Wednesday, September 9, 2009

விளம்பரம்(படித்ததில் பிடித்தது)

விளம்பரம் என்பது தற்பெருமை பேசுதல். தன்னை அறியார் முன் தற்பெருமை பேசுதல் தப்பில்லை என்கிறது தமிழ்ப் பாடல். முன்பு, சினிமா கொட்டகைகளில் விளம்பர ஸ்லைடுகள் போட்டனர். பின்பு, அதுவே குறும்படங்களாக மாறின. மாத, வார, தின இதழ்கள் பொருட்களை, கடைகளை, சேவையை விளம்பரப்படுத்தின. அரசாங்கங்கள், தமது சாதனைகளை முழுப் பக்க விளம்பரங்கள் செய்கின்றன.விளம்பரம் செய்தாலன்றி,சாதனைகளை மக்கள் தெரிந்துகொள்ள மாட்டார் போலும்.இன்னும் விசித்திரம்,மாநில அரசுகள் மாற்று மாநிலப் பதிப்புகளில் விளம்பரம் செய்வது.

பின்பு சின்னத்திரை ஊடகங்கள் வந்தன. சோப்பில் தொடங்கி சூப்பு வரை யாவும் விளம்பரமாயின. இன்று விளம்பர உத்திகளாக, நாட்டியம், நாடகக் காட்சி, சிறுகதை, கவிதை வரி, சர்க்கஸ், மாயாஜாலம், விலங்கு, பறவை, பெண் என யாவும் பயன்படுத்தப்படுகின்றன. கமர்ஷியல் பிரேக் என்றொரு தாய் தமிழ்ச் சொல் மொழிக்கு அறிமுகமானது.
இந்த விளம்பரங்கள் யாவும், 'வாங்கு வாங்கென வாங்காவிட்டால் தூங்கு' என்கின்றன. மும்பையில் சிறு தொழிற்சாலை ஒன்றில் பண்டகக் காப்பாளனாகச் சில காலம் பணிபுரிந்தேன். மார்வாரி முதலாளிகளுக்கு உறவினான நாத்மல் பஜாஜ், தரக்குறைவான பால் பேரிங்குகளை வாங்க என்னிடம் நச்சரித்துக்கொண்டு இருந்தான். நான் தொடர்ந்து மறுத்துக்கொண்டு இருந்தேன். வழக்கு மேலிடத்துக்குப் போனபோது, முதலாளி சொன்ன வார்த்தை, ''அரே! உனது பொருள் தரமாக, விலை நியாயமாக இருந்தால், அங்கு சிபாரிசுக்கு எங்கே இடம்?'' ஆனால், இன்றைய விளம் பரங்கள் உங்களது தேவைக்குச் செய்யப் படுவன அல்ல. உங்களிடம் தேவையை ஏற்படுத்துவது... தேவையற்ற பொருளை வாங்கத் தூண்டுவது... வாங்காவிட்டால், தன்னை மலிவான மனிதனாக உணரச் செய்வது, வாங்க நெருக்குவது. இதில் ஒரு வன்முறையும், திமிரும், அராஜகமும் இருக்கிறது என்பதை மக்கள் உணர்வது இல்லை. இன்னும் சொன்னால், பெரும்பான்மையான இன்றைய விளம்பரங்கள் 'ஈரத் துணி போட்டுக் கழுத்தறுப்பது!' பயன்பாட்டுப் பொருட்களைத் தயாரிப்பவர் தொலைக்காட்சி விளம் பரங்கள் மூலம், ஏ.கே 47 கொண்டு மிரட்டுகிறார்கள், 'வாங்குகிறாயா... சுடவா?' என்று.
குழந்தைகள் நல்ல பாலும், பழங்களும், காய்களும், கீரையும், பருப்பு வகைகளும் சாப்பிட்டால் போதும். எந்த ஊட்டச் சத்துபானமும்டானிக்கு களும் தேவை இல்லை என்கிறார்கள் குழந்தைகள் நல மருத்துவர்கள். பேரும், புகழும், பணமும் அடைந்த பிரபலங்கள் அனைத்து ஊட்டப் பானங்களுக்கும் மாடலிங் செய்கிறார்கள். உண்மையில், அவர்கள் யாரும் தமது பால்ய காலத்தில் அப்பானங்களைக் கண்டதும் இல்லை, கேட்டதும் இல்லை.

எனது தம்பி மகன் நாகலிங்கம், சிங்கப்பூரில் இருந்து அவனது தாத்தா கொடுத்து அனுப்பும் இளஞ்சிவப்பு வெனீலா வாசனையுடன் சம்பா தவிடு போலிருக்கும் ஊட்டச் சத்து மாவைப் பாலில் கலக்கிக்கொண்டு என்னிடம் சொன்னான் ஒரு நாள், 'பெரீப்பா, எனக்கு இந்தத் தவிட்டுப் பாலிலேதான் கண்டம்' என்று.

ஆனால், பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கோடிக்கணக்கில் லாபம் ஈட்ட வேண்டியதிருக்கிறது. மூலப் பொருள் எனப் பார்த்தால், கேழ் வரகு, சர்க்கரை, கொக்கோ, பால் பொடி, தாவரக் கொழுப்பு என்றிருக்கும்.தாய்ப் பாலுக்கும் பசும்பாலுக்கும் எதுவும் மாற்று இல்லை.
உலகில் வைட்டமின் என்று எங்கும் தனியாகப் பயிரிடுவதில்லை. வெட்டியோ, சலித்தோ எடுக்கப்படுவதும் இல்லை. பாலில், பழங்களில், காய்களில், பருப்புகளில், வைட்டமின் இருக்கிறது. அவ்வளவுதான். குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். சுறுசுறுப்பாக, புத்திசாலித்தனத்துடன் இருக்க வேண்டும். குழந்தை வளர்ப்பு என்பது வெள்ளைப் பன்றி வளர்ப்பதல்ல. ஆனால், விளம்பரங்கள் நம்மைக் கறிக் கோழி வளர்க்கவே தூண்டுகின்றன.

உற்பத்திச் செலவில் பாதி விளம்பரச் செலவு. பத்து ரூபாய் பானத்துக்கு ஒருவன் மலை உச்சியில் இருந்து குதிக்கிறான், ஹெலிகாப்டரில் இருந்து சாடுகிறான். விரைவுப் படகில் மூழ்குகிறான், உயிரைப் பொருட்படுத்தாமல். இதென்ன விளம்பர உத்தி? ஒரு குளிர்பானத்துக்காக பருவப் பெண் பிச்சாடனர் பின் போகும் ரிஷி பத்தினி போல ஓடுகிறாள். ஊட்டப் பானம் குடித்துவிட்டு பேட்ஸ்மேன் அடிக்கிற பந்து சூரியனைத் துளைத்து ஊடுருவிப் போகிறது.
சிறுவர் மனங்களில் இயற்கையான முதிர்ச்சியை மறக்கடித்து, முட்டாள்தனமான கற்பனைகளைப் பொறுப்பற்றுத் திணிக்கின்றன விளம்பரங்கள்.
நகரப் பேருந்தில், ஸ்லீவ்லெஸ் உடையணிந்த இளம் பெண் கையைத் தூக்கிக் கம்பியைப் பிடித்தவாறு பயணம் செய்கிறாள். பக்கத்தில் நிற்கும் வாலிபன் அருவெறுத்துக் குமட்டுகிறான். எனவே, நாற்றம் மறைக்கத் தெளிப்பான் உபயோகியுங்கள். நமக்கு இரண்டு கேள்விகள் எழுகின்றன. இளம் பெண்கள் குளிக்க மாட்டார்களா? வாலிபன் அங்கு போய் ஏன் முகத்தை நுழைக்கிறான்?
டால்கம் பவுடர் பூசிய பெண் பின்னால், கார்த்திகை மாதத்து நாய் போல் வாலிபர் பட்டாளம் திரிகிறதாம். குறிப்பிட்ட பற்பசைக்கு வாய் நாற்றமில்லை. மற்றெந்தப் பற்பசை உபயோகித்தாலும், துர்நாற்றம், கிருமிகள், பற்சொத்தை என வாய்விட்டுச் சிரிக்க இயலாது.
அணிந்திருக்கும் ஜீன்ஸ் மாதக்கணக்கில் கழற்றப்படாமல் இருந்தும் துவைப்பதற்குக்கூட அதைக் கழற்ற மனமின்றி, தானே வாஷிங் மெஷினில் இறங்குகிறான் ஒருத்தன்.
பெட்ரோல் பங்குக்கு வழி கேட்க நேபாளச் சிறுவனை, 'அநேகாஞ்சா' என்று அழைக்கிறாள் வண்டியோட்டி. தம்மைக் காஞ்சா என்று அழைப்பதை நேபாளிகள் விரும்புவது இல்லை என்ற அறிவுகூட இல்லாமல். எதைச் செய்தேனும் தம் பொருள் விற்க வேண்டும். காட்டியும் கொடுக்கலாம், கூட்டியும்கொடுக் கலாம். தயாரிப்புச் செலவு 3 ரூபாய், அட்டைப் பெட்டி 3 ரூபாய், விளம்பரச் செலவு 3 ரூபாய், கமிஷன் 3 ரூபாய், லாபம் 6 ரூபாய் என்று நடக்கிறது வியாபாரம்.
20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாட்டில் எவரும் நூடுல்ஸ் கேள்விப்பட்டது இல்லை. இன்று, பள்ளி மாணவருக்கு அது பால் மாட்டுக்குப் புண்ணாக்கு போல்!
1965-ல் கல்லூரி வகுப்பறைகளுக்கு வந்து நாலணா விலையுள்ள குளிர்பானக் கூப்பன்களை இலவசமாக வழங்கினார்கள். இன்று வீடுகளில், அலுவலகங்களில், விருந்துகளில், பயணங்களில், கோடிக்கணக்கான லிட்டர் குளிர்பானங்கள் குடித்து சிறுநீராகக் கழிகின்றன.
இந்தியா எனும் நாடே சந்தையாகிப் போயிற்று இன்று. யாவரின் வீட்டு முன்னறைகளும் சந்தைக் கூவல்களின் திடலாகிப் போயிற்று.
எந்தத் தெளிப்பானும் உடல் நாற்றத்தை இல்லாமல் ஆக்குவது இல்லை. சற்று மறைக்கிறது அவ்வளவே. வாய், உடல் நாற்றங்களுக்கு மருத்துவப் பரிகாரங்கள் உண்டு. தினமும் குளிக்கவும், இரண்டு வேளை பல் துலக்கவும் வேண்டும் என்று சொல்வது அவசியம் இல்லை. புண்ணுக்குப் புனுகு பூசுவது மருத்துவமும் அல்ல!
சமீபத்தில் காட்டப்படும் மற்றொரு விளம்பரம். விபத்தில் அடிபட்டு கை கால்களை அசைக்க முடியாமல் மருத்துவமனையில் கிடக்கிறான் வாலிபன். அழகிய, ஒல்லியான, உயரமான செவிலி மருந்து கொடுக்க வருகிறாள். முன் ஏற்பாடு செய்தபடி செல்போன் ஒலிக்கிறது. செவிலி செல்போனை எடுக்க வாலிபனின் உள்ளாடைக்குள் கைவிட்டுத் துழாவுகிறாள். எத்தனை கேவலமான புத்தி இருந்தால், மருத்துவச் செவிலிப் பெண்ணை வைத்து இவ்விதம் விளம்பரப் படமெடுக்கத் தோன்றும்?
இந்திய விளம்பரங்களைப் போன்று பெண்களை வேறெவரும் இத்தனை ஆபாசப்படுத்துவதில்லை. பிஸ்கெட் பொட்டலத்தை ஒலியுடன் கிழிக்கிறான் 14 வயது மாணவன். அந்தச் சத்தம் தனது கீழாடை கிழிந்ததன் ஒலியோ என ஐயுற்றுக் குனிந்து பின்புறம் தடவுகிறாள் சக மாணவி. நமது முன்னறையில் கொண்டுவந்து விளம்பரதாரர்கள் பீத்துணி அலசுகிறார்கள். நமக்கோ, நாசி எனும் புலனே நசித்துவிட்டது.
கற்பனைச் செறிவுள்ள... பண்பாட்டுக் கூறுள்ள நல்ல விளம்பரங்களும் உண்டு. இரு சக்கர வாகனத்துக்கான விளம்பரம் ஒன்று. ஆண்டுகள் சென்ற பின் காதலியின் வீடு தேடி அலைகிறான் நவயுவன். வழியில், சிறு நாய்க்குட்டி ஒன்று கிடைக்கிறது. அதையும் தூக்கிக்கொண்டு தேடுகிறான். கண்டுபிடித்துக் கதவைத் தட்டும்போது, தனது மகனுடன் வந்து கதவைத் திறக்கிறாள் மணமாகிவிட்ட காதலி. நாய்க்குட்டியைப் பையனுக்குப் பரிசளித்துத் திரும்புகிறான். காண்பவருக்கு மென்முறுவல் ஏற்படுத்தும் வாகன விளம்பரம் அது.
தொலைத் தொடர்பு நிறுவன விளம்பரம் ஒன்றில் சிறுமியைப் பின் தொடரும் நாய், ஓர் அற்புதமான விளம்பரம். இந்திய - பாகிஸ்தானிய எல்லையில், கம்பி வலைகளுக்கு நடுவே கால்பந்தாடும் சிறுவர்கள், மற்றொரு மனிதநேயமுள்ள விளம்பரம்.
முன்பு பெயின்ட் கம்பெனி விளம்பரம் ஒன்று. பச்சைக் காம்புடைய நீண்ட சிவந்த மிளகாய்ப் பழம் மாத்திரம் பேனரில். கீழே ஒரு வாசகம், 'எங்கு நிறத்தைக் கண்டாலும், எங்களை நினையுங்கள்!' என்று பெயின்ட் கம்பெனியின் பெயர்.
நல்ல விளம்பரங்கள், மலர்களை, குருவிகளை, விலங்குகளை, அருவிகளை, மரங்களை, மீன்களைக் காட்டுகின்றன. ஆனால், பெண் உடல் என்பதை விளம்பரத்துக்கான விலைமதிப்பற்ற பண்டம் எனக் கருதுகின்றன பல பன்னாட்டு நிறுவனங்கள். இடுப்பும், தொப்புள்குழியும், அக்குளும், விளம்பர சாதனங்களாகப் படைக்கப்பட்டவை அல்ல. பம்பரம் விடுவதற்கும், ஆம்லெட் போடுவதற்கும் சினிமாவில் பயன்படுவதைப் போன்று.
விளம்பரங்கள் தவறானவை என்பதல்ல!
ஆனால், பெண்களையும் குழந்தைகளையும் கேவலப்படுத்துவதற்குப் பயன்படுத்துவதை எங்ஙனம் நமது பண்பாட்டுக் குடியிருப்புகள் பார்த்துக்கொண்டு இருக்கின்றன?
புகைக்கும் மதுவுக்கும் விளம்பரங்கள் கூடாது எனக் கூறும் அரசாங்கம், நமது தாயரை, தமக்கையரை, தங்கையை, தாரங்களை தம் மக்களைக் கேவலப்படுத்துவதை எவ்வாறு ஏற்றுக்கொள்கிறது? பொய்யும் வழுவும் தோன்றிய பிறகாவது, சமூகத் தலைவர்கள் இலக்கணம் வகுக்க மாட்டார்களா?
பெண் விடுதலைக்கும் பெண் உரிமைக்கும் எவ்வளவு நீண்ட உரைகள் ஆற்றுகிறோம்? கால் நிர்வாணத்தில் சோப்புத் தேய்த்துக் குளிப்பதை எத்தனை நாட்கள் காட்டிக்கொண்டே இருக்கப்போகிறோம்?
3 வயதுக் குழந்தை பார்க்கும் டி.வி. சேனல்களில் சானிடரி நாப்கின்களை எத்தனை முறை காட்டுவீர்கள்?
சிறைப்பிடித்து வைத்திருக்கும் சீதையை விட மறுக்கும் ராவணனை இகழ்ந்து கும்பகர்ணன் பேசுவதாக கம்பனில் ஒரு பாடல். 'பேசுவது மானம், இடை பேணுவது காமம், கூசுவது மானுடரை, நன்று நம் கொற்றம்' என்று வரும்.
ஆம், நன்றே நடக்கிறது நமது வெண்கொற்றக் குடையும், பட்டத்து யானையும், செங்கோலும், முரசும், அரச புரவியும்!

No comments: