என் சின்ன சின்ன ஆசைகள் என்னவென்று கேள் ?
எப்போதாவது நிறைவேற்று ...!!!!
நான் யாரென்று தெரியாமலே
என்னோடு வாழ்ந்து மடிந்து விடாதே
நான் நானாக இருக்கிறேன்
எனக்காய் தோன்றினால் அன்பு செய்வேன்
அல்லால் அமைதியாய் இருப்பேன் என்கிறாய்
நானும் நானாக இருந்துவிடட்டுமா
நீ தாங்குவாயா???
என்னால் முடிகிறதோ ,முடியவில்லையோ எனக்காக நீ செய்கிறாயோ ,இல்லையோ
உனக்கான கடமையை நிறுத்தியதே இல்லை
உனக்கு பிடித்தது போல் செய்கிற சமையல் விட்டு
எனக்கு பிடித்ததை
ஒரு முறை கூட நான் சமைத்ததில்லை
நானாக இருப்பது என்னவென்று உனக்கு தெரியுமா?
அவசியம் இல்லாமல்
உன் கட்டளையை ,கருத்தை நான் மறுத்ததில்லை
அவசியங்கள் இருந்தும்
உன்னை கட்டாயப்படுத்தியதில்லை
உனக்கு முன்னால்
நான் நானாக இருக்க
அறிந்தோ அறியாமலோ
ஒரு நிமிடமும் அனுமதிக்க பட்டதே இல்லை
அதையாவது தெரிந்து கொள் ! !
பொய்களை மன்னித்து கொண்டிருக்கிறேன்
போலியான சமாதானங்களை ஏற்று கொண்டிருக்கிறேன்
உன்னால் செய்ய முடிந்தும்
என் மீது சுமத்தபடுகிற
உனக்கான பொறுப்புகளை
எந்த கேள்வியும் இல்லாமல் ஏற்று கொண்டிருக்கிறேன்
உன்னை சேர்ந்தவர்களின் வார்த்தைகள்
உனக்கு கிண்டலாய் ..
எனக்கு மட்டும் வேதனையாய்
எத்தனை விமர்சனங்கள் ,அவமானங்கள் ?
யாரையும் எதிர்த்து கேள்விகள் கேட்டதில்லை
என் மன போராட்டங்களை மீறி
உன்னிடமும் புகார்கள் சொன்னதில்லை எப்போதும்
எனக்காக பரிந்து பேசவும் உன்னை அழைத்ததில்லை
உன் கண நேர புன்னகைக்காக -காத்திருந்து
நான் பணிவிடை செய்வது உனக்கு பிடிக்கையில்
தேர்தல் நேரத்து அரசியல்வாதியாய்-எனக்கு
தேறுதல் சொல்ல கூட
உனக்கு நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது
எனக்கு என்ன வேண்டுமென்று கேட்காத
உன் அலட்சியத்தை
எல்லாவிதத்திலுமாய் பொறுத்து கொண்டிருக்கிறேன்
கால் இல்லாத நாற்காலியில் கூட
ஆளிருக்கிற தெம்பில் ஆடி கொண்டிருக்கிறாய்
பல நேரங்களில் -உனக்கும் பிறரின் நடிப்பு பிடித்திருக்கிறது
பொய்யான புகழ்ச்சி ரசிக்கிறாய்
நாயகனாய் நீ கொண்டாடப்படும் நாடகங்கள் பிடித்திருக்கிறது
உண்மை மட்டுமே முகம் சுளிக்க வைக்கிறது
பசிக்கும் ,ருசிக்கும் ,பணிவிடைக்கும்
மனைவியை அழைத்த மகோன்னதம் போதும்
முகத்தை பார்க்காமலே கூடி
குழந்தையும் பெற்று ,
தலைமுறை வளர்த்த தனிபெருமை போதும்
காதலையும் ஒரு கடமையென செய்ய
போதிக்க வேண்டி இருக்கிறது
மாற்றத்தை வேண்டி எழுதவில்லை நான்
எந்த துன்பமும் எளிதில் பழகி விடுகிறது எனக்கு
வருடங்கள் கழிந்தும்
உன் வாழ்வில் பாதி நானென்பதை தெரியாமலே
என்னோடு இருந்து ...மடிந்து விடாதே !!