Wednesday, April 28, 2010

என்னத்த சொல்லுறாங்க ?

"ஒருத்தன் எவ்வளவு பெரிய பலசாலியாக இருந்தாலும் ஒரு பெண் பிள்ளையை பெற்று ,கல்யாணம் பண்ணி கொடுத்த பின்னாடி எந்த பிரச்சனை வந்தாலும் சம்பந்தி வீட்டுல போயி ஒரு சுண்டு விரலை கூட அசைக்க முடியாது" .

                                   - சொன்னவர் அய்யாசாமி

"மூத்தோர் சொல்லும் , முதிர் நெல்லிக்காயும் முன்னே கசக்கும் , பின்னே இனிக்கும் "
                                
"மேனாமினுக்கியை கட்டியவனும் கெட்டான் , மேட்டுக் காட்டை உழுதவனும் கெட்டான்"

Wednesday, February 24, 2010

மனைவி மொழிகள்

  1. ஊரெல்லாம் ஏமாந்து வருவார் ..ஆனால் ஒருவன் பெற்ற மகளை உருப்படியாய் ஏமாற்றுவார். அவர் யார் ?  கணவன்மார் தான்
  2. ஆத்திரப்பட்டு பேசறதாலே அம்மாக்கள் எல்லாரும் கெட்டவங்களா, சண்டைகாரங்களா தெரிவாங்க.. அமைதியா கேட்டுகிட்டு தலைகுனிஞ்சு உட்கார்ந்திருக்கிறதாலே அப்பாக்கள் எல்லாரும் நல்லவங்களா தெரிவாங்க.மக்களே ஏமாந்துராதீங்க ! கொஞ்சம் Flashback பத்தி அம்மாகிட்டே கேட்டு பாருங்க..

ஒரு முரண்பாடு

உன் தலைவலி கூட

ஒரு தலைப்பு செய்தி தான்

நம் வீட்டில் ...

நம் பிள்ளை அழுதால்

ஊரே கேள் நாடே கேள்

அழுவது என் தங்கம் என்று

ஒளிபரப்பே செய்வாய் ....

என் தலையே போனாலும்

அது ஒரு வரி செய்தியாய்

உனக்கு மட்டும் ...!!!

என்னை கவர்ந்த பெண்மொழிகள் - 1

"நாங்க எல்லாரும் படத்துக்கு போகையிலே உன்னை விட்டுட்டு போக மனசில்லே ..இந்த தடவையாவது நீயும் வருகிறாயா "


"வீட்டுலே கேக்கணும் ..அப்படியே கேட்டாலும் விட மாட்டாங்க ... "

"இவ்வளவு நாளா உண்மை தானே பேசினே ...இந்த ஒரே தடவை சின்னதா ஒரு பொய் சொல்லிட்டு எங்களோட படத்துக்கு வாயேன்" ....

"சொல்லலாம் ! ..ஆனா இப்போ சொல்ற பொய் என்னை காட்டி கொடுத்துருச்சுனா இவ்வளவு நாள் நான் சொன்ன உண்மையெல்லாம் பொய் ஆகிடுமே.அதனாலே நான் பொய் சொல்ல போறதில்லே  " -பிரேமா

Monday, February 15, 2010

தூரம் -ஒரு எச்சரிக்கை

பெண்ணே,


ஜாக்கிரதை...

இன்று

உனக்கும் எனக்குமான

இந்த 300 கீ.மீ தூரத்தில்

என்னவெல்லாம் இருக்கிறது தெரியுமா ?


நெட்வொர்க் பிசி,

லோ பேட்டரி ,

நோ பேலன்ஸ்,

அவரவர்க்கான குடும்ப பொறுப்புகள்...

நேரமின்மை,

வேலைப்பளு....

.................................................................

உயிரான ரசனைகள்,

கவிதைதனமான வாழ்க்கை,

குழந்தைத்தனம்

எல்லாம் விட்டு

உயிரற்ற  பொருட்களுக்காய்  ஓடுகிற

எந்திர ஓட்டம்...



வாழ்க்கையின் கட்டாயங்கள்,

வரவுக்கும் , செலவுக்கும் நடுவே தடுமாறும்

சமுதாய அந்தஸ்து ! !



நாளை ....

இவை எல்லாம்

30 செ.மீ இடைவெளிக்குள் வந்து விடும் ....

தயாராக இருப்போம்


(இதை எழுதி 5 வருடங்கள் ஆகிறது - 2005)

Tuesday, January 12, 2010

அனுபவத்தில் கண்ட பழமொழி

(இது சத்தியமாக கவிதையல்ல )

வாரத்தின் ஐந்து வேலை நாட்கள்
அலுவலகம் கிளம்பும் அவசரத்தில்
பட்டியலிட்டபடி வீட்டு வேலைகள்
அழுக்கு துணிகள் துவைத்து
அரையும் குறையுமாய்
என் வீடெல்லாம் சுத்தம் செய்து..

சனி ஞாயிறு
சொந்த ஊரில்
விடுமுறை கழிக்க ..

முதல் நாள் அம்மா வீட்டில்
இரவில் பயணித்த களைப்பு
சிறிது நேரம்  ஓய்வெடுத்து ..
கோவிலுக்கு போய்
கொஞ்சம் பேசி ,சிரித்து ,கவலைப்பட்டு
வீடெல்லாம் துடைத்து
துணி துவைத்து ...


மறு நாள் மாமியார் வீடு
ஒட்டடை அடித்து ,
மின் விசிறிகள் துடைத்து
சமையலறை சுத்தம் செய்து ,
உடலும் உள்ளமும்  அலுத்து தூங்கையில்
என் நிலையை நினைத்து
சின்னதாய் ஒரு சிரிப்பு வந்தது
உழுகிற மாடுகள் பரதேசம் போனாலும்
பெரும்பாலான நேரங்கள்
உழவை (து)மறக்கவொரு வாய்ப்பு இருப்பதில்லை


(இதை நான் ,என் அம்மா, மாமியார் சார்பாக எழுதி இருக்கிறேன் ...
அவர்கள் பழகி விட்டார்கள் ... நான் ஆரம்பத்தில் இருக்கிறேன்
வேலை செய்வது என் கவலை அல்ல
சிறிது ஓய்வுக்கு ஏங்கும் உள்ளம்  )

Thursday, January 7, 2010

படித்ததில் பிடித்தது - ஜென் கதை

பல போர்களை வென்ற ஒரு ராணுவத் தளபதி, தன் வீட்டில் பழமையான ஒரு கண்ணாடிப் பொருளைச் சுத்தம் செய்துகொண்டு இருந்தார். அந்தப் பொருள் அவர் கையில் இருந்து நழுவிவிட்டது. ஒருகணம் தவித்துப்போன அவர் அது தரையைத் தொடும் முன் எப்படியோ பிடித்துவிட்டார். அவரிடம் இருந்து பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது.

"எத்தனையோ ஆயுதங்களுக்கு எதிராக நின்றபோதுகூட பதைக்காதவன் இச்சிறு பொருளுக்காக ஏன் பதைத்தேன்?" என்று ஒருகணம் யோசித்தார் தளபதி.

அவர் முகத்தில் திடீர் என்று ஒரு புன்னகை முளைத்தது. அந்தக் கண்ணாடிப் பொருளை வீசி எறிந்து உடைத்தார்.

விளக்கம்:

"வாழ்க்கையின் பெரும்பான்மையான தருணங்களில் நீங்கள் ஓர் உயிராக மட்டும் உங்களைக் கருதினால், எந்தப் பிரச்னையும் இல்லை. ஆண், பெண் என்ற அடையாளங்களுடன் செயல்படுகையில்கூட சில கட்டாயங்களை நீங்களே விதித்துக்கொண்டுவிடுவீர்கள். சொல்லப்போனால், உங்களை ஆண் என்றோ, பெண் என்றோ அடையாளப்படுத்தி, அதன் மீது உங்கள் வாழ்க்கையை அமைக்கக்கூட அவசியம் இல்லை.

எல்லா அடையாளங்களையும் தாண்டி இருக்கையில்தான், உங்கள் திறன் உச்சத்தில் செயல்படுகிறது. குறுகலான வரையறைகளைத் தாண்டி காலெடுத்துவைக்கையில், நினைத்துப்பார்க்காத விஷயங்கள்கூட சாத்தியமாகின்றன.

எல்லை இல்லாத உயிரைப்போய் உடலுடன் அடையாளப்படுத்திக்கொள்கிறீர்கள். அட, மனதில் தோன்றும் எண்ணங்களுடன்கூட உங்களுக்கு அடையாளம் வந்துவிட்டது. நீங்கள் உருவாக்கிய உணர்வுடன்கூட அடையாளம் பிறந்துவிட்டது.

எதனுடனும் உங்களை அடையாளப்படுத்திக்கொள்கையில், வேதனைகள்தாம் வரும். உங்கள் பதவி, நீங்கள் கட்டிய வீடு, உங்கள் உடைமைகள், நடுவில் வந்த உறவுகள், நண்பர்கள் என்று எல்லாவற்றுடனும் ஓர் அடையாளம் உங்களைப் பிணைத்துப்போடுகிறது. அந்த அடையாளங்களுடன் சிக்கிப் போராடுகையில் தேவையற்ற பதைப்பு வரத்தான் செய்யும்.

இதேரீதியில் ஒரு சிறு கண்ணாடிக் கோப்பையுடன்கூட தன்னைத் தொடர்புபடுத்தி அடையாளப்படுத்திக்கொண்டுவிட்டதால் ஏற்பட்ட பதைப்பை உணர்ந்த தளபதி, அதில் இருந்து விடுபடும்விதமாக அதை வீசி எறிந்து நொறுக்குகிறார்.

நீங்கள் வீசி எறிய வேண்டியது, கண்ணாடிப் பொருட்களை அல்ல; உங்கள் அடையாளங்களை!"