட்டார் ..
நான் வீடு வாடகைக்கு எடுத்தால் ,இங்கிருந்து யார் வந்து என்னோடு தங்குவது என்றெல்லாம் ...

அம்மாவின் பதில் இதுதான் ..
"அதெல்லாம் ஒன்னும் கஷ்டமில்லே ...உன்னாலே உன் ரூம் மேட்டுகளையே அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியலேனா ..நாளைக்கு கல்யாணம் பண்ணி நீ மாமியார் வீட்டுக்கு போனா அங்கே கிண்டல் கேலி , சண்டைன்னு ஆயிரத்தெட்டு வார்த்தை கேக்க வேண்டி இருக்கும் அப்போ என்ன பண்ணுவே ?.அங்கே இருந்து இதே மாதிரி ஓடியாந்திருவியா ...இல்லே தனி குடித்தனம் போலாமின்னு உன் புருஷனை கூப்பிடுவியா ?
உன் புருஷன் நாலஞ்சு பேரோட பொறந்திருந்தா ...அப்போ உன்னை கூட்டிக்கிட்டு தனியா வர முடியுமா ..சூழ்நிலையை யோசிச்சு பாருடா..."

(இப்போ நான் என்ன கேட்டன்... ஒரு வீடு பார்க்கிரன்னு தானே ..
ஏன் இந்த கொலை வெறி ?  இப்படி தான் நினைக்க தோன்றும் ஆரம்பத்தில் )

"நீ நெனச்சா இந்த பிள்ளைகளோட பேசாமே இருந்துக்கலாம் ...பிடிக்கலேன்னா விலகி நின்னுக்கலாம் .. ஆனா கல்யாண வாழ்க்கைலே அப்படி எல்லாம் சாத்தியம் கெடையாதுடா ... முடிஞ்ச வரை 
முடிஞ்ச வரை இந்த ரூமுலயே அட்ஜஸ்ட் பண்ணி இருக்க  பாரு ..
இப்பவே சகிப்புதன்மை வரலேனா பின்னாடி உனக்கு தான் கஷ்டமடா ..."

சத்தியமான வார்த்தைகள்... நான் அனுபவத்தால் ஒத்து கொண்ட உண்மை இ
து. 

அதிரடி வார்த்தைகள் -அப்பா

எல்லாம் தயாரான நிலையில் புறப்படுகிற நாளன்று என் பின்லாந்த் பயணம் , ஒரு மாதம் தள்ளி போயிற்று . ஒரு மாதம் தான் என்றாலும் நான் கல்யாணத்துக்கு 4 நாட்களுக்கு முன்னால் வருகிற மாதிரி சூழ்நிலை அமைந்து விட்டது .கல்யாணம் ஜூன் 3 என்பது 6 மாதங்களுக்கு முன்னரே முடிவு செய்யப்பட்டிருந்தது .
நான் என்ன தான் செய்வது ...?
Recession வந்து ஊரெல்லாம் ... வேலையில்லா திண்டாட்டம் தலை விரித்தாடி கொண்டிருந்த நேரம் ..
வேலையை விட்டுவிட்டு என்ன செய்வது ... ?
விசா தயாரான பின்னால் ,பின்லாந்த் போக முடியாதென்று கடைசியில் மறுப்பது தர்மமும் ஆகாது ..இப்படி எல்லாம் நடக்குமென்று யாரு தான் கனவு கண்டார்கள் ..?
கவலையோடு வீட்டில் உட்காந்திருந்தேன் . அப்பா வந்தார் ...
"ஏன்டா இப்படி கன்னத்துலே கை வச்சு உட்காந்திருக்கே ?" ..
"பின்லாந்த் போனா நான் கல்யாணத்துக்கு நாலு நாள் முன்னாடி தான் வர வேண்டி இருக்கும் .. அதை நெனச்ச தான் பயமா இருக்கு "
"நாலு நாள் முன்னாடி வந்துருவில்லே .. அப்றோம் என்ன ...ஒரு மாசம் முன்னாடியே வந்து ,நீ ஒருத்தன் தூக்கி நிறுத்தற மாதிரி ஒரு வேலை கூட இல்லியே"டா என்று சிரித்தார்
"சிரிக்காதிங்க !அப்படினா கூட பரவாயில்லையே ..ஏதாவது நடந்து சரியான நேரத்துக்கு வர முடியலினா என்ன பண்றது ..."?
"இதுக்கு முன்னாடி போயிருந்தா கூட என்னென்ன பிரச்சனை வரும் ஒரு அறிவு தெளிவு இருக்குமில்லே ?இப்போ நான் என்ன பண்ணுவேன் ?எல்லாம் ஒரே நேரத்துலே நடக்குது" என்று புலம்பி கொண்டிருந்தேன்
"இங்க பாருடா ...இதுக்கெல்லாம் போயி கவலைப்படாதே ..மூணாம் தேதி காலையிலே வரைக்கும் வர முயற்சி பண்ணு ..இல்லாட்டி பாத்துக்கலாம் " என்று முடித்தார் ..
"இல்லாட்டி ..."( எதையும் எடக்கா தானே கேப்போம் )
 "இல்லாட்டி என்ன ? கல்யாணத்தை நிறுத்தி விடுகிறேன் .இதுக்கு போயி கவலைப்பட்டுகிட்டு ?'
நான் ஆச்சரியப்பட்டு தான் போனேன் ... எந்த தகப்பனும் சொல்லிவிட முடியாத வார்த்தை ..
என் வாழ்நாள் சேமிப்பை செலவு செய்து கல்யாணம் செய்கிறேன் ,இன்னும் ஒரு மாசத்தில் கல்யாணத்தை வச்சுக்கிட்டு இப்போ என்ன வெளிநாடு சவாரி .. என்று தடுக்கிற அப்பாக்களை தான் நான் பார்த்திருக்கிறேன் ..

என் கல்யாண நிச்சயதார்த்தத்துக்கும் நான் இருக்க முடியாது என்பது அவருக்கு தெரியும். சம்பந்தி வீட்டுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும் என்பதை பற்றி சிறிதும் கவலைப்படாது ..என் ஆசைக்கு மதிப்பு கொடுத்தவர் ...
"கல்யாணத்துக்கு அப்புறம் போக சந்தர்ப்பம் கெடைக்குமான்னு தெரியலே ... பரவாயில்லே போய்ட்டு போறா ... அதெல்லாம் தைரியமா போய்ட்டு நல்லபடியா வந்துருவா "..என்று ஒரே வாக்கியத்தால் யாரும் பேசமுடியாதபடி செய்துவிட்டார் ..

அப்பா தந்த தைரியம்

ஆபீஸ் விஷயமாக உடனடியாக நான் ஒரு மாதம் பின்லாந்த் போக வேண்டி இருந்தது.நான் மட்டும் தனியாக செல்ல வேண்டி இருந்தது . இது என்னுடைய முதல் வெளிநாட்டு பயணம் .எங்கள் ப்ராஜெக்ட் மக்கள்(office colleagues) யாருமே அங்கே இல்லாதது வேறு, எனக்கு சிறு பயத்தை உண்டாக்கி இருந்தது ..
ஒரு புது இடத்துக்கு பஸ்ஸில் ,ரயிலில் போவது என்றால் , அந்த இடத்தை பற்றி எல்லாரிடமும் ஆலோசனை கேட்டு ,பயணிக்கிற தூரத்தை எல்லாம் கணக்கு போட்டு ஏதாவது செய்யலாம்.
தெரிஞ்சவங்க யாருமே இல்லாத ஊருலே இங்கிலிஷை மட்டும் வச்சு எப்படி தான்டா பொழப்பு நடத்தறதுனு யோசனையா இருந்துச்சு.
பயண தேதி ,விசா எல்லாம் வந்த பின்னால் ,ஊருக்கு போயிருந்த போது அப்பாவிடம் இதை பற்றி சொன்னேன் ..
"கொஞ்சம் பயமா இருக்குங்க" ..
"என்னடா பயம் எல்லா ஊருலயும் மனுஷங்க தான்டா இருக்காங்க ..அப்புறம் என்ன உனக்கு வாய் இருக்குல்லே ,ஏதாவது உதவின்னா பார்க்கிறவர்களை கேளு ".. பேசியவாறே கொஞ்சம் யோசனையாய் கேட்டார் 
"ஏன்? ..அங்கே வேற ஏதாவது மொழி பேசறாங்களா "..
"இல்லே ,இங்கிலிஷும் பேசுவாங்க ..." இதற்கு மேல் இவரிடம் நான் எதை பேச முடியும் ... 
"போடா தைரியமா போய்ட்டு வா ...ஒன்னும் பிரச்சனை இல்லே "
நிதர்சனமான வார்த்தைகள் ...
அப்பா படிக்கவில்லை ...அதற்காக எனக்கு நெருக்கடி வருகிற நேரங்களில் எல்லாம் சரியான ஆறுதலை சொல்லாமல் இருந்ததில்லை ..

Friday, July 23, 2010

நானா கத்துக்கிட்ட பாடம் -1

நான் M.Sc (2002 )படித்து கொண்டிருந்த போது கொடைக்கானல் சுற்றுலா போயிருந்தேன் .நீங்க நெனைக்கற மாதிரி இது ஊரை சுத்தி பார்க்கிற சுற்றுலா இல்ல.நெறைய ஸ்கூல் பசங்களை கூப்பிட்டு வச்சு அடர்ந்த காட்டை கொஞ்சம் சுற்றி காட்டி ,இயற்கையை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை பற்றி ஒரு விழிப்புணர்வு கொடுப்பாரு நம்ம பேராசிரியர் கந்தசாமி அவர்கள்.

எப்பவுமே அவரு ஏரிகரையோரமா தான் டென்ட் போடுவாரு. இந்த பய புள்ளைக எல்லாம் என்ன பண்றாங்க ? ஒழுங்கா வரிசைலே போறாங்களானு  பாக்கவும் ,அவங்க சத்தம் போடாமே இருக்கவும் பேராசியருக்கு உதவியா போறது தான் எங்க வேலை. மொத்தம் நாலு நாள் கேம்ப் அது .

 ஒரு நாள் அதிகாலையிலே எழுந்து ஏரி கரையோரமா நின்னு புகைப்படம் எடுத்துகிட்டு இருந்தேன் . கேம்ப்புக்கு வந்த ஸ்கூல் பசங்களோட வாத்தியாருங்க( டீச்சரம்மாக்கள் 2 பேரு+  வாத்தியாருங்க 2 பேரு ) நாலு பேரும் பேசிக்கிட்டே நடந்து வந்தாங்க. நான் நின்னுகிட்டிருந்த எடத்துலே இருந்து ஒரு ரெண்டடி தள்ளி ஒரு படகு இருந்துச்சு.அதை பார்த்தவுடனே நாலு பேருல ஒரு வாத்தியாரு படகை எடுத்துகிட்டு அப்படியே ஆற்றுலே கொஞ்ச தூரம் உலா போய்ட்டு வரலாமின்னு யோசனை சொன்னாரு .

நான் ஏற்கனவே அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் அப்டிங்கற மாதிரி யாராவது படகுலே கூட்டிட்டு போக மாட்டங்களானு காத்துகிட்டு இருந்தேன். உடனே நான் ஓடி போயி பேராசிரியருக்கிட்டே அனுமதி கேட்டுட்டு வந்து அவங்க ஜோதி-ல ஐக்கியமாயிட்டேன்.ரெண்டு வாத்தியாருங்க துடுப்பு போட்டாங்க. மத்த ரெண்டு டீச்சர்களும் நானும் பேசிக்கிட்டே போனோம். போகும் போது காத்து சரியா அடிச்சதாலே சுலபமா துடுப்பு போட்டாங்க. 

கொஞ்ச நேரம் கழிச்சு பாத்தா ரொம்ப தூரம் வந்துட்டது தெரிஞ்சது. சரி திரும்பி போகலாமின்னு துடுப்பு போடா ஆரம்பிச்சா.. படகு நகர்ந்தா தானே.காத்து எங்களை ஒரு திசையில் தள்ளிகிட்டே இருந்துச்சு. துடுப்பு போட்டுக்கிட்டு இருந்த ஒருத்தர் கையை விரிச்சுட்டாரு ..நம்மளாலே இனிமே போடமுடியாதுன்னு ..உதவிக்கு யாரையாவது கூப்பிடலாமின்னு பாத்தா கரையை விட்டு ரொம்ப தூரம் இருந்தோம் .இப்போ மாதிரி அப்போ ரூவாய்க்கு ரெண்டு செல்போன் எல்லாம் கெடையாது. அப்படியே இருந்தாலும் அங்கே டவர் கெடச்சிருக்காது. மாத்தி மாத்தி எல்லாரும் ஆளாளுக்கு புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க.

அதுலே ஒருத்தர் இப்படி பொலம்பினாரு ."ஒரு கல்யாணம் கூட ஆகாமே இப்படி சாக போறோமேன்னு",.(அப்போ அவருக்கு கல்யாணம் எவ்வளவு கஷ்டமின்னு தெரியலே போல.. கல்யாணம் பண்ணினதுக்கு அப்புறம் இப்படி எல்லாம் கவலை பட தேவை இருக்காது . யோசிக்காமே குதிச்சிருப்பாரு !!ஹைய்யோ ,ஹைய்யோ )..
"அட பாவிகளா நீங்களாவது வேலைல சேர்ந்து நாலு காசு சம்பாரிக்கறிங்க... நான் இன்னும் படிப்பையே முடிக்கலியேடா.உலா போக ஆசைப்பட்டு இப்படி உயிர் போக போகுதே " , இப்படி உள்ளுக்குளே பொலம்பிகிட்டு இருந்தேன். 

அந்த ஏரி ஒரு பதினைந்து அடி ஆழம் இருக்கும். கொடைக்கானல் குளிருக்கு தண்ணில விழுந்தவுடனே ஜல சமாதி தான். நீச்சல் தெரிஞ்சவங்களுக்கே இந்த நெலமை தான்னா .. எனக்கெல்லாம் யாராவது பேப்பர்ல நீச்சலுனு எழுதினாதான் தெரியும் ...இதுல நான் எங்க போயி பிழைக்கறது?
என்னை பத்தி நானே பெருமையா சொல்லிக்க கூடாது தான்.. என்னங்க பண்றது?. நாங்க எல்லாம் கால் நனைக்கற அளவு இருந்த தண்ணிலயே மூழ்கினவங்க. 

ஆனா இவ்வளவு சலசலப்புக்கும் , அந்த படகு கொஞ்சம் கூட அசரலியே..
துடுப்பு போடலேன்னா படகு நகராதே ஒழிய கவிழாது அப்படிங்கறதே எங்க யாருக்கும் அந்த பதட்டத்துலே ஞாபகம் வரலே. கொஞ்ச நேரத்துலே காத்தடிக்கிறது கொறஞ்சது .. அப்படியே ஐலசா எல்லாம் போட்டு,எப்படியோ போராடி ...படகை கரைக்கு கொண்டு வந்து சேத்துட்டோம்.என்ன? ஆசையா போன படகு சவாரி ...ஒன்றரை மணி நேரம் கழிச்சு வர வேண்டியதா போச்சு.

நேரா பேராசிரியர்க்கிட்டே போயி ..சூழ்நிலையை சொன்னேன்..
அவரு உடனே "நானும் பாத்துகிட்டு தான் இருந்தேன்" அப்படினாரு.எனக்கு வந்ததே கோபம். 

"இந்நேரம் அந்த படகு கவிழ்ந்திருந்தா" ...?

"கஷ்டம் தான். யாரையும் காப்பாத்தி இருக்க முடியாது ..காப்பாத்த ஆளுங்க வரதுக்குள்ளே எல்லாமே முடிஞ்சுருக்கும்.ஆனா ...." (என்ன வில்லத்தனம் பாருங்க? )

"அப்போ ஏன் நாங்க கெளம்பும் போதே நீங்க தடுக்கலே" ..

"பொறு .. நான் இன்னும் முடிக்கலே.. ஆனா அந்த படகை பத்தி எனக்கு தெரியும் அது அவ்வளவு சீக்கிரம் கவிழாது .ரெண்டு நாளானாலும் அது மிதந்திட்டு தான் இருக்கும்".
ஹேய் ! என்ன சின்னபுள்ளைத்தனமா .. போ போ போயி பொழப்பை பாரு அப்படிங்கற மாதிரி அவரு எந்திரிச்சு போயிட்டாரு.

இங்கதான் நான் ஒரு விசயத்தை புரிஞ்சுக்கிட்டேன். ஒரு சில விசயங்களை பாத்து தேவை இல்லாமே பயப்படுறதை விட்டேன் . என்னதான் ஏரி ஆழமாகவும் ஆபத்தாகவும் இருந்தாலும் படகை அவர் புரிஞ்சுகிட்ட மாதிரி நாமளும் ஓரளவுக்கு சூழ்நிலையை புரிஞ்சு, நம்ம சக்திக்கு உட்பட்ட அளவு ரிஸ்க் எடுக்கலாமின்னு தெரிஞ்சது.

பெங்களூர்-ல இருந்து ஒவ்வொரு வெள்ளிகிழமையும் தனியா அரசாங்க பஸ்சுலே அதுவும் நைட்டுலே வர்றவங்க போறது ரிஸ்க் தான் .வெள்ளிகிழமை எப்பவும் கூட்டமா இருக்கும் . அதுலயும் நம்மளை மாதிரி வர்றவங்க நெறைய பேரு . காலையிலே இருந்து ஆணி புடுங்கின களைப்புலே தூங்கறவங்க ஜாஸ்தி .யாரும் அந்த இரவு பயணத்தை ஆபத்தாக்க மாட்டாங்க. ஆனா எப்பவும் எந்த பஸ் ஸ்டாண்டுலேயும் எறங்கி தனியா தான் நிக்க கூடாதுங்கிறதை புரிஞ்சுகிட்டேன் ... பஸ்சுக்குள்ளே இருக்கிறது தான் கொஞ்சமாவது பாதுகாப்பு .

எதுக்கு இப்படி தேவை இல்லாத ரிஸ்க் எடுத்துக்கிட்டு? பஸ்சுலே எப்போவும் முன்பதிவு பண்ணி தான் போவேன்னு சொல்றவங்களுக்கு நான் சொல்ல வந்த கருத்தை இப்படி பின் வருமாறு சொல்றேன் கேட்டுக்கோங்க .

For Example- கம்ப்யூட்டர் படிப்பு படிச்சதாலே நெறைய பேருக்கு பங்கு சந்தையை பத்தி நல்ல விதமா தெரியாது . அதுலே ஈடுபடவும் தயக்கம் .ஏன்னா அதுக்கு முன்னாடி அதுலே பணத்தை விட்டவங்க சொல்ற கருத்து தான். ஆனா பங்கு சந்தையை பத்தி அடிப்படை விஷயங்கள் தெரிஞ்சுகிட்டு ,நீண்ட கால முதலீடு பண்ணும் போது பங்கு சந்தையும் ஒரு ஆரோக்கியமான விஷயம் தான் . கண்டிப்பா ஆபத்தான விசயம் கெடையாது.

மக்களே, இதுனாலே நான் சொல்ற கருத்து என்னன்னா ..

"தேவை இல்லாத பயத்தை ஓரம் கட்டி வையுங்க. எந்த ஒரு ஆபத்தான விசயத்திலயும் measurable risk எடுக்கலாம்"

Friday, July 9, 2010

மைக்ரோ யுத்தம்... பொய்

உபயம் : ஆனந்த விகடன் 


சமூகத்தின் எந்த நிலையில், எந்தப் பருவத்தில் இருந்தாலும் நித்தம் நாம் எதிர்கொள்ள வேண்டிய மைக்ரோ யுத்தம்... பொய்!

'நேத்து வீட்ல பவர் கட். அதான் அசைன்மென்ட் முடிக்கலை', 'ரெண்டு நாளா எனக்கு உடம்பு சரியில்லை. அதான் அந்த க்ளையன்ட்டைப் போய்ப் பார்க்க முடியலை', 'ஆபீஸ்ல ஆடிட்டிங். அதான், சாயங்காலம் சீக்கிரம் வர முடியலை!', 'நம்பும்மா, திடீர்னு அந்த சிடுசிடு புரொஃபசர் வந்து ஸ்பெஷல் கிளாஸ்னு சொல்லிட்டார். அதான் லேட்!', 'ஸாரி சார்... பேட்டரி டவுன். அதான் மொபைல் ஸ்விட்ச் ஆஃப் ஆயிடுச்சு!' ஒருநாளில் எத்தனை எத்தனை பொய்கள். ரகரகமாக, விதவிதமாக, வகை வகையாக, அழகழகாக... இந்தப் பொய்களைச் சமாளிப்பது எப்படி, அவை பொய்கள் என்று கண்டுபிடிப்பது எப்படி?
'இது என்ன கேள்வி. பொய் பேசும்போதே கண்டுபிடிக்க வேண்டியதுதானே!' என்கிறார் டேவிட்.ஜே.லீபர் மேன். இவர் எழுதிய Never be lied to again என்ற புத்தகம் ஐந்தே நிமிடங்களுக்குள் ஓர் உரையாடலின் உண்மைத்தன்மையைக் கண்டுபிடிப்பது எப்படி என்று எளிமையாகக் கற்றுக்கொடுக்கிறது. (கொஞ்சம் மாத்தி யோசித்தால், பொய் சொல்லும்போது நாம் எவ்வளவு உஷாராக இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ளலாம்!)

உடல் மொழி பொய் சொல்லாது!

ஒருவரது வார்த்தைகள்தான் பொய் சுமந்து வருமே தவிர, அவரது விரல்கள், தோள்பட்டை, கால்கள், கண்கள்போன்ற உறுப்புகள் எப்போதும் பொய் சொல்லாது. தங்களது உடல் மொழிக்குப் பொய் சொல்லத் தெரியாது என்பது, பாவம் பொய் சொல்பவர்கள் பலருக்குத் தெரியாது. எதிராளியின் உடல் மொழியைக் கணிக்கத் தெரிந்தால், அவரது வார்த்தைகளின் உள்ளார்ந்த அர்த்தத்தை உணர்ந்துகொள்ளலாம்!
உரையாடலின்போது மிகக் குறைந்த அல்லது அறவே தவிர்க்கப்படும் கண்ணுக்குக் கண் தொடர்பு, அலைபாய்ந்துகொண்டே இருக்கும் விழிகள், அடிக்கடி தரை நோக்கித் தாழும் பார்வை... மச்சான் பொய் சொல் கிறார் என்று அர்த்தம். அதுவே அழுத்தம் திருத்தமாக கண்ணுக்குக் கண் உற்று நோக்கி பார்வையை விலக்காமல், இமைக்காமல் பேசுபவர்கள் தங்கள் கூற்றில் இருக்கும் உண்மையை உணர்த்த விரும்புகிறார்கள் என்று அர்த்தம்!
உங்களையே உற்றுக் கவனியுங்கள். பொய் சொல்லும்போது உங்கள் கைகள், விரல்கள் ஆகியவற்றின் அசைவுகள் மிக மிக மினிமம் ஆக இருக்கும். மணிக்கட்டு தரை நோக்கி இருக்கும் அல்லது விரல்களை இறுக்கமாக மூடிக்கொள்வீர்கள். பேன்ட் பாக்கெட்டில் கைகளைப் புதைத்தோ, மார்புக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டோ, ஒரு தற்காப்பு மனநிலையில் இருப்பீர்கள். மாறாக உண்மை உரைக்கும்போது, வானத்தையே அளப்பதுபோல இரண்டு கைகளும் பரந்து விரிந்து உணர்ச்சிகள் காட்டும். உள்ளங்கைகள் மேல் நோக்கி அகலத் திறந்து இருக்கும்!
அமர்ந்திருக்கும்போது, ஒருவர் கால்களை எக்ஸ்போல மடித்துக்கொண்டோ, கைகளை இறுக்கமாகக் கட்டிக்கொண்டோ, உடலின் அருகில் வைத்துக்கொண்டோ இருந்தால், பார்ட்டி தனக்குள் எதையோ பூட்டிக்கொண்டு இருக்கிறார் என்று அர்த்தம். இருக்கை நுனியில் அமர்வது, வசதியாகச் சாய்ந்து அமர்ந்துகொள்ளாமல் ஆகக் குறைந்த இடத்தைப் பயன்படுத்துவது போன்றவைகளும் ரெட் சிக்னல்கள்தான்!
பொய் சொல்பவர் எதிராளியுடன் கை குலுக்குவது, தொட்டுப் பேசுவது, விரல்களைப் பின்னிக்கொள்வது, தோளில் தட்டுவதுபோன்ற உடல்ரீதியிலான தொடர்புகளை அறவே தவிர்ப்பார்கள்!

எக்ஸ்பிரஸ் எதிர்மறைப் பதிலா... உஷார்!

ஒரு கேள்விக்குப் பதிலாக வந்து விழும் வார்த்தைகளில் இருந்தே, அது உண்மையா, பொய்யா என்று கண்டுபிடித்துவிடலாம். 'ஆனந்த், நீ என்னை ஏமாற்றுகிறாயா?' என்று காதலி கேட்டதும், 'ச்சேச்சே, உன்னை நான் எப்போதும் ஏமாற்ற மாட்டேன்!' என்று அவசர அவசரமாக சொன்னால், உள்ளே ஏதோ உள்குத்து என்று அர்த்தம். ஒருவரை சந்தேகித்து நாம் ஏதேனும் கேள்வி கேட்கும்போது, நமது கேள்வியில் இருக்கும் வார்த்தைகளைக்கொண்டே உடனடியாகப் பதில் வந்தால், அதன் நம்பகத்தன்மை கேள்விக்குரியது. கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்... எந்தக் கேள்விக்கும் உடனடியாகப் பதில் அளிக்காவிட்டால், நமது நேர்மை சந்தேகத்துக்கு உள்ளாகும் என்பது நம் அனைவரின் மனதிலும் பதிந்து இருக்கும் பிம்பம். அதனால், நமது நேர்மை சோதிக்கப்படும்போது எல்லாம் உடனடியாகப் பதில் சொல்லத்தான் நாம் விரும்புவோம். அந்த சமயம் உண்மையை மறைக்க விரும்பினால், வேறு வார்த்தைகள் மனதில் தோன்றாமல், கேள்வியில் இருக்கும் வார்த்தைகளுக்கு முன்னரே 'இல்லை', 'அப்படியெல்லாம் கிடையாது' என்று எதிர்மறை அர்த்தத்தில் சொல்வோம். அந்த நெருக்கடித் தருணத்தில் பொருத்தமான பதில் சிக்காததால், உடனடிப் பதிலுக்குத் திண்டாடி கேள்வியையே எதிர்மறையாக மாற்றி சமாளிப்போம். எனவே, இனி உங்கள் கேள்விகளுக்கு எதிர்மறை எக்ஸ்பிரஸ் பதில்கள் வந்துவிழும்போது... அலர்ட்!

பதில் இல்லா பதில்!

விமல் முன்பின் பார்த்திராத ஒரு பெண்ணுடன் போனில் கடலை போட்டுக்கொண்டு இருக்கிறான். 'அப்புறம் செல்லம் நீ அழகியா... பேரழகியா?' என்று கேட்கிறான். அதற்கு அந்தப் பெண், 'நான் தினமும் ஜிம்முக்குச் செல்வேன். எனக்கு ஏரோபிக்ஸ் தெரியும். பல ஆண் மாடல்கள் என்னை டேட்டிங் குக்குக் கூப்பிடுவார்கள்!' என்று அடுக்குகிறாள். ஊன்றிக் கவனி யுங்கள்.. 'நீ அழகியா?' என்ற கேள்விக்கு, 'ஆம்', 'இல்லை' என்று எந்த நேரிடை பதிலும் சொல்லாமல், 'அழகியாகத்தான் இருப்பாள்' என்று விமலை நம்பச் செய்யும் செய்திகளாக அடுக்குகிறாள். இதுதான் பதில் இல்லா பதில். இன்னோர் உதாரணம் பார்ப்போம்...
வாட்டர்கேட் ஊழல் முதல்முறையாகக் கசிந்தபோது, ஹெலன் தாமஸ் என்ற நிருபருக்கும் அமெரிக்க அதிபர் நிக்ஸனின் செய்தித் தொடர்பாளரான ரொனால்டுக்கும் நிகழ்ந்த உரையாடல் இது...
தாமஸ்: "அதிபர் யாரையேனும் பதவி விலகச் சொல்லி, அதற்கு யாரேனும் தங்கள் ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்திருக்கிறார்களா?"
ரொனால்ட்: "நான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் திரு தாமஸ், வெள்ளை மாளிகையின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை!"
தாமஸ்: "ஆனால், என் கேள்வி அதுவல்ல. அதிபர் யாரையேனும் பதவி விலகச் சொல்லி இருக்கிறாரா?"
ரொனால்ட்: "கேள்வி எனக்குப் புரிகிறது. என்னை அதற்குப் பதில் சொல்ல அனுமதியுங்கள். நான் முன்னரே கூறியதுபோலத்தான் வெள்ளை மாளிகையின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இதுவரை எந்த ராஜினாமாக்களும் சமர்ப்பிக்கப்படவில்லை!"
'அதிபர் யாரையேனும் பதவி விலகச் சொல்லியிருக்கிறாரா?' என்ற கேள்விக்கு இறுதி வரை நேரிடையாகவோ, மறைமுகமாகவோ பதில் கிடைக்கவில்லை. ஆனால், பின்னர் வாட்டர்கேட் விவகாரத்தில் என்ன தில்லுமுல்லு நடந்தது என்பது உலகமே அறியும்.
அந்தப் பதிலில்லா பதில்களின் பின்னணி உணருங்கள்!

துணுக்கு : 


சாம் போனில் அழைத்த போது நான் இந்த புத்தகத்தை படித்து கொண்டிருந்தேன் .
"என்னம்மா செய்யறே "?
"அடுத்தவங்க சொல்ற பொய்யை எப்படி  கண்டுபிடிக்கிறதுன்னு  படிச்சிட்டு இருக்கேன் சாம் "
"அது சரி ... செகண்ட் ஸ்டெப்-எ..."
"என்னடா சொல்றே அப்போ முதல் ஸ்டெப் என்ன?"
"நல்ல பொய் பேசி பழகிட்டே. இப்போ அடுத்தவங்க நம்மகிட்டே  பொய் பேசறங்களான்னு கண்டுபிடிக்க தானே படிக்கறே "!!!!!!
ஆஹா கெளம்பிட்டாங்கய்யா கெளம்பிட்டாங்க 

Wednesday, June 23, 2010

லேட்டா போனா

ஆபீஸ்க்கு தினமும் நான் லேட்டா வருவது வழக்கம் .எல்லாரும் 9 மணிக்கு வர சொல்லி பல வழிகளிலே சொல்லி பார்த்தாங்க . மிரட்டியும் பார்த்தாங்க. பயங்கரமா அறிவுரை எல்லாம் கூட பண்ணினாங்க . திருந்துவோமா நாம !!!

பிரச்சனை என்னன்னா ..வேலை அவ்வளவு இருந்தாலும் பரவால்ல . ஆனா ஒன்னுமே இல்லாமே எவ்வளவு நேரம் தான் ஆணி புடுங்கற மாதிரியே நடிக்கிறது ?. கடைசியா appraisal-லே கூட எழுதினாங்க . நான் எதையுமே கண்டுக்கலை.

திடீர்னு ஒரு நாள் நம்ம பக்கத்து சீட்டு பய புள்ளே என்கிட்டே வந்து இப்படி கேட்டுச்சு .
"தினமும் நீ ஏன் லேட்டா வரே"
நான் உடனே சொல்றதுக்கு ஆளு கெடச்ச வேகத்துலே பட்டியல் போட்டேன்

"காலையிலே சமையல் செஞ்சு , பாத்திரம் துலக்கி, பால் வாங்கிட்டு வந்து ,வீடு கூடி , காய் கறி வாங்கி ..."

நான் பேசிக்கிட்டு இருக்கும் போதே

"இதெல்லாம் நீ உன் வீட்டுலே மட்டும் தான் செய்யறியா... இல்லே அக்கம்பக்கத்து வீடுகளிலேயும் போய் செய்யறியா " அப்படின்னு கேட்டுபுட்டான்
ஆகா !!! உட்காந்து யோசிப்பான் போலே இருக்கே ..!!
நான் பதில் எதுவும் பேசாமே , அமைதியா உட்காந்து வேலை பார்க்க ஆரம்பிச்சுட்டேன்.மறு நாள் வழக்கம் போல லேட்டா போனேன்.இந்த பய என்னை பார்த்து, இன்னிக்கு என்னாச்சு அப்படிங்கற மாதிரியே பார்வையை எடுத்து வச்சான் .. நான் உஷாராகிட்டேன் .. ராஸ்கல் யாரு கிட்டே !!!

"ஒன்னும் இல்லே ... இன்னிக்கி ரெண்டு வீடு சேர்த்தி வேலை பார்க்க வேண்டியதா போச்சு அதான் லேட்டு " அப்டின்னு சொல்லிட்டு வேலையை பார்க்க ஆரம்பிச்சிடோமுல்லே !!!!!!!!!!!!!!!

Wednesday, April 28, 2010

என்னத்த சொல்லுறாங்க ?

"ஒருத்தன் எவ்வளவு பெரிய பலசாலியாக இருந்தாலும் ஒரு பெண் பிள்ளையை பெற்று ,கல்யாணம் பண்ணி கொடுத்த பின்னாடி எந்த பிரச்சனை வந்தாலும் சம்பந்தி வீட்டுல போயி ஒரு சுண்டு விரலை கூட அசைக்க முடியாது" .

                                   - சொன்னவர் அய்யாசாமி

"மூத்தோர் சொல்லும் , முதிர் நெல்லிக்காயும் முன்னே கசக்கும் , பின்னே இனிக்கும் "
                                
"மேனாமினுக்கியை கட்டியவனும் கெட்டான் , மேட்டுக் காட்டை உழுதவனும் கெட்டான்"